செய்தி எண் (ID #) 7815 | | |
வியாழன், ஐனவரி 5, 2012 |
“என் கோரிக்கைகளை கூட்டப்பொருளில் சேர்க்காதது ஏன்...?” நகர்மன்ற உறுப்பினர் ஏ.லுக்மான் அறிக்கை! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 4870 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (27) <> கருத்து பதிவு செய்ய |
|
30.12.2011 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றத்தின் மாதாந்திர கூட்டத்தில் தன் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கூட்டப் பொருளில் (அஜென்டாவில்) சேர்க்காமல் புறக்கணித்தது ஏன் என 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் அதே கூட்டத்தில் கேள்வியெழுப்பியதோடு, தான் கேட்ட விபரங்களை தன் வார்டுக்குட்பட்ட பொதுமக்களுக்கும், செய்தி ஊடகங்களுக்கும் கொடுக்கப்போவதாக தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில் அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.
நகராட்சியின் சார்பில் நடத்தப்படும் கூட்டங்களுக்கான அஜெண்டாவில் (கூட்டப் பொருளில்) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விஷயங்களை மன்ற உறுப்பினர்கள் முற்கூட்டியே ஆணையரிடம் சமர்ப்பித்து, அது கூட்டப் பொருளில் சேர்க்கப்படுவது வழக்கம். அதைப் பயன்படுத்தி, உறுப்பினர்கள் தத்தம் பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள், தேவைப்படும் விளக்கங்கள் குறித்து கோரிக்கை வைப்பர். அவை கூட்டப்பொருளில் இடம்பெறும்.
சென்ற 22.11.2011 அன்று நடைபெற்ற கூட்டத்தில், என் வார்டுக்குத் தேவையான கோரிக்கைகள் அஜென்டாவில் சேர்க்கப்பட்டு, அவை நிறைவேற்றப்படுவதற்கு கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையிலும், அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற எந்தவித முன்முயற்சியும் மேற்கொள்ளப்படாததால், 30.12.2011 அன்று நடைபெற்ற இந்த மாதக் கூட்டத்தில் 01ஆவது வார்டு சம்பந்தமான எந்தக் கோரிக்கையும் வைக்காமல், பொதுவாக மன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் அறிந்துகொள்ளும் பொருட்டு நகராட்சி சம்பந்தமான சில விபரங்களை அஜென்டாவில் சேர்க்கும்படி 23.12.2011 அன்று ஆணையரிடமும், நகர்மன்றத் தலைவரிடமும் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை வைத்தேன்.
அஜென்டாவில் சேர்க்கப்பட வேண்டிய விஷயங்களை ஆணையரும, நகராட்சித் தலைவரும் கலந்துதான் முடிவு செய்வது வழக்கம். ஆனால், என்னுடைய - நியாயமாக மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்களை அஜென்டாவில் சேர்க்காமல் ஆணையர் தன்னிச்சையாக நிராகரித்துவிட்டார்.
ஆகையால், மக்கள் அறிந்துகொள்வதற்காக அந்தக் கோரிக்கைகளை அறிக்கையாக இதன் மூலம் வெளியிடுகிறேன்.
நான் கேட்ட விபரங்கள் பின்வருமாறு:-
வருவாய் பிரிவு:
01. 2010-11ஆம் வருடத்தில் வசூலான வீட்டு வரிகள் எவ்வளவு? நிலுவையில் உள்ள வீட்டு வரி பாக்கி எவ்வளவு?
02. 2010-11ஆம் வருடத்தில் HOUSE PLANக்காக வசூலிக்கப்பட்ட தொகை எவ்வளவு? எத்தனை PLAN பாஸ் பண்ணப்பட்டது? எத்தனை நிலுவையில் உள்ளது என்ற விவரம்.
03. குடிநீர் இணைப்புகள் ஊரில் மொத்தம் எத்தனை உள்ளது? 2010-11இல் வசூலான தொகை எவ்வளவு? வசூலாகாத பாக்கி எவ்வளவு?
04. குடிநீர் இணைப்புக்காக 2010-11இல் வசூலிக்கப்பட்ட தொகை எவ்வளவு? 2011-12இல் நடப்பு மாதம் வரை வசூலிக்கப்பட்ட தொகை எவ்வளவு? எத்தனை இணைப்புக்கள் கொடுக்கப்படாமல் உள்ளது என்ற விபரம்?
05. 2010-11ஆம் ஆண்டில் நகராட்சி கிடைத்த இதர வருவாய்களின் விவரம்? இனம் வாரியாக தெரிவிக்கவும். (கடைகள், மார்க்கெட். ஏலம் போன்றவைகள்)
06. நகராட்சி பெயரில் எந்தெந்த வங்கிகள் கணக்கு உள்ளது. இன்றைய தேதியில் உள்ள மொத்த நிதி இருப்பு எவ்வளவு?
செலவின பிரிவு:
07. 2010-11ஆம் ஆண்டிற்கான செலவினங்கள் பட்டியல் பெயர் விவரத்துடன் தரவும்.
08. தெருவிளக்கு பராமரிப்பு வகைக்காக கடந்த 3 ஆண்டுகளில் செலவான தொகை வருட வாரியாக தெரிவிக்க வேண்டியது. எத்தனை தெரு விளக்குகள் உள்ளது என்ற விபரம் தெரிவிக்கவும்.
09. குடிநீர் வகைக்காக TWAD (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) க்கு செலுத்தப்படும் வருடத்தொகை எவ்வளவு?
10. குடிநீர் குழாய்கள் பராமரிப்பு வகைக்காக கடந்த ஆண்டு செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு?
11. DEPRECIATION என்ற தலைப்பில் என்னென்ன செலவு இனங்கள் உள்ளது என்பதையும் அதற்காக செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்பதையும் தெரிவிக்கவும்.
12. 2010-11ஆம் ஆண்டிற்கான நகராட்சியின் ஆடிட்டிங் ரிப்போர்ட்டை மன்றக் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டியது.
DCW:
13. DCW தொழிற்சாலையிலிருந்து நகராட்சிக்கு எந்தெந்த வகையில் எவ்வளவு வருமானம் வருகிறது?
14. DCW தொழிற்சாலைக்கு நகராட்சி என்னென்ன வசதிகளை செய்து கொடுத்திருக்கிறது?
15. மக்கள் சேவை மையம் ஏற்படுத்தி பொதுமக்களிடமிருந்து பெறப்படும் எல்லா மனுக்களுக்கும் ரசீது கொடுத்து குறிப்பிட்ட காலவரையறைக்குள் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வசதி செய்யப்பட வேண்டும்.
16. நகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களின் விபரம் என்ன? அந்த காலியிடங்களுக்கு பணியாளர்கள் நியமிக்க ஆவணம் செய்ய வேண்டும். உள்ளுர்வாசிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
17. சென்ற மாதக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது எடுக்கப்பட்ட மேல்நடவடிக்கை விபரங்கள் தெரிவிக்கவும்.
மேற்கண்டவாறு நான் கோரிய விபரங்கள் அமைந்திருந்தன.
இவ்வாறு காயல்பட்டினம் 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |