காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருபவர் - பொது நல ஆர்வலரான கே.எம்.டி.சுலைமான். நெய்னார் தெருவைச் சார்ந்த இவருக்கு, பிடிக்காத ஒரே விஷயம் ‘சும்மா‘ இருப்பது!
இவர், தான் துணைச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் - பரந்த நிலப்பரப்பிற்குச் சொந்தமான முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி வளாகத்தில், வகுப்பறை, விளையாட்டுக் களங்கள் தவிர இதர பகுதிகளை பயனுள்ள மரங்களைக் கொண்டு பசுமையாக்கிட நாடினார். இதுகுறித்து, அப்பள்ளியின் தலைமையாசிரியர் ஸ்டீஃபன், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஜி ஏ.டபிள்யு.ருக்னுத்தீன் ஸாஹிப் ஆகியோருடன் கலந்தாலோசித்த பின்னர், பள்ளி மாணவர்களின் துணையுடன் மண்வெட்டியை கையிலெடுத்தார்.
அவருக்குத் துணையாக, பள்ளி தலைமையாசிரியர் ஸ்டீஃபனும் மண் வெட்டியுடன் களமிறங்கிப் பணியாற்றினார். பெரியவர்கள் பணி செய்வதைப் பார்த்த மாணவர்கள், தமக்குள் இருந்த அலட்சியப் போக்கைத் தூக்கியெறிந்துவிட்டு, அவர்களும் தம் பங்குக்கு பள்ளம் தோண்டி, பாத்தி அமைக்கும் வேலையைச் செய்தனர்.
இதன் விளைவாக, தற்போது அப்பள்ளியில், மா, கொய்யா, சப்போட்டா, வாழை உள்ளிட்ட பல பழ மரங்களும், ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பல மலர்ச் செடிகளும் நட்டப்பட்டு, தினமும் நீரூற்றி பராமரிக்கப்பட்டு வருகிறது.
விரைவில் இப்பள்ளி பசுமைக்களமாகும் என நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் இப்பள்ளியின் துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான். |