அரசு மருத்துவமனையிலுள்ள மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே இணக்கத்தை அதிகமாக்கும் பொருட்டு, தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் 'மருத்துவமனை தின விழா” ஆண்டுதோறும் நடத்திட வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுப்படி, கடந்த 2008ஆம் ஆண்டு முதல் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் 'மருத்துவமனை தின விழா” நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாண்டிற்கான மருத்துவமனை தின விழா 31.12.2011 அன்று மதியம் 03.00 மணியளவில் காயல்பட்டினம் அரசு மருத்துவமனை கேளரங்கில் நடைபெற்றது. காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, காயல்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் பாவநாசகுமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, மருத்துவமனையின் தலைமை செவிலியர் சா.ஜெயலெட்சுமி மருத்துவமனையின் ஆண்டறிக்கையை வாசித்தார். (ஆண்டறிக்கை தனிச்செய்தியாக வெளியிடப்படும்.)
பின்னர், நகர்மன்றத் தலைவரும், இந்நிகழ்ச்சியின் தலைவருமான ஐ.ஆபிதா ஷேக் தலைமையுரையாற்றினார்.
மருத்துவமனையின் பல்வேறு சேவைகளையும், தேவைகளையும் குறிப்பிட்டுப் பேசிய அவர், தனது தந்தை பாளையம் இப்றாஹீம் உடல் நலத்துடன் இருந்த காலத்தில் இம்மருத்துவமனை குறித்து எடுத்துக்கொண்ட சிறப்பு அக்கறைகள் குறித்து நினைவுகூர்ந்து பேசினார்.
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான கே.ஜமால், தைக்கா சாமு ஷிஹாபுத்தீன் ஆகியோரும், திருச்செந்தூரிலுள்ள அரசு பொதுப்பணித்துறையின் மின் பிரிவு உதவி செயற்பொறியாளர் பி.இராமலிங்கம், காயல்பட்டினம் அரசு மருத்துவமனை உதவி மருத்துவர் ஜெ.சுரேஷ் மில்லர், பல் மருத்துவர் மூ.அமுதா, இளநிலை உதவியாளர் வே.சித்திரை ராஜா, மருந்தாளுனர் ஸ்டீஃபன், துணை செவிலியர் மு.சாந்தி, வாகன ஓட்டுநர் சு.சிதம்பரம் மற்றும் பணியாளர்களும், தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ், மருத்துவமனையின் உள்நோயாளிகள் - புறநோயாளிகள் சிலரும் வாழ்த்துரை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.
பின்னர் மருத்துவமனை அலுவலர்களின் கலை நிகழ்ச்சிக்குப் பின், மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் (சித்தா) சு.நமச்சிவாயம் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. இவ்விழாவில், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், அரசு மருத்துவமனையின் அனைத்துத் துறை அலுவலர்கள், உள் - புற நோயாளிகள், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
|