“களையிழந்து காணப்படும் காயல்பட்டினம் கடற்கரை! கவனம் செலுத்துமா நிர்வாகம்?” என்ற தலைப்பில் இன்றைய தினத்தந்தி நாளிதழில் செய்திக்கட்டுரை பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது:-
கடற்கரை
இந்தியாவில் இஸ்லாமிய வரலாற்றில் சிறப்பானதோர் இடம்பெற்றுள்ள ஊர் காயல்பட்டினம். இவ்வூரில் இறைநேசச் செல்வர்களும், திருமறை விரிவுரையாளர்களும், அரபு மொழி வல்லுனர்களும், தமிழ்மொழி பெரும் புலவர்களும் வாழ்ந்து சிறப்பு சேர்த்துள்ளனர்.
உப்புக்கு பெயர் பெற்ற தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரின் வடக்கே நான்கு மைல் தொலைவில் கடலோரமாக அமைந்து இருக்கிறது காயல்பட்டினம். முன்பு காயல் எனவும், தென்காயல் என்றும், பவுத்திர மாணிக்க பட்டினம் என்றெல்லாம் அழைக்கப்பட்டு, தற்போது காயல்பட்டினம் என்ற பெயர் பெற்று விளங்குகிறது. இந்த நகரம் 5000 ஆண்டுகள் தொன்மையும், பெருமையும், சிறப்பும் கொண்ட நகரமாகும்.
காயல் நகரின் வளர்ச்சி
தென்வங்கக் கடலோரம் தூத்துக்குடி மாவட்டத்தின் கிழக்கே அமைந்து உள்ளது காயல்பட்டினம் நகரம். 1886-ல் கிராம பஞ்சாயத்தாக உருவாகி, 1982-ல் நகர பஞ்சாயத்தாக உயர்ந்து, 1.10.2004-ல் மூன்றாம் நிலை நகராட்சியாக வளர்ந்து, தற்போது 2-ம் நிலையாக நடைபோட உள்ளது. இந்த நகரில் 50 ஆயிரம் மக்கம் வாழ்ந்து வருகின்றனர். 18 உறுப்பினர்களைக் கொண்ட நகரசபையின் தலைவராக ஐ.ஆபீதா உள்ளார்.
இந்நகரம் தமிழகத்தில் மட்டுமல்ல; இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப் படுவதற்கு ஒரு காரணம் உள்ளது. இங்கு போலீஸ் நிலையம், திரையரங்கம், மதுபானக் கடைகள் கிடையாது. நகரைச் சேர்ந்த பெரும்பாலான ஆண்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்கு பொழுதுபோக்கு என்று எந்த ஒரு இடமும் கிடையாது. அப்படி இருக்கையில் அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த ஒன்றுதான் கடற்கரை.
கடந்த 1954-ம் ஆண்டு இந்த நகருக்கு வந்த முன்னாள் முதல் அமைச்சர் ராஜாஜி இந்த கடற்கரையைப் பார்த்துவிட்டு, “இதுபோல் அழகான இயற்கை மணல்பரப்பு மாகாணத்தில் வேறு எங்கும் இல்லை. இது சென்னை மெரினா கடற்கரை போன்று அழகுடன் அமைந்து உள்ளது” என்று வியந்தார். முன்னாம் பிரதமர் ஜவகர்லால் நேரு தான் எழுதிய டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற புத்தகத்தில் காயல்பட்டினம் ஒரு துறைமுக நகரம். வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்தது என்று பெருமைபட தெரிவித்து உள்ளார்.
பொழுதுபோக்கு கடற்கரை
வார இறுதி நாட்களில், மாலை நேரங்களில் எல்லாக் கடற்கரை பகுதிகளிலும் திரளான மக்கள் கூட்டம், ஊர்ந்து செல்லும் வாகனங்கள், ஆடி, ஓடி விற்பனை செய்யும் வியாபாரிகள், கொட்டிக் கிடக்கும் குப்பைக் கூழங்கள் பொதுவாக காணப்படும் காட்சிகளாகும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்து உள்ள காயல்பட்டினம் கடற்கரை இந்த பொதுவான நடைமுறைக்கு விதிவிலக்கல்ல. ஆனால் அந்த கடற்கரைக்கு செல்லாதவரை, அதன் கவின்மிகு காட்சியையோ அதன் பழம்பெரும் வரலாற்று பெருமையையோ புரிந்து கொள்ள முடியாது. கடலை அணைத்து நிற்கும் இந்த அழகிய பட்டினத்துடன் பழம்பெரும் வரலாறு, தொல்பொருள் ஆய்வு, மாபெரும் மார்க்கம் பின்னிப் பிணைந்து கிடக்கிறது.
அலைகள் வரவேற்கும் காயல்
ஊரில் காணப்படும் குறுகிய பாதைகள், அகன்ற தார் பாதையுடன் இணைந்து, படிப்படியாக விரிந்து, பரந்து கிடக்கும் கடற்கரை பகுதிக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. கடற்கரை நுழைவில் பெரிய வரவேற்பு வளைவு ஒன்று நம்மை வரவேற்று நிற்கிறது.
அதைக் கண்டதும் மிகவும் நன்றாக பராமரிக்க பட்டு வரும் கடற்பகுதி என்பதை நம்மால் உணர முடிகிறது. உள்ளே நுழைந்ததும் பரவசமூட்டும் பெருங்கடல் நமக்கு காட்சி அளிக்கிறது.
முந்தைய நிலை
10,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமர்வதற்கும், இன்ப பொழுதுபோக்கும் வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தித் தந்துள்ளது. அழகிய முறையில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் நடந்து செல்லும்போது பாங்குடன் காட்சி தரும் பச்சை புல்வெளிகள், பளபளக்கும் கருங்கற்களால் உருவாக்கப்பட்ட அமர்வுகள், குடை வடிவில் வடிவமைக்க பட்ட சிமெண்டு ஒதுங்குமிடங்கள், பல வண்ணம் தீட்டப்பட்ட ஊஞ்சல்கள், சறுக்கு பலகைகள் நம் கண்களுக்கு விருந்து அளிக்கின்றன.
அங்குள்ள மூன்று நீர் ஊற்றுக்கள், செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள பச்சை மண் குன்றுகள், அதன் மேல் அமர்ந்திருக்கும் பறவைகள் நம் கண்களுக்கும், கருத்துக்கும் கிளுகிளுப்பு ஊட்டுகின்றன இந்த அழகிய சுற்றுப்புற தோற்றம். இவை அனைத்தும் கடந்த 2 ஆண்டுகளுக்கு வரைதான். ஆனால் தற்போது கடற்கரை களைஇழந்து, பொலிவற்று பாலைவனம் போன்று காட்சி அளிக்கிறது.
கடற்கரைக்கு மெயின் பஜாரில் இருந்து செல்லும் சாலைக்கு கஸ்டம்ஸ் சாலை என்றும், கடற்கரைக்கு சுங்கத்துறை என்றும் பெயர் உள்ளது. விசாலமான கடற்கரைக்கு விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமையில் காயல்பட்டினம் மக்கம் மட்டுமின்றி பக்கத்து நகர்களாக ஆறுமுகநேரி, ஆத்தூர், குரும்பூர், நாசரேத், திருச்செந்தூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இதனால் விடுமுறை நாட்களில் கடற்கரை விழாக்கோலம் போல் காட்சி அளிக்கும். தினமும் மாலை நேரங்களில் உள்ளூர் மக்கள் வந்து அமர்ந்து செல்கின்றனர்.
இந்த இயற்கையான கடற்கரையில் கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந் தேதி ரூ.30 லட்சம் செலவில் சுற்றுலாத்துறை புதுப்பித்து பொழுதுபோக்கு வசதிகள், நடைபாதை, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், திறந்த வெளி ஓய்வு அறை, குடிநீர் தொட்டி, ஆண், பெண்களுக்கு தனித்தனி கழிப்பறை, செயற்கை நீருற்று இவைகளுடன், அன்றைய அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார். ஆனால் அதன் பின் இன்று வரை எந்தவித பராமரிப்பும் இன்றி கடற்கரை பொலிவு இழந்து காணப்படுகிறது.
சிறுவர், விளையாட்டு உபகரணங்கள் உடைந்தும், குடிநீர் தொட்டி பயனற்றும், கழிவறை கதவு கூட இல்லாமலும், செயற்கை நீருற்று சுகாதார கேடு விளைவிக்கும் வகையில் சாக்கடைகுளம் போல் உள்ளது.
களை இழந்த கடற்கரை
எவ்வித பராமரிப்பும் செய்யாததால் களை இழந்து காணப்படுகிறது. தற்போது குடிநீர் தொட்டி இருந்தும் குடிநீர் இல்லை. கழிப்பறைகள் பெயரளவில் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை. கடற்கரை நடைபாதை இருந்த சுவர் தெரியாமல் போய்விட்டது. கடற்கரையில் முன்பு அமைக்கப்பட்ட செயற்கை நீருற்று குப்பை கொட்டும் களமாக மாறிவிட்டது. இதுபோன்ற குறைகளால் கடற்கரை களை இழந்து காணப்படுகிறது.
இது தொடர்பாக கடற்கரை பயனாளிகள் சங்க துணை செயலாளர் எஸ்.கே.சாலிகிடம் கேட்டபோது, கடற்கரையை அழகுபடுத்துவது என்ற பெயரில் தேவையற்ற கட்டிடங்களைக் கட்டாமல், இயற்கையான கடற்கரையை விரிவுபடுத்தி, மக்கள் மாலை வேளையில் அமர்ந்து சுகாதாரமான இயற்கைக் காற்றை சுவாசிக்க தேவையான நடவடிக்கைகளை சுற்றுலாத்துறை செய்ய வேண்டும் என்று கூறினார்.
மேலும் காரியங்களை செய்வதற்காக கடற்கரை பயனாளிகள் சங்கம் செயல்படுகிறது. இதன் தலைவராக ஓ.ஏ.நஸீர் அகமது, செயலாளராக எல்.எம்.இ.கைலானி, துணை செயலாளராக எஸ்.கே.சாலிஹ், துணை தலைவராக எம்.ஜெ.செய்யது இபுராகிம், பொருளாளராக ஏ.தர்வீஸ் முகமது மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
நிறைவேற்ற வேண்டிய பணிகள்
இந்த அமைப்பு சார்பில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை காயல்பட்டினம் நகரசபை மூலமாக தமிழக சுற்றுலாத் துறையை கேட்டுக் கொள்ளும் கோரிக்கை மனுவை நகரசபை தலைவியிடம் நிர்வாகிகள் ஏற்கனவே கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
* கடற்கரைக்கு வருபவர்களின் வாகனங்கம் நிறுத்த தனியிட வசதி.
* கடற்கரையை ஆண், பெண், குடும்பம், விளையாட்டு பகுதி என 4 பிரிவுகளாக பிரித்து அமைத்து அதற்கான வழிகாட்டி அறிவிப்பு பலகைகள் அமைக்க வேண்டும்.
* மாலை நேரங்களில் கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு வழிகாட்ட ஆர்வலர்கள் நியமிக்க வேண்டும்.
* கடற்கரையின் தெற்கு, வடக்கு பகுதிகளில் முட்புதர்கள் அகற்றப்பட்டு கடற்கரை பகுதி முழுவதும் எங்கு இருந்து பார்த்தாலும் மணல்பரப்பு தெரியும் வகையில் சுத்தப்படுத்தி அகலப்படுத்த வேண்டும்.
* ஆண், பெண் கழிவறைகள் சீரமைக்க வேண்டும்.
* கடற்கரையில் குப்பை கூளங்கள் சேராத வண்ணம் தினமும் சுத்தப்படுத்த வேண்டும்.
* தேவையற்ற வகையில் அமைந்துள்ள தடாகத்தை அகற்ற வேண்டும்.
* கடற்கரையில் தெற்கு, வடக்கு பகுதிகளிலும் ஒளி மின்விளக்குகள், டவர் அமைக்க வேண்டும்.
* குப்பைகள் போடுவதற்கு என்று குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்.
* நகரசபையின் அனுமதியுடனே கடைகள் வைக்க வேண்டும்.
இவற்றில் கூறப்பட்டு உள்ளவற்றை அரசு சுற்றுலாத்துறை, நகரசபை ஆகியவை தங்களுக்கு முடிந்ததை செய்து தரவும், முடியாதவற்றை செய்வதற்கு கடற்கரை பயனாளிகள் சங்கத்துக்கு அனுமதி அளித்தால் தனியார் நிறுவனம், செல்வந்தர்கள் உதவியுடன் செய்ய முடியும் என்று மனுவில் கூறி உள்ளனர்.
கடற்கரையை துப்புரவு செய்ய, மெரினா கடற்கரையில் உள்ளது போல் தானியங்கி குப்பை அகற்றும் வாகனம் மற்றும் நுழைவு வாயிலில் மணிகூண்டு அமைக்க வேண்டும்.
இதுதொடர்பாக நகரசபை தலைவி ஐ.ஆபீதாவிடம் கேட்டபோது, "கடற்கரையை அழகுபடுத்துவது என்பதற்கு பதிலாக சுகாதாரமான முறையில் விரிவுபடுத்தி மக்களுக்கு பயன்படும் வகையில் அமைக்க வேண்டும். இதற்காக கடற்கரை பயனாளிகள் சங்கமும் முயற்சி செய்து வருகிறது. நகரின் பொது நல அமைப்புகள் மற்றும் நகர பிரமுகர்களின் ஆலோசனைகளை அறிந்து கடற்கரை விரிவுபடுத்தப்படும். சுகாதாரம், பாதுகாப்பு குழந்தைகளுக்கு பாதுகாப்புடன் கூடிய பொழுதுபோக்கு சாதனங்கள் இவைகள் அமைக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடற்கரையை அரசு சுற்றுலாத்துறை மூலம் விரிவுபடுத்த தேவையான வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி விரிவுபடுத்தும்போது பொதுமக்கம் தன்னார்வ தொண்டு நிறுவனம், கடற்கரை பயனாளிகள் சங்கம் ஆகியவற்றைக் கலந்து பேசி விரிவாக்கம் செய்யப்படும்'' என்று நகரசபை தலைவர் கூறினார்.
சென்னை மெரினாவுக்கு பிறகு அழகான கடற்கரை என பெயர் பெற்று உள்ள காயல்பட்டினம் கடற்கரை தற்போது உள்ள கோலம் மாற அரசும், அதிகாரிகளும் அரசியல் பிரமுகர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும்.
இவ்வாறு, தினத்தந்தி நாளிதழின் நெல்லை பதிப்பில், எட்டாம் பக்கத்தில் உள்ள செய்திக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சாளை அப்துல் காதர்,
ஹாங்காங். |