காயல்பட்டினத்தில் குடும்ப அட்டை தொடர்பாக பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் நியாய விலைக்கடைகளில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, உணவுப்பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் பி.எம்.பஷீர் அகமதிடம், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, 09.01.2012 அன்று மதியம் 03.00 மணியளவில் நேரில் சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
அக்கோரிக்கை வாசகங்கள் பின்வருமர்று:-
(1) ரேஷன் கடையில் அன்றாடம் வழங்கப்படும் பொருட்களின் பெயர் பட்டியல், அனைத்து ரேஷன் கடைகளின் பெயர் பலகையில் தினந்தோறும் தவறாது இடம்பெறச் செய்ய உத்தரவு வழங்க வேண்டும்.
(2) ரேஷன் கடையில் கையிருப்பு பொருட்களின் பெயர்கள், மொத்த வரவு போன்றவற்றை மக்கள் பார்வையில் படும் வண்ணம் தெளிவாக எழுதி வைக்க ஆவண செய்ய வேண்டும்.
(3) ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருடக்ளின் தரம், எடை, கையிருப்பு போன்றவைகள் சரியானதாகவும், முறையானதாகவும் இருக்கிறதா என்பதனை அடிக்கடி கண்காணித்து சீர் செய்ய வேண்டும்.
(4) காயல்பட்டணத்தில் பெரும்பாலான குடும்பத் தலைவர்கள் வியாபார நிமிர்த்தமாக வெளியூரிலும், வெளிநாடுகளிலும் இருப்பதால், ரேஷன் கார்டுகளில் பெயர் மாற்றம், திருத்தம் போன்ற வேலைகளுக்கு பெண்கள் வெளியூருக்கு (திருச்செந்தூர்) செல்ல வேண்டியிருப்பது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே, தாங்கள் தயவுகூர்ந்து குடும்ப அட்டையில் மேற்கண்ட பணிகளை செய்வதற்குரிய முகாம்களை நடத்தித் தந்து குடும்ப பெண்களின் குறை தீர்க்க ஆவன செய்ய வேண்டும்.
(5) நிரந்தமாக இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்தும் வகையில், குடும்ப அட்டையில் பெயர், சேர்த்தல், திருத்தல் போன்ற காரியங்களை செயல்படுத்திட, இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட காயல்பட்டினத்தில் வாரம் ஒரு முறையாவது செயல்படக்கூடிய வகையில் கிளை அலுவலகம் அமைத்துத் தர ஆவன செய்ய வேண்டும்.
(6) அத்தியாவசியப் பொருட்களான பாம் ஆயில், மண்ணெண்ணெய் ஒரு கடைக்கு உட்பட்ட அனைத்து கார்டுகளுக்கும் வினியோகிக்கப்படாததால் நுகர்வோருக்கும், கடை ஊழியர்களுக்கும் இடையில் தகராறு ஏற்படுகிறது. இதனை நிவர்த்திக்கும் பொருட்டு அனைத்து கார்டுகளுக்கும் மேற்படி பொருட்கள் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
(7) காயல்பட்டணத்தில் ரேஷன் கார்டு பெயர் திருத்தம், சேர்த்தல் மற்றும் சிறப்பு முகாம்களை எமதூரில் நடத்தி, மக்களின் சிரமங்கள் போக்கிட எமதூரின் அனைத்து மக்களின் சார்பாக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு, உணவுப் பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் பி.எம்.பஷீர் அகமதிடம், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
தமது வார்டுக்குட்பட்ட நியாயவிலைக் கடைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை கோரி சென்றிருந்த காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.லுக்மான், வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா மற்றும் அதிமுக மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவர் எம்.ஜே.செய்யித் இப்றாஹீம் ஆகியோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர். |