காயல்பட்டினம் நகர்மன்றத்தின் டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திர சாதாரண கூட்டம் 30.12.2011 அன்று மதியம் 02.00 மணிக்கு, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்,
நகராட்சிக்கு சொந்தமான வாகன பராமரிப்பு - பழுது நீக்கம்,
காலியாகவுள்ள பணியிடங்களுக்கு புதிய பணியாளர்கள் நியமனம்,
நகராட்சி அலுவலகத்திலுள்ள கணனி கருவிகளுக்கு வருடாந்திர பராமரிப்பு கொடுத்தல்,
இரண்டாம் நிலை நகராட்சியாக தர உயர்வு பெற்றுள்ள காயல்பட்டினம் நகராட்சியை உள்ளூர் திட்டக்குழும பகுதியாக அறிவிப்பு செய்து, முழுமைத்திட்டம் தயார் செய்து, அரசுக்கு அனுப்பி வைக்குமாறு நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் (திருநெல்வேலி) அனுப்பிய கடிதம் குறித்து பரிசீலித்து முடிவு செய்தல்,
தாயிம்பள்ளி அருகில் பயணியர் நிழற்குடை அமைக்க ஒப்பந்தப்புள்ளி அளித்தல்,
திடக்கழிவு மேலாண்மைக்காக IUDM 2011-12 திட்டத்தின் கீழ் புதிய வாகனங்கள் வாங்கல்,
திறந்தவெளி மனிதக்கழிவு கழிக்கும் நிலையகற்ற, சேதமான பொதுக்கழிப்பறைகளை சரிசெய்தல், கழிப்பறை இல்லாத இடங்களுக்கு புதிதாக கட்டிக்கொடுத்தல்,
நகராட்சி நிர்வாக ஆண்டறிக்கையை மன்றத்தில் பதிவு செய்தல்,
நகராட்சி அலுவலக முன்பகுதி நுழைவாயிலிலுள்ள மரத்தில் வசிக்கும் பறவைகள் எச்சம் போடுவதால், வருவோர் - போவோருக்கு ஏற்படும் இடைஞ்சலை அகற்ற அப்பகுதியில் ஃபைபர் தகடால் ஆன மேற்கூரை அமைத்தல்,
ஆகிய கோரிக்கைகள் நகராட்சி நிர்வாகத்தால் கோரப்பட்டது.
மஹலரா நகர் குடியிருப்புக்கு புதிய சாலை அமைத்தல்,
முத்தாரம்மன் கோயில் தெரு நடுவில் அமைந்துள்ள அபாயகரமான மரத்தை அகற்றல்,
உடைந்து, அபாய நிலையிலிருக்கும் மின்மாற்றி (ட்ரான்ஸ்ஃபார்மர்), மின் கம்பங்களை அகற்றி புதியன நிறுவல்,
புதிய குடியிருப்புகளுக்கு புதிய மின் கம்பங்கள் நட்டி, மின் விளக்கு நிறுவல்,
குலாம் சாகிப் தம்பி தோட்டம் புதிய குடியிருப்புகளுக்கு புதிய சாலை அமைத்தல்,
அனைத்து தெரு விளக்குகளுக்கும் ஸ்விட்ச் பெட்டிகளை மாற்றல்
ஆகிய கோரிக்கைகளை, 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி முன்வைத்தார்.
பெரிய நெசவுத் தெரு செய்யது காலனி பகுதிக்கு புதிய சிமெண்ட் சாலை அமைத்தல்,
குண்டும் குழியுமாக இருக்கும் பெரிய நெசவுத் தெருவிற்கு புதிய தார் சாலை அமைத்தல்
கே.டி.எம். தெருவில் - நகராட்சிக்குப் பாத்தியப்பட்ட இடத்தில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றல்,
குடிநீர் வினியோகத்திற்காக பெரிய நெசவுத் தெரு பகுதியில் அமைக்கப்பட்ட புதிய பிவிசி குழாய்களை ஏற்கனவே அமைக்கப்பட்ட பழைய குழாய் மட்டத்தில் அமைத்து, குடிநீர் வினியோகத்தை சீராக்கல்,
ஒருவழிப்பாதை சம்பந்தமாக நெசவுத் தெரு ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள், முன்னாள் நிர்வாக அதிகாரி அ.மு.செய்யது முகம்மது 17.09.1990 அன்று வெளியிட்ட ஆணையில் குறிப்பிட்ட வழித்தடத்தின் படி நடைமுறைப்படுத்துமாறும், இக்கூட்டத்தில் இதுகுறித்து பரிசீலிக்குமாறும் தெரிவித்ததன் அடிப்படையில் அதுகுறித்து பரிசீலித்தல்,
ஆகிய கோரிக்கைகளை, 11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் முன்வைத்தார்.
சுனாமி நகர் பகுதி மீனவ மக்கள் வசதிக்காக கடற்கரையில் 10 புதிய மின்கம்பங்கள் அமைத்து, தெருவிளக்குகள் நிறுவல்,
சிங்கித்துறை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு பாதுகாப்பாக சுற்றுச்சுவர் அமைத்தல்,
சிங்கித்துறை தென்புற மக்கள் வசதிக்காக, சிங்கித்துறை சாலையின் குறுக்கே ஈக்கியப்பா தைக்கா வரை புதிய சாலை அமைத்தல்,
கீழநெய்னார் தெருவில் பழுதடைந்துள்ள மின்கம்பங்களை அகற்றல்,
ஈக்கியப்பா தைக்கா தெரு பகுதியில் எரியாத மின் விளக்குகளை எரியச் செய்தல்,
சிங்கித்துறை பகுதியிலுள்ள ஒரு வீட்டின் மேற்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆபத்தான மின் கம்பி வடங்களை (வயர்) உயர்த்தி அமைத்தல்,
சிங்கித்துறையிலிருந்து கடற்கரை பூங்கா வரை செல்லும் பகுதியில் கடற்கரை ஓரங்களிலுள்ள முட்புதர், குப்பைகளை அகற்றல்
ஆகிய கோரிக்கைகளை 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி முன்வைத்தார்.
குத்துக்கல் தெரு சாலையில் மழை நீர் அதிகம் தேங்குவதால், அங்கு இருக்கும் சாலையை அகற்றி, புதிய தார் சாலை அமைத்தல்,
காட்டு தைக்கா தெரு அன்னை ஸ்டோர் முதல் முஹ்யித்தீன் பள்ளி வரையுள்ள பழுதான சாலையை அகற்றி, புதிய தார் சாலை அமைத்தல்,
காட்டு தைக்கா தெருவில் ஆபத்தான நிலையிலிருக்கும் 2 மின் கம்பங்களை அகற்றி, புதியன நிறுவல்,
மொகுதூம் பள்ளி மையவாடி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை செயல்படச் செய்தல்
ஆகிய கோரிக்கைகளை, 17ஆவது வார்டு உறுப்பினர் அபூபக்கர் அஜ்வாத் முன்வைத்தார்.
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் மாதாந்திர கூட்டம் மற்றும் சிறப்புக் கூட்டத்தை உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளில் வசிக்கும் காயலர்கள் காண்பதற்கு வசதியாக அவற்றை நேரலை செய்ய, காயல்டுடே வலைதளத்திற்கு அனுமதி வழங்கல்,
சொத்து மற்றும் இதர வரியினங்களை ஆன்லைன் மூலம் செலுத்த ஆவன செய்தல்,
ஆதரவின்றி தெருக்களில் சுற்றித் திரியும் ஆடு, மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளல்,
நகர்மன்றத்தின் ஆண்-பெண் உறுப்பினர்களுக்கு பிரதிநிதியாக வருவோர் அலுவலக வேலைகளில் ஈடுபட தடை செய்தல்,
கடையக்குடி, கற்புடையார்பள்ளி வட்டம் பகுதியிலிருந்து வெளியூர்களுக்கு மூன்று மற்றும் நாற்சக்கர வாகனங்களில் மீன் எடுத்துச் செல்வோருக்கு நகராட்சியின் சார்பில் வரி விதித்தல்,
நகராட்சி பணியாளர்கள் தமது வருகையை பயோமெட்ரிக் எனும் கைரேகை கருவியில் பதிவு செய்ய ஏற்பாடு செய்தல்,
நகராட்சி பகுதிகளில் குடிநீர் திறப்பு நேரம், நீர்த்தேக்கத் தொட்டிகளில் குடிநீர் சேகரிப்பு நேரம், சேகரிக்கப்படும் குடிநீரின் ஒருநாள் மொத்த அளவு, குடிநீர் திறக்கும் பணியாளர்கள் எண்ணிக்கை, அவர்களின் பணி விபரங்கள் ஆகியவற்றை சமர்ப்பித்தல்
ஆகிய கோரிக்கைகளை, 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் முன்வைத்தார்.
சீரான குடிநீர் வினியோகம்,
ரெட் ஸ்டார் சங்க வளாகமருகில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு மேல் மூடியமைத்து, அசுத்தங்களைத் தாங்கிய மழை நீர், விஷ உயிரினங்களின் தீவினைகளிலிருந்து பாதுகாத்தல்,
1985இல் கட்டப்பட்ட அந்த நீர்த்தேக்கத் தொட்டிக்கு இன்று வரை வெண்பூச்சு அடிக்காதிருப்பதைக் கருத்திற்கொண்டு விரைவில் வெண்பூச்சு அடித்தல்,
அதனைச் சுற்றியுள்ள மூடப்படாத வால்வு தொட்டிகளை பாதுகாப்பான முறையில் மூடல்,
அத்தொட்டியின் பழுதடைந்துள்ள சுற்றுச்சுவரை சரிசெய்தல்,
ரெட் ஸ்டார் சங்க வளாக தொட்டி மட்டுமின்றி காயல்பட்டினத்தின் அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளிலும் இதே நிலை நிலவுவதால், அவையனைத்திலும் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளல்,
குடிநீர்த் தொட்டிகள் அமைந்துள்ள வளாகத்தை சுத்தம் செய்து, நல்ல மரக்கன்றுகளை நட்டு வளர்த்தல்,
09ஆவது வார்டுக்குட்பட்ட தெருக்களிலுள்ள - அடிப்பகுதி சிதிலமடைந்து பெரும் விபத்தை எதிர்பார்த்திருக்கும் மின் கம்பங்களை விரைந்தகற்றி, புதிய கம்பங்களை நிறுவல்,
இதுபோன்ற அம்சங்களில் நகராட்சி நிர்வாகத்திற்கும், காயல்பட்டினம் மின் வாரிய அலுவலகத்திற்குமிடையில் நிலைவும் புரிந்துணர்வின்மையினைப் போக்க நல்ல செயல்திட்டத்தை வடிவமைத்தல்,
புதிதாக அமைக்கப்பட்ட மின் கம்பங்களில் தெரு விளக்குகள் பொருத்துதல்,
தினமும் குப்பைகளை சேகரிக்க வண்டி மற்றும் ஊழியர்களை முறைப்படி அனுப்பல்,
பொது நடைபாதைகள் மற்றும் பள்ளிவாசல் செல்லும் வழிகளில் குப்பைகளைக் கொட்டி சீர்கேட்டை ஏற்படுத்துவோர் மீது எச்சரிக்கையுடன் கூடிய நடவடிக்கையை மேற்கொள்ளல்,
வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள மக்களைப் பதிவு செய்ய ஆவன செய்தல்,
குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள் புதிதாகப் பெற்றிட, பழைய ஆவணங்களில் பெயர் திருத்தம் - நீக்கம் உள்ளிட்டவற்றைச் செய்திட குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறப்பு முகாம்களை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளல்,
ப்ளாஸ்டிக் ஒழிப்பை தீவிரமாக கடைப்பிடித்தல், குப்பைகளை மக்கும் குப்பை - மக்காத குப்பை என தரம் பிரித்திட பொதுமக்களை வலியுறுத்தல், அதற்கான பயிற்சிகளை அவர்களுக்கு வழங்கல், குப்பையை உரமாக்கும் செயல்திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டல்,
அப்பா பள்ளித் தெரு, மரைக்கார் பள்ளித் தெரு பழைய சாலைகளை கிழமேலாக இருபுறமும் முறைப்படி தோண்டியெடுத்து அப்புறப்படுத்தி, புதிய தார் சாலைகளை தரமாக அமைத்தல்,
வார்டு பகுதியில் நூலகம் அமைத்தல்
ஆகிய கோரிக்கைகளை 09ஆவது வார்டு உறுப்பினர் ஹைரிய்யா முன்வைத்தார்.
சாலை வசதி,
புதிய தெரு விளக்கு அமைத்தல்,
முறையாக குப்பைகளை அகற்றல்,
வாரம் இரு முறையேனும் குடிநீர் வழங்கல்,
தண்ணீர் குழாய்களிலுள்ள அடைப்புகளை சரிசெய்து, தொட்டிகளை மூடி வைத்தல் மற்றும் சீரமைத்தல்,
செக்ஷன் வால்வு அமைத்து முறையாக குடிநீர் வினியோகித்தல், குடிநீர் வினியோக பொதுக்குழாய் அமைத்தல்,
லெட்சுமிபுரத்தில் பழுதான மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைத்தல்,
மின்மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவதைத் தடுத்து, தினசரி மின்தடை செய்யப்படும் நேரத்தில் குடிநீர் வினியோகம் செய்தல்,
புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்போது அப்பகுதி நகர்மன்ற உறுப்பினருக்கு முறைப்படி முன்னறிவிப்பு செய்தல்
ஆகிய கோரிக்கைகளை, 14ஆவது வார்டு உறுப்பினர் பாக்கியஷீலா முன்வைத்தார்.
தைக்கா தெரு, புதுக்கடைத் தெருவில் பழுதடைந்துள்ள சாலைகளை சரிசெய்தல்,
புதுப்பள்ளிவாசல் அருகில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளல்,
மருத்துவர் தெரு, மேலப்பள்ளி தெருக்களுக்கு புதிய சாலை அமைத்தல்,
எரியாத தெரு விளக்குகளை எரியச் செய்தல்,
சாக்கடை கலந்து வரும் தண்ணீரைத் தடுத்து நிறுத்தி, சுத்தமான குடிநீர் வினியோகித்தல்,
உடைபட்டுள்ள குடிநீர் வினியோகக் குழாய்களை சரிசெய்தல்,
தைக்கா தெருவில் திறந்த நிலையிலுள்ள குடிநீர் வினியோக திறப்பு தொட்டிக்கு மூடி அமைத்தல்,
அரசு மருத்துவமனையருகில் திறந்த நிலையிலுள்ள குடிநீர் பொது வினியோகக் குழாய்க்கு மூடி அமைத்தல்
ஆகிய கோரிக்கைகளை, 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன் முன்வைத்தார்.
தேங்காய் பண்டகசாலை நீர்த்தேக்கத் தொட்டி, ரெட் ஸ்டார் சங்க நீர்த்தேக்கத் தொட்டிகளை பழுது நீக்கல், அவற்றில் மேல் மூடிகள் நிறுவல்,
மின் விளக்கு இல்லாத அல்லது எரியாத மின் கம்பங்களில் புதிய மின் விளக்குகளைப் பொருத்தல்,
சுற்றுலாத் துறை மூலம் பெற்றிடும் ரூபாய் ஐம்பது லட்சம் நிதியைக் கொண்டு, காயல்பட்டினம் கடற்கரை தென்பகுதியில் உயர்கோபுர மின் விளக்கு அமைத்தல், கடற்கரையில் பொதுமக்கள் வசதிக்காக கழிப்பறையை சரிசெய்தல், குடிநீர் ஏற்பாடுகளைச் செய்தல், சுற்றுலாத்துறை நிதியைக் கொண்டு இவற்றைச் செய்யவியலவில்லையெனில், நகராட்சி பொது நிதியிலிருந்து செய்தல்,
58 ஆண்டுகள் பழமைவாய்ந்த நகராட்சி அலுவலகத்தில், மிகவும் சிதிலமடைந்துள்ள நகர்மன்றத் தலைவருக்கான வடபுற அறை, அதனையொட்டிய நகர்மன்ற கூட்டரங்கு ஆகியவை அடங்கிய கட்டிடத்தை முற்றிலுமாக அகற்றி, புதிய கட்டிடம் அமைக்க ஆவன செய்தல்,
செயல்படாமலிருக்கும் தெருவிளக்கு தானியங்கி சுவிட்சுகளை சரிசெய்தல்
ஆகிய கோரிக்கைகளை 08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய் முன்வைத்தார்.
நகர்மன்றத் தலைவரின் கூட்டப் பொருள்:
காயல்பட்டினம் நகராட்சி பகுதிக்குட்பட்ட தெரு விளக்குகளை பராமரிக்கும் பொருட்டு மின்கம்பம் ஒன்றுக்கு வழங்கப்படும் ரூ.2 என்ற கட்டணத்தை உயர்த்தல்,
நகராட்சி பணியாளர்களின் அலுவலக வருகையை விரல் ரேகையுடன் பதிவு செய்ய, பயோமெட்ரிக் முறையை நடைமுறைப்படுத்தல்,
நகர்மன்ற நிர்வாகத்தை வெளிப்படையாக நடத்திடும் பொருட்டு, கூட்ட நடப்புகளை வீடியோ பதிவு செய்து, அவற்றை குறுந்தகடுகளாக்கி, அவற்றை உள்ளூர் தொலைக்காட்சிகளுக்கும், வலைதளங்களுக்கும், இதர ஊடகங்களுக்கும் தரல்,
ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமையன்று மாலை 03.00 மணி முதல் 05.00 மணி வரை மக்கள் குறை அறியும் கூட்டத்தை, அலுவலர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடத்தல்
ஆகிய கூட்டப் பொருட்களை நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா முன்வைத்தார்.
கூட்டத் துளிகள்...
*** சென்ற நகர்மன்றக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் எதுவும் செயல்படுத்தப்படாததால் புதிய கோரிக்கைகள் எதையும் முன்வைக்க விரும்பவில்லை என 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் தெரிவித்தார்.
*** தான் கேட்ட முக்கிய விபரங்களை கூட்டப் பொருளில் சேர்க்காமல் விட்டதை வன்மையாகக் கண்டிப்பதாகவும், அவற்றை ஊடகங்களில் தனிச்செய்தியாக வெளியிடப் போவதாகவும், 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தெரிவித்தார்.
*** முஸ்லிம்களின் சட்ட முறைப்படியான ‘ஹிபா‘ எனும் நன்கொடைப் பத்திரத்தை - பதிவுச் செலவின்றி பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு வழங்கும் பாரம்பரியமிக்க நடைமுறையை கவனத்தில் கொள்ளாமல், அது தொடர்பானவற்றில் தொடர்ந்து நகராட்சி காலம் தாழ்த்தி, பொதுமக்களுக்கு வீண் செலவை ஏற்படுத்துவதாகவும், இதுகுறித்து தான் வழங்கிய கோரிக்கையை கூட்டப் பொருளில் சேர்க்காமல் விட்டதையும் தான் வன்மையாகக் கண்டிப்பதாக, 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் என்ற ஹாஜியார் மம்மி தெரிவித்தார்.
*** கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, இடையிடையே உறுப்பினர்களுக்கு கைபேசி அழைப்புகள் வந்துகொண்டிருந்த காரணத்தாலும், ஒலிபெருக்கி வசதிகள் செய்யப்படாததாலும், உறுப்பினர்களின் முக்கிய கோரிக்களை பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தெளிவுற கேட்க வாய்ப்பற்றுப் போனது.
*** தேவைப்படும் விளக்கங்களை நகராட்சி நிர்வாகம் சார்பில், ஹெட் க்ளெர்க் சக்தி குமார், சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜன் ஆகியோர் வழங்கினர்.
*** கூட்டம் நடந்துகொண்டிருக்கையில் கருத்து தெரிவித்த 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி, இப்புதிய நகர்மன்றத்தில் இருவர் தவிர மற்றவர்கள் அனைவரும் புதியவர்கள் என்றும், எனவே தமது அதிகார உச்சவரம்பு என்ன என்பன குறித்து தெரிய ஆவலுறுவதாகவும், அதற்கான பயிற்சிப் பட்டறைக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
*** பல்வேறு அம்சங்களைக் குறிப்பிட்டுக்காட்டிய 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு, நகர்மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காமல் நகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாக எதையும் கூட்டப்பொருளில் இணைக்கக் கூடாது என்று தெரிவித்தார்.
*** பொது கழிப்பறைகள் கட்டுவதற்கான இடங்கள் பார்வையிட்டு முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை மறுத்துப் பேசிய 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான், “ஓரிடத்தில் நகராட்சி ஆய்வுக்குச் சென்றால், அப்பகுதி நகர்மன்ற உறுப்பினருக்கு அவசியம் தகவல் அளிக்க வேண்டும். ஆனால், என் வார்டுக்குட்பட்ட பகுதியும் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. எனக்கோ தகவலே இல்லை...” என்றார். அக்கருத்தை அனைத்து உறுப்பினர்களும் ஆமோதிக்கும் வகையில் ஆதரவு முழக்கம் எழுப்பினர்.
*** நகர்மன்றத்தின் ஆண்-பெண் உறுப்பினர்களுக்கு பிரதிநிதியாக வருவோர் அலுவலக வேலைகளில் ஈடுபட தடை செய்ய வேண்டும் என்ற 05ஆவது வார்டு உறுப்பினர் ஜஹாங்கீரின் கோரிக்கை குறித்து நீண்ட நேரம் காரசாரமான விவாதம் நடைபெற்றது. 03ஆவது வார்டு உறுப்பினர் சாரா உம்மாள், 08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய் ஆகியோர் அதை வன்மையாகக் கண்டித்துப் பேசினர்.
தாம் பெண்களாக இருப்பதால், தமது பொறுப்புகளை தம் நெருங்கிய உறவினர்களான ஆண்களைக் கொண்டுதான் செய்ய வேண்டியிருக்கிறது என்றும், அதற்காக தங்கள் உறவினர்கள் நகர்மன்றத்திற்கு வருவதை யாரும் தடுக்கத் தேவையில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அதை மறுத்துப் பேசிய உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், அப்படி வருவோர் தம் வேலையை முடித்துவிட்டு செல்லாமல், அலுவலக நடவடிக்கைகளையெல்லாம் உற்றுநோக்கிக் கொண்டு, வெளியிடங்களில் அதுகுறித்து தவறான தகவல்களைப் பரிமாறுவதை அறிந்தே தான் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவித்தார்.
*** கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும், 03ஆவது வார்டு உறுப்பினர் சாரா உம்மாள் தன் சார்பில் பிஸ்கட் வழங்கினார்.
*** கூட்டத்தை நகர பொதுமக்கள் சுமார் 20 பேர் பார்வையாளர்களாக, கூட்டரங்கின் வெளிப்பகுதியில் நின்ற நிலையில் பார்வையிட்டனர்.
செய்தி திருத்தப்பட்டது. (05.01.2012 - 09:17hrs) |