உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூலம், கடந்த ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வரும் “பள்ளிச்சீருடை - பாடக்குறிப்பேடுகள் ஒருங்கிணைந்த இலவச வினியோகத் திட்ட”த்தின் கீழ், வரும் புதிய கல்வியாண்டிலும் இணைந்து செயல்பட, ஜெய்ப்பூர் காயல் நல மன்ற (ஜக்வா) பொதுக்குழு தீர்மானித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது ஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தின் (ஜக்வா) பொதுக்குழுக் கூட்டம் எம் மன்றத்தின் துணைத்தலைவர் ஹாஜி ஏ.மஹ்மூத் ஹஸன் தலைமையில், ஹாஜி எம்.எம்.ஜஹாங்கீர் அவர்களின் இல்லத்தில், 15.01.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு நடைபெற்றது.
நமதூரைச் சார்ந்த ஹாங்காங்வாழ் ஹாஜி கே.எஸ்.முஹம்மத் நூஹ், ஹாஜி எஸ்.டி.எம்.ஷாஃபிஈ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மன்ற துணைச் செயலாளர் ஹாஃபிழ் முஹம்மத் ஸாலிஹ் கிராஅத் ஒதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மன்ற செயலாளர் ஹாஜி எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர் என்ற அபூ அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்தின் நோக்கம் மற்றும் மன்றத்தின் அண்மைச் செயல்பாடுகள் குறித்து, மன்ற ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எம்.ஏ.செய்யித் முஹம்மத் விவரித்துப் பேசினார். பின்னர், நகர்நலன் குறித்த உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து, தலைவர் அனுமதியுடன் பின்வரும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - இக்ராஃ மூலம் கல்வி உதவித்தொகை:
பட்டப்படிப்பு மாணவ-மாணவியருக்காக இக்ராஃ கல்விச் சங்கம் மூலம் வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், வரும் புதிய கல்வியாண்டில் ஜக்வா மன்றத்தின் சார்பில் ஒரு மாணவருக்கு அனுசரணையளிப்பது என்றும், அதற்கான மூன்று வருட முழுத்தொகையாக ரூபாய் பதினைந்தாயிரம் தொகையை இக்ராஃவுக்கு அனுப்பி வைப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2 - பள்ளிச்சீருடை, பாடக்குறிப்பேடுகள் ஒருங்கிணைந்த இலவச வினியோகம்:
இக்ராஃ மூலம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும், பள்ளிச்சீருடை - பாடக்குறிப்பேடுகள் ஒருங்கிணைந்த இலவச வினியோகத் திட்டத்தின் கீழ், சென்ற ஆண்டைப் போல நடப்பாண்டிலும் ஜக்வா இணைய தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 3 - புதிய நகர்மன்றத்திற்கு வாழ்த்து:
அண்மையில் நடைபெற்று முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு எம் மன்றம் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு, நகர்நலப் பணிகளில் இணைந்து செயலாற்றி, நமதூரை முன்மாதிரி நகராட்சியாக்கிடுமாறு அவர்களைக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 4 - மருத்துவ உதவி:
மருத்துவ உதவி கோரி மன்றத்தால் பெறப்பட்ட மனு பரிசீலிக்கப்பட்டு, அவ்வகைக்காக ஐந்தாயிரம் ரூபாய் உதவி வழங்க தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மவ்லவீ எம்.டி.அபுல்காஸிம் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு, ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
Y.H.M.ஷாஹுல் ஹமீத்,
பொருளாளர்,
ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா).
செய்தி திருத்தப்பட்டது. @ 24.01.2012 - 15:49hrs) |