காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில், இன்று மாலை நடைபெற்ற - தமிழக அரசின் மிதிவண்டி இலவச வினியோகத்தில், அப்பள்ளியின் 11ஆம் வகுப்பைச் சார்ந்த 89 மாணவர்களுக்கு மிதிவண்டிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
இதற்கான நிகழ்ச்சி இன்று மாலை 04.45 மணிக்கு, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா முன்னிலை வகித்தார். மாணவர் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா வாழ்த்துரை வழங்கினார்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி, சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, நகர்மன்றத் தலைவருக்கு - அவரது உறவினரும், பள்ளியின் துணைத் தலைவருமான ஹாஜி எஸ்.எம்.உஸைர் சால்வை அணிவித்து கவுரவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட காயல்பட்டினம் 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீனுக்கு பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.டி.இப்றாஹீம் சால்வை அணிவித்தார்.
தமிழக அரசின் மாணவர்களுக்கான வங்கி நிரந்தர முதலீடு திட்டம்:
10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் தமது படிப்பை இடைநிறுத்தம் செய்யாது தவிர்த்திடுவதற்காக, தமிழக அரசு மாணவர்களுக்கான வங்கி நிரந்தர முதலீட்டுத் திட்டத்தைத் துவக்கியுள்ளது.
இத்திட்டத்தின்படி 10 மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் தமது படிப்பை நிறைவுசெய்த பிறகு, அவர்களுக்கு வழங்கப்படும் ரூ.1500க்கான காசோலையை வங்களில் செலுத்தி பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
அதுபோல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது படிப்பை முடித்ததும் ரூ.2000க்கான காசோலையை வங்கியில் செலுத்தி பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்திற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் இன்று நடைபெற்றது. மிதிவண்டியுடன் இந்த சான்றிதழ்களும் இணைத்து வழங்கப்பட்டது.
ஆசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. ஆசிரியர் அஹ்மத் எம்.முஸ்தஃபா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
தகவல் மற்றும் படங்கள்:
M.ஜஹாங்கீர்,
காயல்பட்டினம். |