காயல்பட்டினம் புறவழிச்சாலையிலும், உச்சினிமாகாளியம்மன் கோயில் தெரு திருப்பத்திலும் தன்னிச்சையாக அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டுக் கல்லை அகற்றுமாறு, நகர அரசியல் கட்சிகள் சார்பில் காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் 18.01.2012 அன்று (நேற்று) முறையிடப்பட்டுள்ளது.
நேற்று காலை 11.00 மணியளவில் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையாவை, நகராட்சி அலுவலகத்தில் சந்தித்த நகர அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், பொதுநல அமைப்புகளைச் சார்ந்தோரடங்கிய குழுவினர், காயல்பட்டினம் புறவழிச்சாலையிலும், உச்சினிமாகாளியம்மன் கோயில் தெரு திருப்பத்திலும், சட்ட விரோதமாக - “உச்சினி மாகாளியம்மன் கோயில் தெரு மயான சாலை” என்று குறிப்பிடப்பட்ட வழிகாட்டுக் கல் வைக்கப்பட்டுள்ளதாகவும், சமூக விரோதிகள் சிலரது தீய எண்ணத்தின் படி அது அமைக்கப்பட்டுள்ளதெனவும், அதனை உடனடியாக அகற்றிடுமாறும் முறையிட்டனர்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு இதேபோன்று அவ்விடத்தில் “மயான சாலைக்குச் செல்லும் வழி” என்று குறிப்பிட்டு ஒரு கல் வைக்கப்பட்டதாகவும், நகரின் பெரும்பாலான மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, திருச்செந்தூர் வட்டாட்சியர் தலையிட்டு, அரசுப்பதிவில் உள்ள விபரத்திற்கு மாற்றமாக யாரும், எதையும் நிறுவ அனுமதியில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்த பின்னர் அக்கல் அகற்றப்பட்டதெனவும் அவர்கள் நகராட்சி ஆணையரிடம் தெரிவித்தனர்.
நகரிலுள்ள பெரும்பான்மை சமூகத்தவர்களது நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் ஒரு சில சமூக விரோதிகளால் செய்யப்படும் இச்செய்கையை உடனடியாகத் தடுத்து நிறுத்தி, நகரில் சட்டம் ஒழுங்கு கெடாமல் பாதுகாக்குமாறு அக்குழுவினர் நகராட்சி ஆணையரிடம் கேட்டுக்கொண்டனர்.
அனைத்தையும் கேட்டறிந்த நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையா, அது தொடர்பானவர்களுடன் பேசி, சுமுகமான முறையில் அவற்றை அகற்றிட ஆவன செய்வதாக தெரிவித்தார்.
பின்னர், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதாவை அவரது அறையில் அக்குழுவினர் சந்தித்து இதேபோன்று முறையிட்டனர்.
சட்டத்திற்குப் புறம்பாக செய்யப்படும் எந்த நடவடிக்கைகளையும் நகராட்சி அனுமதிக்காது என்று தெரிவித்த அவர், சுமுகமான முறையில் இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர அனைத்து முயற்சிகளும் விரைந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்ததையடுத்து, அக்குழுவினர் திரும்பிச் சென்றனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், அதன் நகரத் தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், நகர துணைச் செயலாளர்களான ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நகர தலைவர் ஜாஹிர் ஹுஸைன், தேசிய முற்போக்கு திராவிடர் கழக மாநில செயற்குழு உறுப்பினர் ஹாஜி எம்.எம்.அஹ்மத் ஹுஸைன் மற்றும் உமர் அனஸ் (கத்தர்), அஹ்மத் மீரான் (மக்கா), எம்.என்.எல்.ரஃபீக் (மக்கா), ஹாஜி எல்.எம்.இ.கைலானீ, தாவூத் மற்றும் பலர் அக்குழுவில் அடங்குவர்.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன். |