காயல்பட்டினம் கடற்கரையில் பாலின அடிப்படையில் பகுதி பிரிப்பு, வாகன நிறுத்த கட்டமைப்பு, சுகாதார பராமரிப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து நகராட்சியின் ஒத்துழைப்புடன் விரைந்து நடவடிக்கை எடுக்க காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்க பொதுக்குழு முடிவு செய்துள்ளது.
காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம் 17.12.2011 அன்று காலை 11.00 மணியளவில், காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்க வளாகத்தில், அமைப்பின் தலைவர் ஓ.ஏ.நஸீர் அஹ்மத் தலைமையில், லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், கத்தர் காயல் நல மன்றத் தலைவர் எஸ்.ஏ.எஸ்.ஃபாஸுல் கரீம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
சங்கத்தின் துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, கூட்ட அறிமுகவுரையாற்றினார். பின்னர், கடற்கரை பயனாளிகள் சங்க செயல்பாடுகள் குறித்து அதன் செயலர் ஹாஜி எல்.எம்.இ.கைலானீ விளக்கிப் பேசினார்.
காயல்பட்டினம் கடற்கரையில் பல்வேறு பராமரிப்புப் பணிகளை ஏற்கனவே திட்டமிட்டபடி செய்திடுவதற்காக, நகரின் அப்போதைய நகர்மன்றத் தலைவரையும், நகராட்சி ஆணையர், காவல்துறை ஆய்வாளர் ஆகியோரையும் சந்தித்துப் பேசி, ஆதரவு கோரப்பட்டதாகவும், அதன்பின்னர், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் அப்போதைய உறுப்பினர்களை, தாயிம்பள்ளிவாசல் வளாகத்தில் சந்தித்துப் பேசியதாகவும், மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறுப்பினர்கள் முழு ஆதரவளிப்பதாக தெரிவித்ததாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
நகராட்சி நிர்வாகம் மாற்றம் கண்டுள்ளதாலும், பொதுநலப் பணிகளில் குறிப்பிட்ட சிலரே முழுமையாக ஈடுபட்டு வருவதால், அவர்களின் பல்வேறு பணிகளுக்கிடையில் இப்பணி தொய்வுற்றுப் போனது வருத்தத்திற்குரியது என்று தெரிவித்த அவர், இனி நடக்க வேண்டிய பணிகளை துரித கதியில் செய்து முடிக்க அனைத்து முயற்சிகளையும் விரைந்து மேற்கொள்வது அவசியம் என்று தெரிவித்தார்.
உறுப்பினர் கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், பின்வரும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது:-
கடற்கரையில் வாகன நிறுத்தத்தை ஒழுங்கு செய்தல்…
கடற்கரையை ஆண்கள், பெண்கள், குடும்பத்தினர் அமர்வதற்கும், மாணவர்கள் விளையாடுவதற்கும் நான்கு பகுதிகளாக (Partition) பிரித்தல்…
பொதுமக்களுக்கான அறிவிப்புப் பலகை, வழிகாட்டும் பலகைகளை நிறுவல்…
கடற்கரை ஒழுங்குப் பணிகளை மேற்கொள்வதற்காக முன்பயிற்சி பெற்ற தன்னார்வலர்களை (volunteers) நியமித்தல்…
கடற்கரையின் மொத்த பரப்பும் பொதுமக்கள் பார்வையில் படும் வகையில், அங்கே வட-தென் புறங்களில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றல்…
கடற்கரையிலுள்ள ஆண், பெண்களுக்கான கழிப்பறைகளை பயன்படுத்தும் அளவுக்கு சீரமைத்தல்…
கடற்கரையில் அலங்கோலமாகக் காணப்படும் குப்பை கூளங்களை அகற்றியும், சுகாதாரக் கேட்டை விளைவிக்கும் வகையில் கடற்கரை முன்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கங்களை அகற்றியும் தரல்…
கடற்கரை மணற்பரப்பில் குறிப்பிட்ட இடைவெளியில் (எளிதில் திருட முடியாத வகையில்) குப்பை தொட்டிகளை அமைத்தல்…
இப்பணிகளில், நகராட்சி நேரடியாகச் செய்ய வேண்டிய பணிகளை செய்து தர நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கவும், அமைப்பின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளுக்கு நகராட்சியின் முறையான அனுமதியைப் பெற்றிடவும் தீர்மானிக்கப்பட்டது.
புதிய நகராட்சி பொறுப்பேற்றுள்ள காரணத்தால், கடற்கரை பயனாளிகள் சங்கம் அமைப்பையும், அதன் கோரிக்கைகளையும் மீண்டும் நகராட்சி ஆணையரிடமும், புதிய நகர்மன்றத் தலைவரிடமும் வழங்க தீர்மானிக்கப்பட்டது.
நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ள பணிகளில், அமைப்பின் சார்பில் நேரடியாகச் செய்யப்படவுள்ள பணிகளுக்காக கத்தர் காயல் நல மன்றம் சார்பில் பத்தாயிரம் ரூபாய் அனுசரணையளிக்க தீர்மானித்துள்ளதாக, அதன் தலைவர் எஸ்.ஏ.எஸ்.ஃபாஸுல் கரீம், துணைத்தலைவர் முஹம்மத் யூனுஸ் ஆகியோர் தெரிவித்தனர். அதற்காக கூட்டத்தில் அம்மன்றத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
நன்றியுரைக்குப் பின், துஆ - ஸலவாத் - கஃப்ஃபாராவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில், அமைப்பின் துணைத்தலைவர் எம்.ஜே.செய்யித் இப்றாஹீம், துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ், ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், ஹாஜி எம்.என்.எல்.சுலைமான் லெப்பை, ரெட் ஸ்டார் சங்க தலைவர் ஷேக் அப்துல் காதிர், ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், ஹாஜி எல்.டி.சித்தீக், ஓ.எம்.முஹம்மத் அலீ ஜின்னா, கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் எஸ்.எம்.எச்.முஹ்யித்தீன் தம்பி, ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், எஸ்.ஐ.செய்யித் மொகுதூம், என்.எம்.அஹ்மத், எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்தியில் சில தகவல்கள் கூடுதலாக இணைக்கப்பட்டது. (03.01.2012 - 21:35hrs) |