காயல்பட்டினத்தில் நிலவும் பேருந்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய, ஒருவழிப்பாதை அவசியம் என்று பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அமைப்புகளால் அது தொடர்பான துறைகளில் கோரிக்கைகள் பல்லாண்டு காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகளும் அவ்வப்போது வந்து நகரில் ஆய்வு செய்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார், கடந்த வெள்ளிக்கிழமையன்று காயல்பட்டினத்திற்கு நேரில் வந்து ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக்கப்படும் வழித்தடங்களை ஆய்வு செய்து சென்றார்.
ஒருவழிப்பாதைக்கு புதிய வழித்தடமாக பெரிய நெசவுத் தெருவை பரிசீலிக்காமல் மாற்று வழியை பரிசீலிக்கக் கோரி, ஹாஃபிழ் அமீர் (ஒலி) பள்ளி - நெசவு ஜமாஅத் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் துறைசார் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒருவழிப்பாதை குறித்து கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்காக, காயல்பட்டினம் கே.டி.எம். தெருவை உள்ளடக்கிய தாயிம்பள்ளி ஜமாஅத் பொதுக்குழுக் கூட்டம் 31.12.2011 அன்று (நேற்று) மாலை 06.30 மணிக்கு, ஜமாஅத் தலைவர் ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி தலைமையிலும், துணைத்தலைவர் ஹாஜி ஏ.கே.யாஸீன் மவ்லானா, கவுரவ ஆலோசகர்களான ஹாஜி எஸ்.மூஸா, எஸ்.இ.மரைக்கார் ஆலிம், ஹாஜி எம்.ஷாஹுல் ஹமீத் ஆகியோர் முன்னிலையிலும், வெளிப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
துவக்கமாக, கூட்டத்தின் நோக்கம் குறித்து, பள்ளியின் செயலாளர் ஹாஜி எம்.அஹ்மத் விளக்கிப் பேசினார். அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினத்தில் ஒருவழிப்பாதை தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பள்ளியின் துணைச் செயலாளர் எஸ்.எச்.முஹம்மத் நியாஸ் விளக்கினார்.
பின்னர் உறுப்பினர் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. பள்ளி துணைச் செயலாளர் எம்.எச்.அப்துல் வாஹித், ஹாஜி பி.ஏ.ஷேக், ஹாஃபிழ் நெய்னா முஹம்மத், கவிஞர் ஹாஜி ஏ.ஆர்.தாஹா, என்.எம்.அஹ்மத், காயல் மவ்லானா, கொமந்தார் இஸ்மாஈல், ஹாஜி ஆதம் சுல்தான், எம்.ஏ.அப்துல் ஜப்பார் ஆகிய - பள்ளியின் செயற்குழு / பொதுக்குழு உறுப்பினர்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
பேருந்து போக்குவரத்து காரணமாக கே.டி.எம்.தெரு மக்கள் இன்றளவும் அனுபவித்து வரும் சோதனைகள் குறித்தும், ஒருவழிப்பாதை நிறைவேற்றப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், எவ்வித ஆதாரமுமின்றி - கே.டி.எம். தெருவில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும் என்று நெசவு ஜமாஅத் சார்பில் தெரிவித்துள்ளதாகவும், அதை தாங்கள் கண்டிப்பதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர், கடந்த 29.12.2011 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டத்தில் ஒருவழிப்பாதை குறித்து பேசப்பட்ட நிகழ்வுகளை, நகர்மன்ற உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் விளக்கினார்.
காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெரு வழியாக ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவது பொருத்தமற்றது என்ற கருத்தில், சில ஆவணங்களுடன் அந்த ஜமாஅத் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை, அப்பகுதி உறுப்பினர் என்ற அடிப்படையில் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் - நகராட்சிக் கூட்டத்தில் முன்வைத்ததாகவும், அடுத்து பேசிய நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, ஒருவழிச்சாலை போக்குவரத்து நகர்மன்ற கட்டுப்பாட்டுக்குட்பட்டதல்ல என்பதோடு, மாவட்ட அளவில் அரசு உயர்மட்டக்குழு அதிகாரிகள் இதுகுறித்து ஆய்ந்து வருவதால், நகர்மன்றம் முடிவெடுக்கும் நிலையில் இல்லை என்று தெரிவித்ததாகவும் கூறினார்.
அடுத்து பேசிய நகர்மன்ற உறுப்பினர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், தான் தாயிம்பள்ளி ஜமாஅத், நெசவு ஜமாஅத் ஆகிய இரு ஜமாஅத்துகளுக்கும் பொதுவான உறுப்பினர் என்ற அடிப்படையில், நெசவு ஜமாஅத் சார்பில் தன்னிடம் தரப்பட்ட கோரிக்கையை, அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கூட்டப் பொருளில் வைத்ததாகவும், இதுகுறித்து நகராட்சி முடிவெடுக்கும் நிலையில் இல்லை என்று நகர்மன்றத் தலைவர் தெரிவித்ததை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
நிறைவாக,
ஒருவழிப்பாதையை காயல்பட்டினத்தில் அவசியம் நடைமுறைப்படுத்த வேண்டும்...
இதுவரை பெரிய நெசவுத் தெரு பெயரை கே.டி.எம். தெரு மக்களோ, ஜமாஅத்தோ சுட்டிக்காட்டாமல் - ஒருவழிப்பாதை அவசியம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று மட்டுமே தம்மால் கூறப்பட்டு வரும் நிலையில், கே.டி.எம். தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்று ஆதாரமின்றி நெசவு ஜமாஅத் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவிப்பு... அத்தீர்மானத்தை மேற்படி ஜமாஅத் திரும்பப் பெற வேண்டும்...
இதுவரை நகரில் பெரும்பாலான ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகளின் வேண்டுகோள் படி, பேருந்து போக்குவரத்திற்கு வசதியாக உள்ள பெரிய நெசவுத் தெரு வழியாக ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவதை தற்போது இந்த ஜமாஅத் வலியுறுத்துகிறது...
ஆகிய கருத்துக்களில் இக்கூட்டத்தில் தீர்மானம் இயற்ற முடிவு செய்யப்பட்டது. அத்துடன், தாயிம்பள்ளி ஜமாஅத் சார்பில், மக்கள் குறைதீர் நாளான 02.01.2012 அன்று (இன்று) ஒருவழிப்பாதையை வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கவும், அம்மனுவின் நகலை காயல்பட்டினம் நகராட்சி தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுக்கு அளிப்பதெனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் தாயிம்பள்ளி ஜமாஅத் உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நீண்ட நேரம் கூட்டம் நடைபெற்ற காரணத்தால், இஷா தொழுகை சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
|