பழைய நிகழ்வுகள் அனைத்தையும் மறந்து, இனி வருங்காலங்களில் இணைந்து செயலாற்றி, ஊரை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என, கடந்த டிசம்பர் 30ஆம் தேதியன்று காயல்பட்டினத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் உரையாற்றினார்.
உள்ளாட்சித் தேர்வு முடிவுகளும், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமும், பால் விலை - பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தல், கல்வி - வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு மத்திய - மாநில அரசுகளைக் கோரியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், 30.12.2011 வெள்ளிக்கிழமை இரவு 07.00 மணிக்கு காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில், அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஆற்றிய உரை பின்வருமாறு:-
மூன்று முக்கிய அம்சங்களை தலைப்பாகக் கொண்டு இன்று இங்கே பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் முதலாவது, உள்ளாட்சித் தேர்தலும், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமும் என்பதாகும்.
உள்ளாட்சித் தேர்தல் வெற்றி:
நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனிச்சின்னத்தில், தனித்து களம் கண்டது. மொத்தம் 421 உள்ளாட்சி பொறுப்புகளுக்குப் போட்டியிட்டு, 123 இடங்களை முஸ்லிம் லீக் வென்றுள்ளது.
நகரசபை உறுப்பினர்களாக 20 பேர், பேரூராட்சி உறுப்பினர்களாக 22 பேர், ஒன்றிய கவுன்சிலர்களாக 4 பேர், ஊராட்சி தலைவர்களாக 12 பேர், ஊராட்சி துணைத்தலைவர்களாக 4 பேர், ஊராட்சி உறுப்பினர்களாக 61 பேர் வெற்றி பெற்றுள்ளனர். கட்சியின் கடந்த 40 ஆண்டு கால வரலாற்றில், இது மிகப்பெரிய வெற்றி என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
காயல்பட்டினத்தைப் பொருத்த வரை அரசியல் கட்சிகள் போட்டியிட தேவையில்லை என்ற நிலை இருந்த காரணத்தால் முஸ்லிம் லீக் போட்டியிடவில்லை. எனினும், முஸ்லிம் லீகின் பாரம்பரிய குடும்பமான கே.வி.ஏ.டி. குடும்பத்தைச் சார்ந்த, கத்தர் காயிதெமில்லத் பேரவை அமைப்பாளர் ஹாஜி கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத் அவர்களின் தங்கை கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, நகரசபை உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.
அதுபோல, சாத்தான்குளம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகரச் செயலாளர் முஹம்மத் இஸ்மாயில், பேரூராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனதாரப் பாராட்டுவதோடு, அவர்களின் மக்கள் நலப் பணிகள் சிறக்க வாழ்த்துகிறது.
இதே இடத்தில் மேடை போட்டு பேசிய சிலர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பற்றி தவறாக நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தல் பற்றியும் பேசியுள்ளனர்.
தனிச்சின்னத்தில் தனித்துப் போட்டி:
இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொருத்த வரை பெரும்பாலும் தனிச்சின்னத்தில்தான் தேர்தல் களம் கண்டுள்ளது. கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரும், தேசிய பொதுச்செயலாளருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் 4 முறை தனிச்சின்னத்தில் போட்டியிட்டிருக்கிறார். திருச்செந்தூர் தொகுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காயல் மகபூப் தனிச்சின்னத்தில் போட்டியிட்டார்.
சில காலகட்டங்களில், அன்றை கால சூழலைக் கருத்திற்கொண்டு சில கட்சிகளின் சின்னங்களில் போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தம் கட்சிக்கு ஏற்பட்டதை மறுப்பதற்கில்லை. எனினும், கூட்டணி கட்சிகளின் சின்னங்களில் போட்டியிட்டபோது கூட முஸ்லிம் லீக் தலைவர்கள் சமுதாயத்தின் உணர்வுகளை நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பிரதிபலித்திருக்கிறார்கள்.
காங்கிரஸ் சின்னத்தில் வெற்றி பெற்றுச் சென்ற முஸ்லிம் லீக் தலைவர் அப்துஸ்ஸமது ஸாஹிப், காங்கிரஸ் மண்டல் கமிஷனை ஆதரிக்காத நிலையிலும், அன்றைய பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு ஆதரவாக வாக்களித்தார் என்பது சரித்திர சான்று.
அதேபோல உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள், மத்ரஸாக்களில் தீவிரவாதம் போதிக்கப்டுகிறது என்று பாரதீய ஜனதா உறுப்பினர் குற்றம் சாட்டியபோது, நானும் ஒரு மதரஸாவிலிருந்து உருவானவன்தான்.. நாட்டில் எந்த மதரஸாவிலும் தீவிரவாதம் போதிக்கப்படவில்லை... அதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன் என்று பேசியதோடு, பாபரி மஸ்ஜித் பிரச்சினையில் நாட்டில் சமய நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு நிலைக்க வேண்டுமென்றால் எல்.கே.அத்வானியே அப்பள்ளியைக் கட்டுவதற்குண்டான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று அவரை வைத்துக்கொண்டே பேசியதும் பாராளுமன்ற அவைக்குறிப்பில் உள்ளனவாகும்.
இப்படியான செய்திகளெல்லாம், புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
சமுதாயக் கட்சியாக தமது கட்சிகளை இனங்காட்டி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட மமக இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றது. இருந்தும், இன்று வரை அது சமுதாயத்திற்காக என்ன செய்துள்ளது என்பதை பட்டியலிட முடியுமா?
தனது கூட்டணி கட்சியான அதிமுக அரசு பதிவியேற்பு விழாவிலிருந்தே அக்கட்சிக்கு தலைவலி துவங்கிவிட்டது. பதவியேற்பு விழாவில் மமக கலந்துகொள்ளாததற்கு, நரேந்திர மோடியின் வருகை காரணமாக சொல்லப்பட்டது. இவர்கள் கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைத்திருந்தால், நரேந்திர மோடியை பதவியேற்பு விழாவிற்கு அழைக்காமல் இருக்கச் செய்திருக்க வேண்டும். முடிந்ததா? இன்று, அதிமுகவில் இக்கட்சி கண்டுகொள்ளப்படாத காரணத்தால், மெல்ல மெல்ல திமுகவின்பால் நகர்ந்துகொண்டிருக்கிறது.
எத்தனை சோதனைகளைத் தாண்டி, சமுதாயத்திற்காக பல சட்டங்களையும், சலுகைகளையும் பெற்றுத் தந்துள்ளது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது வரலாற்றை அறிந்தவர்களுக்குத்தான் தெரியும். அந்த சோதனையான காலகட்டங்களிலெலாம் பக்குவமான முடிவுகளை மேற்கொண்டு, கட்சியையும், கட்சியினரையும், ஏன்... சமுதாயத்தின் மானத்தையும் காத்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
ஆனால், தன் கட்சிக்கு சில இக்கட்டான சூழல் ஏற்பட்டு, சட்டத்தின் பிடியில் நிறுத்தப்பட்டபோது, செய்த வசூலை எப்படி செலவு செய்வது என்று எங்களுக்குத் தெரியாது என்று திருவாய் மலர்ந்தருளியவர்கள்தான் மமக கட்சியின் மாநில தலைமை நிர்வாகிகள்.
முஸ்லிம்களின் ஒற்றுமை:
கடந்த உள்ளாட்சித் தேர்தலில், தமிழகம் தழுவிய அளவில் பல இடங்களிலும் நம் சமுதாயம் ஒற்றுமையின்மை காரணமாக, கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவத்தை இழந்திருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
எப்போதும் முஸ்லிம் ஒருவரே தேர்ந்தெடுக்கப்படும் முத்துப்பேட்டை பேரூராட்சியில், இம்முறை நம் சமுதாயத்தைச் சார்ந்த 7 அமைப்பினர் போட்டியிட்ட காரணத்தால், பெரும்பான்மையாக இருந்தும் முஸ்லிம்களால் அங்கு பிரதிநிதித்துவத்தைப் பெற்றிட இயலாமல் போனது.
இதேபோன்ற நிலைதான், முந்திய உள்ளாட்சித் தேர்தலில் வாணியம்பாடியில் நிகழ்ந்தது. அப்போது நம் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் பல முனைகளில் போட்டியிட்ட காரணத்தால், சமுதாய வாக்குகள் சிதறடிக்கப்பட்டு, திமுகவின் சார்பில் போட்டியிட்ட சிவாஜி கணேசன் என்ற வேட்பாளர் வெற்றி பெற்றார். ஆனால், இம்முறை அந்நிலை ஏற்படாதிருக்க வேண்டும் என்று கருதிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அங்கு தீவிர களப்பணியாற்றியதன் காரணமாக, ஒரு முஸ்லிம் பெண்மணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
காயல்பட்டினம் உள்ளாட்சித் தேர்தல்:
காயல்பட்டினம் நகராட்சித் தேர்தலில், பல தவறான அணுகுமுறைகள், செயல்பாடுகள் காணப்பட்டன. நடந்தது நடந்து முடிந்த விஷயம். எனவே, சமுதாய ஒற்றுமை எங்கே போனது, இந்நிலை ஏற்பட யார் காரணம் என்றெல்லாம் விவாதிக்க நான் விரும்பவில்லை.
இங்கே போட்டியிட்ட மிஸ்ரிய்யாவும் நம்மவர்தான். அவரை எதிர்த்துப் போட்டியிட்டு வென்று, இன்று நகராட்சித் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆபிதாவும் நம்மவர்தான். இவர்கள் இருவருக்கும் வாக்களித்தவர்களும் பெரும்பாலும் நம்மவர்கள்தான். எனவே, இதில் யாரையும் வேறுபடுத்திப் பார்க்க விரும்பவில்லை.
நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இன்னும் ஐந்தாண்டுகளுக்கு இவர்தான் நகர்மன்றத் தலைவர், இவர்கள்தான் நகர்மன்ற உறுப்பினர்கள். எனவே, வரட்டுப் பிடிவாதத்தின் காரணமாக, ஆகாத புராணங்களைப் பேசிக்கொண்டிராமல், ஆக்கப்பூர்வமாக நாம் சிந்தித்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்த ஊரின் பிரஜையாக, நமக்கிடையேயுள்ள கருத்து வேறுபாடுகளைத் தூக்கியெறிந்துவிட்டு, வெற்றிபெற்ற நகர்மன்றத் தலைவி மற்றும் உறுப்பினர்களை வாழ்த்தி வரவேற்பதன் மூலம், இன்னும் ஐந்தாண்டுகளுக்கு நம் நகரில் நடைபெற வேண்டிய நல்ல காரியங்களுக்குத் துணை நிற்க வேண்டும்.
அல்லாமல், குரோத மனப்பான்மையுடன் செயல்பட்டு, அதனால் நகராட்சி நிர்வாகம் செயலிழக்க நேரிட்டால், அந்த விபரீதத்திற்கு நாம் அனைவருமே காரணமாகி விடுவோம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
இந்த ஊரில், எந்த அமைப்பையுமோ, தனி நபர்களையோ ஒதுக்கி வைத்துவிட்டு எந்தக் காரியத்தையும் வெற்றிகரமாகச் செய்திட இயலாது. அனைத்து ஜமாஅத்துகளையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பிலுள்ள ஐக்கியப் பேரவை, வெளிநாடுகளின் காயல் நல மன்றங்கள், மெகா அமைப்பு, ஊரின் ஜமாஅத்துகள் அனைத்தையும் ஒருங்கிணைத்தால்தான் ஊர் முன்னேற்றம் அடைய முடியும்.
ஐக்கியப் பேரவை கவுரவம் பாராமல் நகர்மன்றத் தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து, நகர்நலன் குறித்த விஷயங்களில் அவருடன் தவறாமல் கலந்தாலோசிக்க வேண்டும். வயதில் சிறியவர்கள் பெரியவர்களை மதித்து, அவர்கள் செய்யும் நற்காரியங்களுக்குத் துணை நிற்க வேண்டும். அதுபோல, பெரியவர்கள் - பல திறமைகள் மிக்க இளைஞர்களை தக்கவைத்துக்கொள்ளத் தவறிவிடக்கூடாது. அவர்களையும் இணைத்து காரியமாற்றினால் நிறைந்த பயன் கிட்டும் என்பதில் சந்தேகமில்லை.
புதிய நகர்மன்றத்திற்கு வாழ்த்து:
அந்த அடிப்படையில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா மற்றும் 18 உறுப்பினர்களையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனதார வாழ்த்தி வரவேற்பதோடு, அவர்களின் பணி சிறக்கவும் வாழ்த்துகிறது. அதே நேரத்தில், இவர்களின் பணியில் முறைகேடுகள், தேவையற்ற தொய்வுகள் ஏற்பட்டால், அதை மக்களிடம் வெளிப்படுத்தவும் நாம் தயங்க மாட்டோம் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
வரக்கூடிய காலங்களில் நமதூரிலும் கட்சி சார்பில்தான் தேர்தல் நடக்கும் என்று நான் கருதுகிறேன். அந்நேரத்திலும் எங்கள் கட்சி தோழமை கட்சி, வேண்டிய கட்சி என்றெல்லாம் எந்தப் பாகுபாடும் பாராமல் சமுதாயத்தின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னின்று செய்யும்.
முன்பு எல்.கே. - எம்.கே.டி. தேர்தலில் ஊர் இரண்டு பட்டிருந்த நேரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முயற்சியால் மீண்டும் ஒற்றுமை ஏற்பட்டது என்பதாக முன்பு ஒருமுறை - மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நகரச் செயலாளராக இருந்த - தற்போதைய மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் எம்.எச்.அப்துல் வாஹித் அவர்களின் தந்தை ஹனீஃபா அவர்கள் கூறியது எனது நினைவில் இன்றும் நிழலாடுகிறது.
விலைவாசி உயர்வு:
தற்போதைய அதிமுக அரசில் வக்ஃப் வாரிய மேம்பாட்டிற்காக வேண்டி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஹஜ் மானியம் உயர்த்தப்பட்டுள்ளது. உலமா பென்சன் எண்ணிக்கையும், தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக மனமார வரவேற்கின்றோம்.
அதே நேரத்தில், முஸ்லிம்களைக் கொன்று குவித்த மோடிக்கு வரவேற்பளிப்பது, பி.ஜே.பி. சாயலில் பேசி, அந்த இயக்கத்தோடு தொடர்புகொள்ள முயற்சித்து வருவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அதேபோல, மக்களின் அத்தியாவசிய பொருட்களில் அசாதாரண விலையுயர்வு மக்களை மிகவும் பாதித்திருக்கின்றது. சராசரி மனிதர்கள் மாதத்திற்கு ரூபாய் இரண்டாயிரம் அதிகமாக செலவழிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள். பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை இந்த அரசாங்கம் சந்தித்து வருகின்றது.
எனவே, இந்த விலைவாசி உயர்வை உடனே திரும்பப் பெற்று, மக்கள் மனங்களை வெல்லக்கூடிய முயற்சியில் அதிமுக அரசு இறங்க வேண்டும். இல்லையெனில் மக்களின் மிகப்பெரிய எதிர்ப்புகளை இந்த அரசு சந்திக்க வேண்டி வரும்.
இட ஒதுக்கீடு:
சென்ற திமுக ஆட்சியில் தமிழகத்தில் 3.5 சதவிகிதம் தனி இடஒதுக்கீடு பெற்றோம். மத்திய அரசில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கம் வகித்ததன் காரணமாக சிறுபான்மை நல அமைச்சகம், டாக்டர் ராஜேந்திர சச்சார் குழு, ரங்கநாத் மிஸ்ரா குழு அறிக்கைகளையும் தாக்கல் செய்யப்பட்டு, இந்திய முஸ்லிம்களின் பின்தங்கிய நிலை உலகறியச் செய்யப்பட்டது.
அதே வேளையில் தற்பொழுது ஒட்டுமொத்த சிறுபான்மையினருக்கென 4.5 சதவிகித இட ஒதுக்கீடு அளித்திருப்பது நமக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கின்றது.
மேற்கூறிய குழுக்களின் பரிந்துரைகள் எதையும் ஏற்றுக்கொள்ளாமல் அவசர கோலத்தில் இந்த அறிவிப்பை ஏன் அறிவித்தார்கள் என்று நமக்குத் தெரியவில்லை. இந்திய முஸ்லிம் சமுதாயம் சம உரிமை பெற வேண்டுமெனில், ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரையை ஏற்று, பத்து சதவிகித தனி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். இந்த உரிமையைப் பெற்றிடும் வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து போராடும்.
இன்று காயல்பட்டினத்தில் நடப்பது போல தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி பொதுக்கூட்டங்கள், கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த அறப்போராட்டம் நம் உரிமைகளைப் பெற்றிடும் வரை தொடரும்.
ஷரீஅத் போராட்டத்தில் எப்படி களம் கண்டு வெற்றி பெற்றோமோ அதே போன்று இட ஒதுக்கீடு பிரச்சினையிலும் மக்கள் சக்தியைக் கொண்டு போராடி இறையருளால் வெற்றி பெறுவோம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், எந்த ஆதாரமுமின்றி கைது செய்யப்பட்ட மவ்லவீ ஹாமித் பக்ரீ மன்பஈ, மவ்லவீ அப்துல் மஜீத் மஹ்லரீ ஆகியோரை, அவர்கள் சார்ந்த இயக்கங்களே முழுமையாக கைவிட்டுவிட்ட நேரத்திலும், எந்த குறுகிய வட்டத்திற்குட்பட்டும் அதை நோக்காமல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சமுதாயப் பிரச்சினையாக மட்டுமே அதைக் கருதி, அவர்களை வெளிக்கொணர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது சமுதாய மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிந்த விஷயம்.
தற்போது அறிவித்திருக்கக் கூடிய 4.5 சதவிகித இட ஒதுக்கீடு என்பது அநீதியாகும். இரண்டு தினங்களுக்கு முன்பு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் சார்பில் ஒரு அறிவிப்பு வந்தது. அந்த அறிவிப்பில், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற படிப்புகளில் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு குறித்து ஓர் அறிவிப்பு செய்திருந்தார்கள். ஐ.ஐ.எம்.-இல் உள்ள 3,500 இடங்களில், ஒட்டுமொத்த சிறுபான்மையினருக்கும் வெறும் 42 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது வெறும் 1.2 சதவிகித இட ஒதுக்கீடு மட்டும்தான். இதிலும் முஸ்லிம்களுக்கு எத்தனை இடம் தருவார்கள் என்பதற்கு எந்த நிச்சயமும் இல்லை. இது யாசிப்போருக்கு தர்மம் செய்வது போலுள்ளது.
உள்ளூர் பிரச்சினை:
நிறைவாக, இந்த ஊரில் தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணிகளுக்காக, கடந்த ஆட்சியின்போது மத்திய இரயில்வே துறை இணையமைச்சராக இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹ்மத் ஸாஹிப் 70 லட்சம் ரூபாய் ஒதுக்கி, பணிகளை நிறைவேற்ற உத்தரவிட்டார்.
ஆனால், நிறைவேற்றப்பட வேண்டிய நிலைகள் பாதியில் நின்றுபோயுள்ளது. இடையிலிருக்கும் இரண்டொரு அதிகாரிகள் சுய முடிவு காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் பணிகள் நிறைவேற்றி முடிக்கப்படவில்லையெனில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பேராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்ப்புப் பணிகள் நடைபெறுகின்றது. வார்டு வாரியாக அமைப்பு ஏற்படுத்தப்பட்டு பிப்ரவரி மாதம் நகர நிர்வாகத் தேர்தல் நடைபெறும். கட்சியின் மாநில பொதுச் செயலாளர் என்றில்லாமல் உங்களின் ஒருவன் என்ற அடிப்படையில் உரிமையுடன் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இனைந்து பணியாற்றிட அன்புடன் அழைக்கின்றேன்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் உரையாற்றினார்.
தகவல்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகத்திலிருந்து...
உஸ்மான்,
காயிதெமில்லத் மன்ஸில்,
36, மரைக்கார் லெப்பை தெரு, மண்ணடி, சென்னை. |