இம்மாதம் 15ஆம் தேதியன்று நடைபெற்ற - நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - மக்கள் கூட்டமைப்புகளின் பிரநிதிகள் கலந்தாலோசனைக் கூட்டத்தில், நகரின் முக்கிய பிரச்சினைகள் குறித்து நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, தான் நகர்மன்றத் தலைவரானால் வெளிப்படையான நகர்மன்ற நிர்வாகத்தைத் தருவதாக தனது தேர்தல் அறிக்கையில் (Manifesto) துவக்க அறிக்கையாக தெரிவித்திருந்தார்.
வெளிப்படை நிர்வாகத்தை நோக்கிய தனது முதல் நகர்வாக, நகரின் முக்கிய பிரச்சினைகள் குறித்து நகரின் அனைத்துப்பகுதி மக்களுடனும் கலந்தாலோசிக்கவும், கருத்துக்களைக் கேட்பதற்காகவும் மாதந்தோறும் கலந்தாலோசனைக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.
கலந்தாலோசனைக் கூட்டம்:
முதல் கூட்டம், இம்மாதம் 15ஆம் தேதியன்று, காயல்பட்டினம் மகுதூம் தெரு, ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதிநிதிகளை அனுப்பி வைக்குமாறு, நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் மக்கள் கூட்டமைப்புகள், காயல் நல மன்றங்களின் பிரதிநிதிகளுக்கு, நகர்மன்றத் தலைவர் கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார்.
நிகழ்முறை:
கூட்டம், 15.01.2012 அன்று மாலை 05.00 மணிக்கு துவங்கியது. இறைமறை வசனத்துடன் துவங்கிய இக்கூட்ட நிகழ்ச்சிகளை, பல்லாக் அப்துல் காதிர் நெய்னா நெறிப்படுத்தினார்.
தலைவர் உரை:
துவக்கமாக நகர்மன்றத் தலைவர் உரையாற்றினார். அவரது உரை பின்வருமாறு:-
எல்லாப்புகழும் இறைவனுக்கே! வல்லோன் அவனே துணை நமக்கே!!
காயல்பட்டினம் நகராட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள எனது அன்பான அழைப்பையேற்று, நகர ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், வெளிநாட்டு காயல் நல மன்றங்கள், புறநகர் பகுதிகளின் ஊர் நலக்கமிட்டி ஆகியவற்றைச் சார்ந்த பிரதிநிதிகள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும், அன்பும், அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக!
வெளிப்படை நிர்வாகம்...
‘வெளிப்படையான நிர்வாகம்‘ என்ற சொல்லானது எனது தேர்தல் அறிக்கையின் முதல் அம்சம் மட்டுமின்றி, நான் தேர்தலில் வெற்றி பெற்ற அறிவிப்பைப் பெற்ற அந்த நேரத்தில், சன் டிவிக்கு அளித்த நேர்காணலின்போதும், “வெளிப்படை நிர்வாகத்தை மக்களுக்கு அளிப்பதே எனது லட்சியம்” என்றும் தெரிவித்திருந்தேன். நான் தேர்தலில் போட்டியிட்டபோது, வெளிப்படை நிர்வாகத்தின் ஓரம்சமாக, மக்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடத்துவேன் என்று அனைத்து மேடைகளிலும் கூறியது உங்கள் யாவருக்குமே நினைவிருக்கும். அதற்கான முதல் முயற்சியாகத்தான் இன்று இங்கே மக்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.
மக்கள் பணி செய்வதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நானும், எனது மதிப்பிற்குரிய நகர்மன்ற உறுப்பினர்களான சகோதர-சகோதரியரும் இணைந்து செயலாற்றி, காயல்பட்டினத்தை அனைத்து நகராட்சிகளுக்கும் முன்னுதாரணமாக்கிட வல்ல இறைவன் அருள் செய்வானாக, ஆமீன்.
சோதனை நிறைந்த துவக்கம்...
நாங்கள் பதவியேற்ற காலம் மழைக்காலமாக இருந்ததால், நகரில் போர்க்கால அடிப்படையில் மழை நீர்த்தேக்கங்கள் அப்புறப்படுத்தப்பட்டது. நானும், நம் நகர்மன்றத்தின் அனைத்து வார்டு உறுப்பினர்களும் இணைந்து இப்பணிகளில் முனைப்புடன் செயல்பட்டோம். சில உறுப்பினர்கள் அவர்களே கையில் மண் வெட்டியைப் பிடித்து கூட பணி செய்தனர்.
கடமையுணர்ச்சியுள்ள உறுப்பினர்கள்...
நாங்கள் பொறுப்பேற்ற காலமே சோதனைக் காலமாகிப் போனது. முதல் பணியே இந்த மழை நீர்த்தேக்கங்களை அகற்றும் பணிதான் என்றபோதிலும், நாங்கள் அதை இறையருளால் நிறைவாகச் செய்து, மக்களின் பாராட்டுக்களையும், துஆக்களையும் பெற்றுக்கொண்டதுதான், அந்த சோதனையிலும் சிறு சாதனையாகிவிட்டது. மழை நிவாரணப் பணிகளில் எங்கள் உறுப்பினர்களின் கடமையுணர்ச்சியுடன் கூடிய பணிகளை நினைத்து உண்மையிலேயே பெருமிதம் கொள்கிறேன்.
தத்தம் வார்டு பகுதிகளுக்கு நிறைய நன்மைகளைச் செய்ய வேண்டும் என்ற பேரவா அனைத்து உறுப்பினர்களிடமும் உள்ளது. அது அவர்களின் எண்ணங்களில், எதிர்பார்ப்பில் காணப்படுவது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களுடன் இணைந்து நமதூருக்கு எல்லா நன்மைகளையும் இந்த ஐந்தாண்டு பொறுப்புக் காலத்தில் நிறைவாகச் செய்திட நான் மிகவும் ஆர்வமுடன் உள்ளேன்.
குறைகளை சுட்டிக்காட்டுங்கள்!
நமது காயல் மாநகரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல, நல்ல பல ஆலோசனைகளையும், நல்ல கருத்துக்களையும், நகர்நலனில் அக்கறையுள்ள உங்கள் யாவரிடமிருந்தும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வயதிலும், அனுபவத்திலும் நான் மிகச்சிறியவள் என்பதால், என்னை உங்கள் சகோதரியாக - உங்கள் வீட்டுப் பிள்ளையாகக் கருதி, என்னிடமுள்ள குறைகளை அக்கறையோடும், உரிமையோடும் சுட்டிக்காட்டுங்கள்! நல்லவற்றை நிச்சயம் ஏற்க ஆயத்தமாக உள்ளேன். அல்லவற்றைத் திருத்திக்கொள்கிறேன். குறைகளற்றவன் இறைவன் ஒருவனே!
நாங்கள் பதவியேற்று 100 நாட்கள் கூட இன்னும் பூர்த்தியடையாத நிலையில், நம் நகருக்கு - நகர மக்களுக்கு என்னாலான அனைத்தையும் ஒவ்வொன்றாகச் செய்ய ஆயத்தமாகவே உள்ளோம், இன்ஷாஅல்லாஹ். எங்கள் யாவருக்குமே நமதூரைப் பற்றி நிறைய கனவுகள் உள்ளன. அவையனைத்தையும் நனவாக்கிட நாங்கள் யாவரும் ஒன்றிணைந்து செயலாற்றி, நீங்கள் அனைவரும் வியக்கத்தக்க வகையில் மாற்றங்களையும், ஏற்றங்களையும் நமதூருக்கும், நம் மக்களுக்கும் - எல்லா சக்திகளுக்கும் மேலான இறைசக்தியின் உதவிகொண்டு, நிச்சயம் செய்து முடிப்போம்.
அனைவருக்கும் சமமான நிர்வாகம்...
நமதூரின் அனைத்து வார்டுகளுக்கிடையிலும் - அனைத்து சமய மக்களிடையிலும் என் பொறுப்புணர்ந்து சரிசமமாகவும், நியாய அடிப்படையிலும் செயலாற்றவே நான் பெரிதும் விரும்புகிறேன். அதற்கு உங்கள் யாவரின் மேலான ஒத்துழைப்புகளை ஆவலுடன் எதிர்பார்த்து நிறைவு செய்கிறேன். நன்றி, வஸ்ஸலாம்.
இவ்வாறு நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா உரையாற்றினார்.
ஹாங்காங் பேரவையின் கோரிக்கை:
பின்னர், புதிய நகர்மன்றத்திற்கு வாழ்த்து தெரிவித்தும், நகர சுகாதாரத்தில் அக்கறையுடன் செயல்படுமாறு நகர்மன்றத்தை வேண்டியும், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் அதன் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, அவ்வமைப்பின் உள்ளூர் பிரதிநிதி எஸ்.அப்துல் வாஹித் வாசித்து, அதனை மடலாக நகர்மன்றத் தலைவரிடம் வழங்கினார்.
புறநகர் மக்கள் கோரிக்கைகள்:
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் லக்ஷ்மிபுரத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய நலத்திட்டப்பணிகள் குறித்த கோரிக்கையை அப்பகுதியைச் சார்ந்த பிரதிநிதிகள் நகர்மன்றத் தலைவரிடம் வழங்கினர்.
கூட்டத்தில் பங்கேற்ற ஜமாஅத்துகள், புறநகரின் மக்கள் கூட்டமைப்புகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்துக்களைத் தெரிவித்தனர். சந்தேகங்களுக்குத் தேவையான விளக்கங்களைக் கேட்டுப் பெற்றனர்.
முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள்:
திருட்டுத்தனமாக உள்ள குடிநீர் இணைப்புகளைத் துண்டித்தல்...
புதுப்பள்ளி உள்ளிட்ட - நகரின் தாழ்வான பகுதிகளில் மழைக்காலங்களில் பெருமளவில் நீர் தேங்குவதைத் தவிர்க்க செயல்திட்டம் அமைத்தல்...
நகர் முழுக்க பசுமை மயமாக்கிட, அனைத்து தெருக்களிலும் நிழல் தரும் மரங்களை நட்டல்...
கால்நடை மருத்துவமனையிடமிருந்து பெறப்படும் நிலத்தை நன்முறையில் பயன்படுத்தி, அரசு அலுவலகங்கள் அமைய நகராட்சி மூலம் கட்டிடங்கள் கட்டி, வாடகை அடிப்படையில் அளித்தல்...
நகரில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவதை நிறுத்த, உயர் அழுத்தத்துடன் குடிநீர் வினியோகித்தல்...
வழிபாட்டுத் தலங்கள், கல்விக் கூடங்கள், விபத்தை ஏற்படுத்தும் திருப்பங்களில் முறையாக வேகத்தடைகளை அமைத்தல்...
பேருந்து நிலைய பயணியர் தரிப்பிடத்தில், நடுவில் தடுப்புச்சுவர் எழுப்பி பெண்களுக்கு தனியிட வசதி செய்தல்...
புகையிலைப் பொருட்கள் விற்பனையைத் தடை செய்து, புகையில்லா நகரை உருவாக்கல்...
தெருநாய் தொல்லைகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க செயல்திட்டம் வகுத்தல்...
நகரின் அனைத்துப் பகுதிகளிலும், குறிப்பிட்ட இடைவெளியில் - மூடப்பட்ட குப்பைத் தொட்டிகளை நிறுவல்...
புறநகர் பகுதிகளில் நூலகங்கள் அமைய ஆவன செய்தல்...
மெயின் பஜார் முனை, பேருந்து நிலைய வளாகங்களில் சட்டம் ஒழுங்கு குறித்த காவல்துறை அறிவிப்புப் பலகைகளை அமைத்தல்...
புறநகர் பகுதிகளிலும், அகநகரின் சில பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் ஓடைகளை அடைப்பின்றி துப்புரவு செய்து, மூடி அமைத்தல்...
குப்பை சேகரிக்கும் வாகனத்திலுள்ள ஒலிப்பானை (Horn) பள்ளிக்கூட வாகனங்களிலிருந்து வேறுபடுத்தி அறியும் வகையில் மாற்றியமைத்தல்...
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும், ஆலோசனைகளும் மக்கள் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டன.
இவற்றில், ஏற்கனவே நகர்மன்ற உறுப்பினர்களால் நகர்மன்றக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் - அவற்றின் நிறைவேற்ற நிலைகள் குறித்து விளக்கிய நகர்மன்றத் தலைவர், இதர கருத்துக்கள் அனைத்தையும் தான் குறிப்பெடுத்துக் கொண்டுள்ளதாகவும், அடுத்தடுத்த நகர்மன்றக் கூட்டங்களில் அவற்றை விவாதத்திற்கு வைத்து, அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் நல்ல தீர்வுகளைத் தர ஆவன செய்வதாகத் தெரிவித்தார்.
நிறைவாக ‘தமிழன்‘ முத்து இஸ்மாஈல் நன்றி கூறினார்.
கலந்துகொண்டோர்:
இக்கூட்டத்தில், புதுப்பள்ளி, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித், ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளி - நெசவு ஜமாஅத், மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி, மரைக்கார் பள்ளி, அப்பா பள்ளி, ஹாஜியப்பா பள்ளி, முஹ்யித்தீன் பள்ளி, குட்டியாபள்ளி, கோமான் மொட்டையார் பள்ளி, காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளி, மேலப்பள்ளி ஆகிய நகர ஜமாஅத்துகளின் பிரதிநிதிகளும்,
பாஸ் நகர், எல்.ஆர்.நகர், கடையக்குடி, அருணாச்சலபுரம், உச்சினிமாகாளியம்மன் கோயில் சமுதாய நலக்கமிட்டி, தைக்காபுரம் ஆகிய புறநகர் மக்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும்,
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு, அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம், மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை, இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.), கோமான் நற்பணி மன்றம், கவ்திய்யா சங்கம், இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட், காயல்பட்டினம் நல அறக்கட்டளை (KWT) ஆகிய பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகளும்,
கூட்டம் நடைபெற்ற தேதியின்போது ஊரிலிருந்த - அனைத்துலக காயல் நல மன்றங்களைச் சார்ந்தவர்களும் இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். அதனடிப்படையில்,
அமீரக காயல் நல மன்றம், தம்மாம் காயல் நற்பணி மன்றம், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங், பஹ்ரைன் காயல் நல மன்றம் (பக்வா) ஆகிய காயல் நல மன்றங்களின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். |