சாதனை மாணவ-மாணவியருக்கு ஆண்டுதோறும் இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் இணைந்து நடத்தும் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சியின்போது வழங்கப்படும் வருடாந்திர பரிசு வகைகள் குறித்து, இக்ராஃ கல்விச் சங்க செயற்குழுவில், உலக காயல் நல மன்றங்களின் நிர்வாகிகள் - அங்கத்தினர் முன்னிலையில் இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் 23.12.2011 வெள்ளிக்கிழமை இரவு 07.00 மணிக்கு, இக்ராஃ கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்ராஃ கல்விச் சங்க துணைத்தலைவரும், கத்தர் காயல் நல மன்ற தலைவருமான எஸ்.ஏ.எஸ்.ஃபாஸுல் கரீம் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். சிங்கப்பூர் காயல் நல மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், ஹாஜி எஸ்.எச்.ஷேக் அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை, பேராசிரியர் ஹாஜி கே.எம்.எஸ்.சதக்கு தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜித்தா காயல் நற்பணி மன்ற செய்தித் தொடர்பாளர் ஹாஜி ஒய்.எம்.முஹம்மத் ஸாலிஹ் இறைமறை வசனங்களுடன் கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, கூட்டத் தலைவர் எஸ்.ஏ.எஸ்.ஃபாஸுல் கரீம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர், இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் - சென்ற கூட்ட அறிக்கையை வாசித்து, இக்ராஃவின் அண்மைச் செயல்பாடுகள், மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார். அப்போது அவர் தெரிவித்த முக்கிய தகவல்கள் பின்வருமாறு:-
ஜகாத் நிதி:
கடந்த 09.11.2011 அன்று நடைபெற்ற இக்ராஃவின் முந்திய செயற்குழுக் கூட்டத்தில், முடிவு செய்யப்பட்ட படி, 07.12.2011 அன்று இக்ராஃ அலுவலகத்தில் நடைபெற்ற - ஜகாத் நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை பெற தேர்வான மாணவ-மாணவியரிடம் இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல், லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் ஆகியோர் நடத்திய நேர்காணல் விபரம், அந்நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாணவ-மாணவியரின் பெயர்கள், கல்விப் பிரிவு விபரங்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மடிக்கணனி வழங்கிய ரியாத் கா.ந.மன்றத்திற்கு நன்றி:
சென்ற கூட்டத்தில் வாக்களித்த படி, இக்ராஃவின் மக்கள் தொடர்பு அலுவலரின் மேசைப்பணி வசதிக்காக வழங்கப்பட்ட மடிக்கணனி கூட்டத்தில் அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் மகிழ்ச்சிப் பெருக்குடன், ரியாத் காயல் நற்பணி மன்றத்திற்கு - குறிப்பாக, இம்முயற்சியை முன்னின்று மேற்கொண்ட அதன் அங்கத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.
ரூ.2 லட்சம் ஜகாத் நிதி வழங்கிப்பட்டமைக்கு நன்றி:
இக்ராஃவின் வருடாந்திர கல்வி உதவித்தொகைக்காக நிதி சேகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது போல, ஜகாத் நிதி மூலம் கல்வி உதவித்தொகை வழங்கவதற்காக நிதி சேகரிப்பதற்கு இதுவரையிலும் எந்த செயல்திட்டமும் இல்லையெனினும், இக்ராஃவின் தொடரான கல்விச் சேவைகளைக் கருத்திற்கொண்டு, தனது மற்றும் தன் நண்பர்களின் பங்களிப்பாக, [பெயர் குறிப்பிட விரும்பாத சகோதரர்] இரண்டு லட்சம் ரூபாய் நிதி வழங்கிய விபரம் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக அச்சகோதரருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
ஐக்கிய ராஜ்ய கா.ந.மன்றத்தின் கல்விப்பணித் திட்டம்:
தமது மன்றத்தின் சார்பில் இக்ராஃவின் ஒத்துழைப்புடன் நகரில் நிறைவேற்ற விரும்பும் கல்விப் பணித் திட்டம் குறித்து ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றம் இக்ராஃவுக்கு அனுப்பிய கடிதம் கூட்டத்தில் வாசிக்கப்பட்டு, அதுகுறித்து பரிசீலிக்கப்பட்டது. அம்மன்றத்தின் இதுகுறித்த செயல்திட்டம் குறித்து விரிவாகக் கேட்டறிந்த பின்னர், அதன் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்ந்தறிந்து இயன்ற ஒத்துழைப்பை வழங்கலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டது.
உதவித்தொகை பெறுவோரின் கல்வித் தரம் கண்காணிப்பு:
இக்ராஃவின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், பயிலும் மாணவ-மாணவியரின் செமஸ்டர் மதிப்பெண் பட்டியல் ஒவ்வொரு முறையும் பெறப்பட்டு, arrears நிலவரம், அவ்வாறு இருந்தால், மறுதேர்வு எழுதும் விபரம் உள்ளிட்டவை தீவிரமாக பரிசீலிக்கப்பட்ட பின்னரே அவர்களுக்கு அடுத்த பருவத்திற்கனா உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
நடப்பு கல்வியாண்டில் (இரண்டாம் - மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு பயிலும்) நான்கு மாணவியர் தம் படிப்பை இடைநிறுத்தம் செய்துள்ள விபரம் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பரிசு வகை - பரிசுத் தொகைகளுக்கு இறுதி வடிவம்:
Meet the State Topper - சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை வருடாந்திர நிகழ்ச்சியின்போது, நகர சாதனை மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட வேண்டிய பரிசு வகைகள் மற்றும் அவற்றுக்கான உத்தேச தொகைகள் அடங்கிய பட்டியல் அனைத்துலக காயல் நல மன்றங்களுக்கும் ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டதாகவும், அத்தகவல் மடலுக்கு சிங்கப்பூர் மற்றும் பெங்களூரு காயல் நல மன்றங்கள் மட்டுமே இதுவரை பதிலனுப்பி, தம் மன்றம் சார்பில் ஏற்கவிருக்கும் பரிசு வகை குறித்து தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பெரும்பாலும் அனைத்துலக காயல் நல மன்றங்களின் அங்கத்தினரும் கலந்துகொண்டுள்ள காரணத்தால், எந்த மன்றமாவது இக்கூட்டத்திலேயே தமது மன்றத்தின் பரிசு அனுசரணை குறித்து அறிவிக்க இயலுமா என வினவப்பட்டது.
அதுகுறித்து தத்தம் மன்றக் கூட்டத்தில் கலந்தாலோசித்த பிறகே அறிவிக்க இயலுமென்று தெரிவித்த உலக காயல் நல மன்றங்களின் அங்கத்தினர், இக்ராஃ செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோரடங்கிய இக்கூட்டத்தில் கலந்துகொண்டோர், பரிசு வகைகள் - அவற்றுக்கான தொகைகள் குறித்து மட்டும் இக்கூட்டத்தில் விவாதித்து இறுதி வடிவம் தரலாம் என தெரிவித்ததன் அடிப்படையில் கூட்டத்தில் அதுகுறித்து விவாதித்து, பரிசு வகை - பரிசுத் தொகை விபரப்பட்டியல் இறுதி வடிவம் செய்யப்பட்டது.
இறுதி செய்யப்பட்ட இந்த விபரப்பட்டியலை, அரசுத் தேர்வுகள் எழுதும் நகரின் அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் ஜனவரி முதல் வாரத்தில் அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டது.
Dyslexia எனும் மன நோய்:
தற்கால மாணவ-மாணவியரின் கல்வி கற்றலுக்கும், அவர்கள்தம் திறமைகளுக்கும் பெரும் தடையாக இருப்பதாகக் கருதப்படும் Dyslexia எனும் மனநோய் குறித்து கண்டறிந்து, களைந்தெறிய மனநல மருத்துவர் மூலம் மாணவர்களுக்கும் அவர்கள்தம் பெற்றோருக்கும் தனித்தனியே மருத்துவ ஆலோசனை நடத்தவும், அவ்வகைக்காக ஏற்படும் செலவினங்களுக்கு தாம் பொறுப்பேற்க ஆர்வப்படுவதாகவும் தொழிலதிபர் ஹாஜி எல்.கே.எஸ்.செய்யித் அஹ்மத் விருப்பம் தெரிவித்த விபரம் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு, அதுகுறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் ஏகமனதாக இத்திட்டத்திற்கு ஆதரவளித்ததோடு, நகர பள்ளிகளின் நிர்வாகங்கள் மற்றும் தலைமையாசிரியர்களுடன் கலந்தாலோசனை செய்து, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான இடம், நேரத்தை முடிவு செய்து அதனடிப்படையில் செயல்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.
Sankara Nethralaya Academyயின் கல்வித் திட்டம்:
ஆசிய கண்டத்தில் புகழ்பெற்ற The Sankara Nethralaya Academy - Chennai நிறுவனத்தில் மருத்துவம் சார்ந்த முக்கிய கல்விப் பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுவதாகவும், அதில் நம் மாணவர்கள் இணைந்து பயின்றால் தரமான கல்வியும், வளமான வேலைவாய்ப்பும் கிடைக்கும், இத்துறைகளில் பயில மாணவர்களை இக்ராஃ மூலம் தேர்வு செய்து அனுப்புவது மிகுந்த பயனளிக்கும் என்றும், அவ்வாறு செய்தால் அதற்காக தம்மாலியன்ற ஒத்துழைப்புகளைத் தர ஆயத்தமாக உள்ளதாகவும் தொழிலதிபர் ஹாஜி எல்.கே.எஸ்.செய்யித் அஹ்மத் கூறிய விபரத்தை இக்ராஃ நிர்வாகி - கூட்டத்தில் எடுத்துரைத்தார்.
பயன்தரத்தக்க இச்செயல்திட்டத்தில் வரும் கல்வியாண்டு முதல் இக்ராஃ ஈடுபடலாம் என்று தெரிவித்த செயற்குழுவினர், ஹாஜி எல்.கே.எஸ்.செய்யித் அஹ்மத் அவர்களின் இதுபோன்ற ஆர்வம் மற்றும் முயற்சிகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்தனர்.
வேலைவாய்ப்புத் தகவலகம்:
இக்ராஃவின் முக்கிய செயல்திட்டங்களில் ஒன்றான ‘வேலைவாய்ப்புத் தகவலகம் - Employment Exchange‘ திட்டத்திற்கு முழு அளவில் செயல்வடிவம் கொடுப்பது குறித்து இக்ராஃ நிர்வாகி ஹாஜி.ஏ.தர்வேஷ் முஹம்மத் முன்வைத்த ஆலோசனை மற்றும் அதனடிப்படையில் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் அவர்கள் அளித்த விளக்கம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, விரைந்து செயல்வடிவம் கொடுக்க தீர்மானிக்கப்பட்டது.
மருத்துவத் துறைக்கும் கூட்டமைப்பு:
கல்வித்துறை போன்று மருத்துவத் துறைக்கும் உலக காயல் நல மன்றங்களுக்கு இக்ராஃவின் கண்காணிப்பில் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு தேவை என பல்வேறு காயல் நல மன்றத்தினர் வலியுறுத்தி வருவது குறித்தும், அதனால் விளையும் பயன்கள் குறித்தும் கூட்டத்தில் இக்ராஃ நிர்வாகி எடுத்துரைத்தார்.
நேரமின்மை காரணமாக இதுகுறித்து அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
பள்ளிச்சீருடை - பாடக்குறிப்பேடுகள் ஒருங்கிணைந்த இலவச வினியோகம்:
வரும் கல்வியாண்டிற்கான பள்ளிச்சீருடைகள் - பாடக்குறிப்பேடுகள் ஒருங்கிணைந்த இலவச வினியோகத் திட்டம் குறித்தும், விவாதிக்க நேரமில்லாத காரணத்தால், அடுத்த கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
ஆங்கில பேச்சுப் பயிற்சி:
சில மன்றங்களால் வலியுறுத்தப்பட்டு வரும் Spoken English Coaching - ஆங்கில பேச்சுப் பயிற்சியளிப்பது குறித்து தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
புதிய உறுப்பினர்கள் இணைவுக்கு ஒப்புதல்:
இக்ராஃவில் புதிதாக உறுப்பினராக இணைய விரும்புவோரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அவர்களனைவரையும் உறுப்பினர்களாக்கிட கூட்டம் ஒப்புதலளித்தது.
புது வருடத்திற்கான நிதிநிலையறிக்கை:
2012-2013 வருடத்திற்கான இக்ராஃ நிர்வாக செலவினங்கள் குறித்து தயாரிக்கப்பட்ட நிதிநிலையறிக்கையை கூட்டத் தலைவரும், இக்ராஃ துணைத்தலைவருமான எஸ்.ஏ.எஸ்.ஃபாஸுல் கரீம் வாசித்து விளக்கினார்.
அதுகுறித்து, அமீரக காயல் நல மன்ற தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ, அதன் நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஜி துணி உமர், தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் உள்ளிட்ட பலரும் தேவையான விளக்கங்களைக் கேட்டறிந்தனர்.
இக்ராஃ உறுப்பினர் சந்தா மூலம் பெறப்படும் தொகை, வருடாந்திர நிர்வாக செலவினங்களுக்காக காயல் நல மன்றங்கள் மற்றும் தனிநபர்கள் மூலம் பெறப்படும் தொகை ஆகிய வரவு விபரங்களும், வருடாந்திர செலவின விபரங்கள், இருப்புத் தொகை, நிலுவைத் தொகை குறித்த விபரங்களும், சிறப்பு நிகழ்ச்சிகளுக்காக ஆகும் செலவினங்கள் மற்றும் அவற்றை ஈடுசெய்யும் விதம் குறித்தும் இக்ராஃ நிர்வாகி தெளிவுற விளக்கினார்.
இறுதியில், துணைத்தலைவரால் சமர்ப்பிக்கப்பட்டபடி, இக்ராஃவின் வருடாந்திர நிர்வாகச் செலவுத் தொகையாக ரூ.2,62,450/- (இரண்டு லட்சத்து அறுபத்து இரண்டாயிரத்து நானூற்று ஐம்பது ரூபாய் மட்டும்) என்ற அளவில் செலவு வரையறை செய்யப்பட்ட நிதிநிலையறிக்கை, கூட்டத்தில் ஒருமனதாக ஏற்கப்பட்டது.
நிறைவாக, இக்ராஃவை இன்னும் சிறப்புற நடத்தி, நகரில் கல்விச் சேவைகளை மெருகேற்றுவது குறித்து கூட்டத்தில் சிறிது நேரம் விவாதிக்கப்பட்டது.
கலந்துகொண்ட சிறப்பழைப்பாளர்கள்:
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டோர் விபரம் பின்வருமாறு:-
ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் - ஆலோசகர், சிங்கை கா.ந.மன்றம்,
ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ - தலைவர், அமீரக கா.ந.மன்றம்,
ஹாஜி துணி உமர் - நிர்வாகி, அமீரக கா.ந.மன்றம்,
எம்.யு.முஹம்மத் அலீ - அமீரக கா.ந.மன்றம்,
ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் - செயலர், தாய்லாந்து கா.ந.மன்றம் (தக்வா),
ஹாஃபிழ் பி.எம்.முஹம்மத் ஸர்ஜூன் - ரியாத் கா.ந.மன்றம்,
ஹாஜி கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத் - கத்தர் கா.ந.மன்றம்,
பி.எம்.எச்.முஹ்யித்தீன் தம்பி - கத்தர் கா.ந.மன்றம்,
ஹாஜி எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர் - ஜெய்ப்பூர் கா.ந.மன்றம் (ஜக்வா),
ஹாஜி எம்.எம்.செய்யித் முஹம்மத் புகாரீ - தம்மாம் கா.ந.மன்றம்,
ஹாஜி ஒய்.எம்.முஹம்மத் ஸாலிஹ் - செய்தித் தொடர்பாளர், ஜித்தா கா.ந.மன்றம்.
இக்ராஃ செயலர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத் தனது திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். அவரது புதுமணவாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்தனர்.
ஆசிரியர் எஸ்.எம்.அஹ்மத் சுலைமான் நன்றி கூற, ஸலவாத், கஃப்ஃபாராவுடன் இரவு 09.30 மணியளவில் கூட்டம் நிறைவுற்றது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அல்ஹம்துலில்லாஹ்!!
இவ்வாறு, இக்ராஃ கல்விச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஜி N.S.E.மஹ்மூது,
செய்தித் தொடர்பாளர்,
இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம்.
Administrator: News edited at 2:00 pm on January 3, 2012 |