காயல்பட்டினத்தில் நிலவும் பேருந்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய, ஒருவழிப்பாதை அவசியம் என்று பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அமைப்புகளால் அது தொடர்பான துறைகளில் கோரிக்கைகள் பல்லாண்டு காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகளும் அவ்வப்போது வந்து நகரில் ஆய்வு செய்து வந்தனர்.
முன்னதாக, காயல்பட்டினத்தில் ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவதற்காக - இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகள், எடுக்கப்பட்ட அளவீடுகள் குறித்து அது தொடர்பான அதிகாரிகளுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் கலந்தாலோசனை செய்தார். முடிவில், காயல்பட்டினத்தில் ஒருவழிப்பாதைக்காக பரிசீலிக்கப்படும் இடங்களை தான் நேரில் பார்வையிட்ட பின்னர் இறுதி முடிவு செய்யலாம் என அவர் தெரிவித்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், 30.12.2011 அன்று (நேற்று) நண்பகல் 12.00 மணியளவில், ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக்கப்படும் வழித்தடங்களை நேரில் பார்வையிடுவதற்காக, மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் காயல்பட்டினம் வந்தார். அவரை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் ஆகியோர் வரவேற்றனர்.
துவக்கமாக, காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகிலிருந்தவாறு, ஒருவழிப்பாதை வழித்தடங்கள் குறித்து, கோட்டாட்சியர் (சப்-கலெக்டர்) பொற்கொடி, வாகன போக்குவரத்து ஆய்வாளர் சந்திரசேகரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு விளக்கினர்.
பின்னர் அங்கிருந்து, காயல்பட்டினம் பிரதான வீதி, கே.டி.எம். தெரு, தாயிம்பள்ளி குறுக்குச் சாலை மூப்பனார் ஓடை வழியாக பெரிய நெசவுத் தெரு, மேல நெசவுத் தெரு, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, கூலக்கடை பஜார், விசாலாட்சியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளை அவர் நேரில் ஆய்வு செய்தார்.
பெரிய நெசவுத் தெரு பகுதிக்கு அவர் சென்றபோது, அங்குள்ள பொதுமக்கள் பெருந்திரளாகக் கூடி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து, பெரிய நெசவுத்தெரு அல்லாத மாற்று வழித்தடத்தில் ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவது குறித்து தெரிவித்த விளக்கங்களை அவர் கவனமாகக் கேட்டறிந்தார்.
மதியம் 01.15 மணியளவில் ஆய்வுப்பணிகளை நிறைவு செய்துவிட்டு, தூத்துக்குடிக்கு கிளம்பிச் சென்றார்.
திருச்செந்தூர் வட்டாட்சியர் வீராசாமி, திருச்செந்தூர் டி.எஸ்.பி. ஞானசேகரன், ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன், துணை ஆய்வாளர்கள் வைகுண்டம், ஸ்வாமிதாஸ், சாலை ஆய்வாளர் வசந்தி, காயல்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் செல்வலிங்கம், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையா உள்ளிட்டோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர். |