தமிழகத்தின் புகழ்பெற்ற திருக்குர்ஆன் விரிவுரையாளர் மவ்லவீ கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பஈ இன்றிரவு 09.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 71.
கடலூர் மாவட்டம் ஆயங்குடியைச் சார்ந்தவரான இவர், சென்னையில் வசித்து வந்தார். சிறந்த திருக்குர்ஆன் விரிவுரையாளராகவும், பேச்சாளராகவும், கவிஞராகவும் திகழ்ந்த இவர், சென்னை புரசைவாக்கம், புதுப்பேட்டை பள்ளிவாசல்களில் வாராந்திர தொடர் திருக்குர்ஆன் வகுப்பை நடத்தி வந்துள்ளார்.
வேறு இரு அறிஞர்களுடன் இணைந்து திருக்குர்ஆனுக்கு இவர் வெளியிட்டுள்ள மொழியாக்கம் சென்னை திரீயெம் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டது. பின்னர், கோவை திருக்குர்ஆன் ட்ரஸ்ட் நிறுவனத்தால் அது மறுபதிப்பு செய்யப்பட்டு, இஸ்லாமிய அழைப்புப் பணிக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தப்லீக் ஜமாஅத்தில் அதிகம் வாசிக்கப்படும் அமல்களின் சிறப்பு நூலை தமிழாக்கம் செய்துள்ள இவர், தமிழில் பல தலைப்புகளில் பல்வேறு மார்க்க விளக்க நூற்களை வெளியிட்டுள்ளார். ‘ஹஜ்ஜின் வழிகாட்டி‘ என்ற இவரது நூல், தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே - சிறந்த ஹஜ் வழிகாட்டு நூலாகக் கருதப்படுகிறது.
அன்னாரின் ஜனாஸா, நாளை 01.01.2012 நண்பகல் லுஹர் தொழுகைக்குப் பின், சென்னை - புரசைவாக்கம் தானா தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
மவ்லவீ ஹாஃபிழ் M.N.புகாரீ
மற்றும்
நோனா உவைஸ்,
புரசைவாக்கம், சென்னை.
படம் இணைக்கப்பட்டது. (பட உதவி: S.A.C.ஹமீத், அபூதபீ) (01.01.2012 - 20:26hrs) |