ஐக்கிய அரபு அமீரகம் அபூதபீ நகரில் காயல் நல மன்றம் துவக்கப்பட்டமைக்கு, சிங்கப்பூர் காயல் நல மன்றம் வாழ்த்து தெரிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டிற்கான நிதிநிலையறிக்கையை அம்மன்ற செயற்குழு தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், அதன் செயலர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நிகழ்முறை:
எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், 13.01.2012 வெள்ளிக்கிழமையன்று 19.45 மணிக்கு, சாளை ஷேக் நவாஸ் தலைமையில் மன்றத்தின் பதிவு அலுவலகத்தில் நடைபெற்றது.
ஹாஃபிழ் எம்.ஆர்.ஏ,ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத் தலைவர் சாளை ஷேக் நவாஸ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கடந்த கூட்ட அறிக்கை:
மன்றச் செயலாளர் மொகுதூம் முஹம்மத், கடந்த கூட்ட அறிக்கையை வாசித்து, அவை செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து விளக்கியதோடு, 2012ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான உறுப்பினர் சந்தா தொகைகளை அனைவரும் நிலுவையின்றி - விரைவாக செலுத்தி, மன்றத்தின் நகர்நலப் பணிகளுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
ஆலோசகர் உரை:
பின்னர், மன்றத்தின் ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், அண்மையில் தான் தாயகம் சென்று வந்தபோது அங்கு செய்யப்பட்ட மன்றம் தொடர்பான செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார்.
நிதிநிலையறிக்கை:
அதனைத் தொடர்ந்து, மன்றத்தின் 2012ஆம் ஆண்டிற்கான விரிவான நிதிநிலையறிக்கை (பட்ஜெட்) கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டது. இவ்வறிக்கையை ஆயத்தம் செய்த உறுப்பினர் எம்.என்.ஜவஹர் இஸ்மாஈலை இக்கூட்டம் மனதாரப் பாராட்டியது.
மன்ற உறுப்பினர்களின் மனப்பூர்வமான ஒத்துழைப்பின் காரணமாக, கடந்த ஆண்டில் முடிவு செய்யப்பட்ட நிதிநிலையறிக்கையை விடவும் கூடுதலாக நகர்நலப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதெனவும், இவ்வாண்டும் நிதிநிலையறிக்கைப் படி குறைவின்றி நகர்நலப்பணிகளாற்றுவதெனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அடுத்த பொதுக்குழுக் கூட்டம்:
மன்றத்தின் அடுத்த பொதுக்குழுக் கூட்டம், 28.01.2012 சனிக்கிழமையன்று 17.30 மணிக்கு, சிங்கப்பூர் Labrador Park (near Harbour Front MRT) என்ற இடத்தில், குடும்ப சங்கமமாக நடைபெறுமெனவும், மன்றத்தின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறும் அறிவிக்கப்பட்டது.
அபூதபீ கா.ந.மன்ற துவக்கத்திற்கு வாழ்த்து:
ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ நகரில் புதிதாக காயல் நல மன்றம் துவக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டள்ளமைக்கு செயற்குழுவில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. வெளிநாட்டு காயல் நல மன்றங்களின் வலைப்பணியில் அபூதபீ காயல் நல மன்றத்தின் இணைவை மனந்திறந்து வரவேற்பதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
விவாதிக்க வேறம்சங்கள் எதுவுமில்லா நிலையில், ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் துஆவுடன், 21.30 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்ளும், சிறப்பழைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், அதன் செயலர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |