காயல்பட்டினம் திருச்செந்தூர் சாலையில், கே.எம்.டி. மருத்துவமனை அருகில் இன்று மதியம் பேருந்து விபத்து நிகழ்ந்தது.
நாசரேத்திலிருந்து காயல்பட்டினம் வழியே திருச்செந்தூர் செல்லும் தனியார் பேருந்து, கே.எம்.டி. மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக இன்று மதியம் 01.30 மணியளவில் நிறுத்தப்பட்டிருந்தது.
ராமேஸ்வரத்திலிருந்து காயல்பட்டினம் வழியே திருச்செந்தூர் வரை செல்லும் அரசுப் பேருந்து அதனையொட்டி நிறுத்துவதற்காக ஓட்டுனர் ப்ரேக்கை பிடித்தும், அது கட்டுப்பாட்டை இழந்ததால், வண்டி நிற்காமல், அதற்கு முன்பு நின்றுகொண்டிருந்த தனியார் பேருந்தின் பின்புறத்தில் மோதியது.
இதில், தனியார் பேருந்தின் பின்புற கண்ணாடி நொறுங்கிச் சிதறியது. அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தின் முன்புறம் வடிவம் மாறி சேதமுற்றது.
இவ்விபத்தில், வண்டி ஓட்டுனர்களுக்கோ, பயணியருக்கோ எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை. சிறிது நேரம் வெளியில் காத்திருந்த இரு பேருந்துகளின் பயணியரையும், அவற்றின் ஓட்டுனர்களும், நடத்துனர்களும் இணைந்து, அவ்வழியே வந்த மற்றொரு பேருந்தில் அனுப்பி வைத்தனர்.
இவ்விபத்து காரணமாக அவ்விடம் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது. |