அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்.ஜி.இராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ஆர்.இன் 95ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அக்கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை ஏற்பாட்டில், பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், 19.01.2012 வியாழக்கிழமை இரவு 07.00 மணிக்கு, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது.
அதிமுக திருச்செந்தூர் ஒன்றிய கழக செயலாளர் மு.இராமச்சந்திரன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட - ஒன்றிய - நகர நிர்வாகிகளான எம்.ஜே.செய்யித் இப்றாஹீம், என்.பி.முத்து, அ.வஹீதா, கே.ஏ.எஸ்.அப்துல் காதர், எஸ்.எம்.அப்துல் காதர் என்ற சின்னத்தம்பி என்.எம்.அகமது, பி.மனோகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் எல்.எஸ்.அன்வர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பள்ளத்தூர் முருகேசன் வாழ்த்துரை வழங்கினார். கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளரும், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் சிறப்புரையாற்றினார்.
முந்தைய திமுக அரசு மக்களுக்கு செய்யத் தவறிய அம்சங்கள், நடப்பு அதிமுக அரசு செய்த மக்கள் நலத்திட்டங்கள் என பலவற்றை அவர் பட்டியலிட்டுப் பேசினார்.
பின்னர், அக்கட்சியின் தலைமைக்கழக பேச்சாளரும், திரைப்பட நடிகருமான ஜெய சூரியகாந்த் சிறப்புரையாற்றினார்.
நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் உறுப்பினர்களும், நகர பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை கட்சியின் நகரச் செயலாளர் எஸ்.எம்.செய்யது காசிம் செய்திருந்தார்.
|