காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் 2011ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை, 31.12.2011 அன்று மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற ‘மருத்துவமனை தின விழா‘வின்போது வாசிக்கப்பட்டது. அரசு மருத்துவமனையின் தலைமை செவிலியர் சா.ஜெயலட்சுமி இந்த ஆண்டறிக்கையை வாசித்தார்.
ஆண்டறிக்கை வாசகங்கள் பின்வருமாறு:-
வரலாற்றுச் சுருக்கம்:
காயல்பட்டினம் அரசு மருத்துவமனை, 1956இல், பொதுமக்களால் அரசுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1958இல் பஞ்சாயத்து மருந்தகமாக தொடங்கப்பட்டு, வாவு அறுவை அரங்கம், பல்லாக் வார்டு, ஹாஜி வார்டு, சி.லெ.வார்டு, ஐக்கிய முன்னணி வார்டு என காயல்பட்டினம் நன்கொடையாளர்களால் தனித்தனி கட்டிடங்கள் கட்டப்பட்டது.
1985இல் ஆண்கள் உள்நோயாளிகள் வார்டும், 1995இல் எக்ஸ்ரே, ஸ்கேன், ஆய்வுக்கூடம் முதலிய கட்டிடங்களும், 2000இல் பச்சிளங் குழந்தைகள் பிரிவு, அறுவை அரங்கும் தமிழக அரசால் கட்டப்பட்டது.
தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் கீழ், 2010ஆம் ஆண்டில், 12 படுக்கைகள் கொண்ட அறுவை அரங்கு, நவீன சமையல் கூடம், பிண பரிசோதனைக் கட்டிடம், நோயாளர் வாகன ஊர்தி கட்டிடம் கட்டப்பட்டு, செயல்படுத்தப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது.
புறநோயாளிகள்:
கடந்த 2010ஆம் ஆண்டில் 1,49,979 நபர்கள் புறநோயாளிகளாக மருத்துவ பயன் பெற்றனர். இவ்வாண்டு 1,51,714 நபர்கள் மருத்துவ பயன் பெற்றுள்ளனர். ஆக, கடந்த ஆண்டை விட 1,735 பேர் அதிகமாக நடப்பாண்டில் பயன்பெற்றுள்ளனர்.
உள்நோயாளிகள்:
கடந்த 2010ஆம் ஆண்டில் 20,608 பேர் உள்நோயாளிகளாக தங்கி மருத்துவ பயன் பெற்றனர். இவ்வருடம் 19,126 பேர் உள்நோயாளிகளாக மருத்துவ பயன் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 1,482 பேர் குறைவாகும். இதற்கான காரணம் அறிந்து, அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
குடும்ப நலம்:
கடந்த ஆண்டை விட இவ்வாண்டு குடும்ப நலத்தில் முன்னேற்றம் உள்ளது. இருப்பினும், பெண் மருத்துவர் ஒருவர் இருந்தால் இன்னும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
நோயாளர் நலச்சங்கம்:
கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் நோயாளர் நலச்சங்கம் துவக்கப்பட்டது. இதில், ஆண்டுதோறும் நோயாளர்கள் பயன்பெறும் பொருட்டும், மருத்துவமனை மேம்பாட்டிற்காகவும், ரூ.75,000 வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த நான்கு வருடங்களில் நோயாளிகள் நலனுக்காக, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சோலார் மூலம் சுடுநீர், மின்தட்டுப்பாடு காலங்களில் மின்சாரம் தொடர்ந்து கிடைக்க இன்வெர்ட்டர், மருத்துவமனையில் பணியாளர்களைத் தொடர்புகொள்ள இன்டர்காம் வசதி முதலியன பொருத்தப்பட்டுள்ளது.
சுகாதாரத் திட்டத்தின் கீழ், நோயாளிகளுக்கு இரும்பு கட்டில், மெத்தை விரிப்புகள், உபகரணங்கள் மற்றும் புதிதாக இவ்வாண்டு 20 கணனிகள் பொருத்தப்பட்டு, அதன் மூலம் நோயாளர்களின் முழு விபரம், நோயின் தன்மை முதலியன பதிவு செய்யப்பட்டு, அதற்கான அடையாள அட்டையும் நோயாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதன்மூலம், நோயாளர்கள் தமிழ்நாட்டில் எந்த அரசு மருத்துவமனையிலும் அவர்களின் முந்தைய நோயின் தன்மை அறிந்து தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளலாம்.
புதிய மருத்துவப் பிரிவுகள்:
சிறப்புப் பகுதிகளாக, கடந்த 1998ஆம் ஆண்டு முதல் சித்த மருத்துவம், பல் மருத்துவம் முதலிய பிரிவுகள் சிறப்புற செயல்பட்டு வருகிறது.
வரும் ஆண்டின் திட்டங்கள்:
மருத்துவமனையின் சுற்றுச்சுவரை உயர்த்திக் கட்டுதல், சாலைகளை அமைத்தல் ஆகிய பணிகளை நிறைவேற்றுவதற்காக தோராய மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் 2011ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. |