காயல்பட்டினம் கடற்கரையில் பாலின அடிப்படையில் பகுதி பிரிப்பு, வாகன நிறுத்த கட்டமைப்பு, சுகாதார பராமரிப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து நகராட்சியின் ஒத்துழைப்புடன் விரைந்து நடவடிக்கை எடுக்கவும், அதுகுறித்து நகராட்சி தலைவர் மற்றும் ஆணையருக்கு கோரிக்கை கடிதம் சமர்ப்பிக்கவும், கடந்த 17.12.2011 அன்று காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்க வளாகத்தில், காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட கோரிக்கை மனுக்கள், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் மற்றும் ஆணையரிடம் கடற்கரை பயனாளிகள் சங்கம் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது.
அக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்ந்தறியும் பொருட்டு, 23.12.2011 அன்று மதியம் 03.30 மணியளவில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையா, பணி மேற்பார்வையாளர் செல்வலிங்கம் ஆகியோரடங்கிய குழு கடற்கரையை நேரில் ஆய்வு செய்தது.
நகர்மன்ற உறுப்பினர்கள் ஹாஜி ஏ.லுக்மான், ஜே.அந்தோணி, எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், ஹைரிய்யா, நகராட்சி நிர்வாகத்தின் தொழில்நுட்ப உதவியாளர் செந்தில் குமார் ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.
காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கம் சார்பில் அதன் செயலர் ஹாஜி எல்.எம்.இ.கைலானீ, துணைச் செயலர் எஸ்.கே.ஸாலிஹ் மற்றும் பொதுநல ஆர்வலர் லேண்ட்மாக் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், சிங்கப்பூர் காயல் நல மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், கத்தர் காயல் நல மன்றத் தலைவர் எஸ்.ஏ.எஸ்.ஃபாஸுல் கரீம், எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், கே.வி.ஏ.டி. புகாரி ஹாஜி அறக்கட்டளை நிறுவனர் ஹாஜி கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத் ஆகியோர் குழுவாக வந்திருந்தனர்.
அப்போது, காயல்பட்டினம் கடற்கரையை அழகுபடுத்துவதற்காக தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் ஐம்பது லட்சம் ரூபாய் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தன்னிடம் தெரிவித்ததாகவும், அந்நிதியைப் பெற்று, கடற்கரையை அழகுபடுத்தும் பணிகளை மேற்கொள்ளலாமா என்றும் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையா வினவினார்.
அதற்கு விடையளித்த நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, உறுப்பினர்கள் மற்றும் கடற்கரை பயனாளிகள் சங்க அங்கத்தினர், காயல்பட்டினம் கடற்கரையை அழகுபடுத்துவதை விட, அதை சுத்தமாகவும், சுகாதாரமாகவும், கடற்கரைக்கு வருவோருக்கு தேவையான அடிப்படை வசதிகள் கட்டமைக்கப்பட்டதாகவும் இருப்பதே முக்கியம் என்றும், அவ்வாறு செய்யப்படும் பணிகளை சற்று அழகூட்டி செய்வதில் தவறில்லை என்றும் தெரிவித்தனர்.
ஏற்கனவே கடற்கரை அழகுபடுத்தப்பட்டபோது, இங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் பெரும்பாலும் மூடி மறைக்கப்பட்டே செய்யப்பட்டுள்ளது என்றும், நடப்பு நிர்வாகம் அது விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கடற்கரை அழகுக்காக உருவாக்கப்பட்டுள்ள நீர் தடாகங்கள் கொசுக்களை உற்பத்தி செய்யும் தொட்டியாகவும், சிறுநீர் கழிப்பிடமாகவும், குப்பைகளைத் தாங்கும் தளமாகவுமே உள்ளது என்றும், எனவே, இவ்வாறாக இடையிடையே கட்டப்பட்டு, எந்தப் பயன்பாடும் இன்றி காட்சியளிக்கும் கட்டிடங்கள், அழகு பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள் அனைத்தையும் முற்றிலுமாக அகற்றிவிட்டு, கடற்கரை மணற்பரப்பை விசாலமாக்கி, அனைவரும் தயக்கமின்றி அமரும் வகையில் சுத்தமாக்கித் தருமாறும், பாலின பிரச்சினைகள் எதுவும் ஏற்பட்டுவிடாவண்ணம் கடற்கரையை பகுதி பிரிப்பு (Partition) செய்து தருமாறும் அவர்கள் அப்போது தெரிவித்தனர்.
சுற்றுலா துறையால் தரப்படும் நிதியைப் பெறுவது குறித்து நகர்மன்றக் கூட்டத்தில் இறுதி முடிவு செய்த பின்னர், ஒருவேளை அந்நிதியைப் பெறுவதாக இருந்தால், அந்நிதி மூலம் கடற்கரை மணலை சுத்தம் செய்யும் சுத்திகரிப்பு வாகனம் ஒன்றை வாங்கலாம் என்றும், பாலின அடிப்படையிலான பகுதி பிரிக்கப்படுகையில், மலர்ச்செடிகள் கொண்டு அதன் ஓரத்தை அழகுபடுத்தலாம் என்றும், அங்குள்ள சிங்கத்தலை தடாகத்தை அப்புறப்படுத்தி, காயல்பட்டினத்தின் சரித்திர பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில் ஏதேனும் அமைக்கலாம் என்றும், குழந்தைகள் விளையாட பாதுகாப்பான - பூட்டப்பட்ட மணற்பரப்பு மட்டும் போதும் என்றும், அவர்களுக்கென ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் எதுவும் அமைத்து, குழந்தைகள் விபத்தில் சிக்க நாம் காரணமாக வேண்டியதில்லை என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
பேசப்பட்ட அம்சங்களை நகராட்சி பணி மேற்பார்வையாளர் செல்வலிங்கம் குறிப்பெடுத்துக்கொண்டார். கடற்கரை பராமரிப்பு குறித்த எந்தவொரு நடவடிக்கையானாலும், சுற்றுலாத் துறையின் நிதியைக் கொண்டு ஏதேனும் செயல்திட்டங்கள் தீட்டுவதாக இருந்தாலும், அதன் ஒவ்வொரு நடவடிக்கையையும் நகர்மன்றத்திற்கும், கடற்கரை பயனாளிகள் சங்கத்திற்கும் தெரிவிக்குமாறு நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் கடற்கரை பயனாளிகள் சங்கத்தினர் கேட்டுக்கொண்டனர். அதற்கு நகராட்சியின் சார்பில் வந்திருந்த அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக்குழுவினர் இசைவு தெரிவித்தனர். |