ஜனவரி 5 அன்று - ஆத்தூரில் அமைந்துள்ள குடிநீரேற்று நிலையத்திற்கு காயல்பட்டினம் நகர்மன்றம் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழு
விஜயம் செய்த செய்தி ஜனவரி 7 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
இச்செய்தி குறித்தும், அது குறித்து பதிவாகியிருந்த வாசகர் கருத்துக்கள் குறித்தும் - நகர்மன்றத்தின் ஐந்தாவது வார்ட் உறுப்பினர் எம். ஜஹாங்கிர்
அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது:-
காயல்பட்டினம் டாட் காம் இணையதளத்தின் செய்தியாளர் சகோதரர் S.K.சாலிஹ் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
ஆத்தூர் நீரேற்றும் நிலையத்தை நகராட்சித் தலைவர் தலைமையில் பார்வையிட்ட உறுப்பினர்களின் பட்டியலில் நான் இடம்பெறாதது குறித்து,
விஷமத்தனமான முறையில், தங்கள் இணையதளத்தில் செய்தி இடம்பெறச் செய்து, தேவையற்ற சர்ச்சையை துவக்கி வைத்தீர்கள். நான் அந்த
குழுவில் இடம்பெற முடியாமைக்கான காரணத்தை மிகத்தெளிவாக தெரிவித்து விட்டேன். இருப்பினும் உள்நோக்கத்தோடு நீங்கள் வெளியிட்ட
தவறான செய்தியால் திசை திருப்பப்பட்ட சிலர் எழுதும் எனக்கெதிரான விமார்சனத்தை தொடர்ந்து வெளியிட்டு மகிழ்கிறீர்கள். தூங்குபவரைத்தான்
எழுப்ப முடியும். தூங்குவதுபோல் நடிப்பவரை எழுப்ப முடியாது. மற்றவர்களை மட்டம் தட்டி மகிழும் இதுபோன்ற தங்களுடைய செயல்களை ஊர்
நலன் கருதி இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் இணையதளத்தில் தங்களைப் பற்றிய விமர்சனத்தை சிலர் அலட்சியம் செய்யலாம். மற்றும் சிலர் உங்கள் இணையதளத்தை ஒரு
பொருட்டாகவே மதிக்காமல் இருக்கலாம். ஆனால் இணையதளம் ஒன்றின் பொறுப்பாளராக இருக்கக்கூடிய என்போன்றோர் அவ்வாறு
இருக்கமாட்டோம். எனவே என்போன்றோரை சீண்டவேண்டாம் என எச்சரிக்கிறேன். இது எச்சரிக்கை அல்ல. அன்பான வேண்டுகோள்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இக்குற்றச்சாட்டு குறித்த இணையதளத்தின் விளக்கம் வருமாறு:-
1. இச்செய்தியைப் பொருத்த வரை - எமது இதர செய்திகளின் நடையிலேயே இதுவும் வெளியிடப்பட்டுள்ளது. ஆத்தூர் விஜயத்திற்கான பின்னணி,
அங்கு சந்திக்கப்பட்டவர், பார்க்கப்பட்டவை, பெறப்பட்ட தகவல்கள், குழுவில் இடம்பெற்றவர் என்ற தகவல்களே அதில் வெளியிடப்பட்டிருந்தன. அச்செய்தியில் எந்த
உள்நோக்கமும் இல்லை
2. கருத்துக்களை பொருத்த வரை - இச்செய்தி குறித்த அனைத்து கருத்துக்களும் - தங்களின் கருத்துக்கள் உட்பட - வெளியிடப்பட்டுள்ளன.
3. விவாதம் தங்களின் கருத்து மூலமே துவங்கியது (கருத்து எண் 5) என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதனைத் (Comment reference
no.15715) தொடர்ந்தே வார்ட் எண் 1 உறுப்பினர் ஏ. லுக்மான் அவர்களின் விளக்கம், அதற்கான தங்களின் பதில், பிறரின் கருத்து என நீடித்தது.
இதில் இணையதளத்தைக் குறை கூறுவது நியாயமில்லை என்பதனைத் தெரிவித்து கொள்கிறோம்.
|