உள்ளாட்சித் தேர்வு முடிவுகளும், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமும், பால் விலை - பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தல், கல்வி - வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு மத்திய - மாநில அரசுகளைக் கோரியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், 30.12.2011 வெள்ளிக்கிழமை இரவு 07.00 மணிக்கு காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அக்கட்சியின் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.நாஸர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அதன் மாவட்ட தலைவர் பி.மீராசா மரைக்காயர், நகரச் செயலாளர் ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், நகர துணைத்தலைவர் ஹாஜி எஸ்.டி.கமால், எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம், தூத்துக்குடி மாவட்ட கவுரவத் தலைவர் எம்.அப்துல் கனி, மாவட்ட பொருளாளர் வடக்கு ஆத்தூர் ஷாஹுல் ஹமீத், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் ஹாஜி ஆர்.பி.எஸ்.ஷம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் அப்துல் ஹக் ஃபைஸல் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். நகர துணைச் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன் உரையாற்றினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை, கட்சியின் மூத்த நிர்வாகிகள் நிர்வகிக்கட்டும் என்றும், புனிதர் வேடமணிந்து வெளியிலிருப்போர் தேவையின்றி கட்சி நிர்வாக நடவடிக்கைகளில் தலையிடத் தேவையில்லை என்றும் பேசிய அவர், கடந்த உள்ளாட்சித் தேர்தலில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஒவ்வொரு நடவடிக்கையிலும் அரசியல் கட்சிகளுடன் சரியான முறையில் கலந்தாலோசனை செய்துகொள்ளாமல் செயல்பட்ட காரணத்தால்தான் தோல்வியை சந்திக்க நேர்ந்ததாகவும் தெரிவித்தார்.
அடுத்து உரையாற்றிய அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப், காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் முஸ்லிம் லீக் முயற்சியுடன் 70 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வந்த மேம்பாட்டுப் பணிகள், எவ்வித காரணமுமின்றி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்ததுடன், விரைவில் அப்பணிகள் தொடரப்படாவிட்டால், பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டும் என்று எச்சரித்தார்.
பின்னர், கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர்களான காயல் மகபூப் உரையாற்றினார். நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலையும், நடப்பு நகராட்சி நிர்வாகத்தையும் மையப்படுத்தி அவர் ஆற்றிய உரை பின்வருமாறு:-
காயல்பட்டினத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது... நமதூரின் அனைத்து ஜமாஅத்துகளையும், பொதுநல அமைப்புகளையும் உள்ளடக்கிய காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் மிஸ்ரிய்யா என்ற வேட்பாளர் பஸ் சின்னத்தில் நிறுத்தப்பட்டார்... அதே நேரத்தில், ஊர் ஒற்றுமையைப் பற்றி சிறிதும் கவலைப்படாத ஒரு கூட்டத்தின் ஆதரவுடன் ஆபிதா களத்தில் நின்று வெற்றி பெற்று, இன்று நகராட்சித் தலைவியாக இருந்து வருகிறார்...
இதுவரை நம்முடைய ஜமாஅத்துகளால் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாச்சித்தம்பியாகட்டும், வஹீதாவாகட்டும், செய்யது அப்துர்ரஹ்மான் ஹாஜியாகட்டும்... இவர்களெல்லாம் நமது ஜமாஅத்துகளை மதித்து செயல்பட்டார்கள்... அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் நமதூர் மக்களுக்குத் தெரியும்... ஜமாஅத்துகளுக்குத் தெரியும்... பொதுநல அமைப்புகளுக்குத் தெரியும்...
ஆனால் இன்று பதவியில் இருக்கும் நகர்மன்றத் தலைவரை ஒரு சிலர் இயக்கிக் கொண்டிருக்கின்றனர்... அவரது செயல்பாடுகள் அனைத்தும் மூடகமாகவே உள்ளது... வெளிப்படையான நிர்வாகத்தைத் தருவேன் என்று சொன்னவர்கள் ஏன் அதைச் செய்யவில்லை? ஊரின் ஒற்றுமை இன்று சீர்குலைக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணமானவர்கள் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஊருக்காக பல்லாண்டு காலமாக பாடுபட்டு வருவோரை ஏளனமாக விமர்சித்தும், இணையதளங்களில் எழுதியும் வருவோருக்கு, தம் தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கும் நேரம் வந்துவிட்டதாக எச்சரித்தார்.
நிறைவில், அனைவரும் ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும் என்ற வேண்டுகோளுடன் அவரது உரையை நிறைவு செய்தார்.
அவரைத் தொடர்ந்து, அக்கட்சியின் மாநில செயலாளர் நெல்லை மஜீத், மாநில பொதுச்செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். (மாநில பொதுச்செயலாளரின் உரை தனிச்செய்தியாக வெளியிடப்படும்.)
நிறைவாக, நகர துணைச் செயலாளர் எம்.எச்.அப்துல் வாஹித் நன்றி கூற, ஹாஃபிழ் எஸ்.எல்.ஷெய்கு அப்துல் காதிர் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
செய்தி திருத்தப்பட்டது. (06.01.2012 - 17:51hrs) |