தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவான மனித நேய மக்கள் கட்சியின் சார்பில், உள்ளாட்சித் தேர்தல் வெற்றி & அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் 25.12.2011 அன்று இரவு 07.00 மணிக்கு, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது.
தமுமுக மற்றும் மமக நகரத் தலைவர் எம்.கே.ஜாஹிர் ஹுஸைன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மமக மாவட்ட துணைச்செயலாளர் மக்தூம், தமுமுக மாவட்டச் செயலாளர் நவாஸ், ஹாங்காங் தமுமுக நிர்வாகி ஹாஜா அரபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மமக மாவட்டத் தலைவர் ஆஸாத் வரவேற்புரையாற்றினார். தமுமுக மாநில செயலாளர் பேராசிரியர் ஹாஜா கனி, துணைச் செயலாளர்களான எம்.தமீமுன் அன்ஸாரீ, காதர் மெய்தீன், மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத், மாநில செயற்குழு உறுப்பினர் என்.ஏ.தைமிய்யா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நகர தமுமுக செயலாளர் ஃபிர்தவ்ஸ் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் நகர தமுமுக, மமக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும், நகர பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - 2ஆவது பைப்லைன் திட்டம்:
காயல்பட்டினத்தில் இரண்டாவது பைப்லைன் குடிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்றி, இந்நகரின் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும். மேலும், அசுத்தம் நிறைந்து சுகாதாரக் கேட்டை உருவாக்கும் அனைத்து குடிநீர் தொட்டிகளையும் சுத்தம் செய்ய வேண்டும்.
தீர்மானம் 2 - சாலை சீரமைப்பு:
பருவமழை காரணமாக குண்டும், குழியுமாகக் காணப்படும் சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீர்செய்ய வேண்டும்.
தீர்மானம் 3 - குப்பைகள் அகற்றம்:
நமது நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குப்பை, கழிவுகளை தினமும் சுத்தம் செய்ய நகராட்சி ஏற்பாடு செய்வதோடு, குறித்த நேரத்தில் பணிக்கு வராத - அல்லது தாமதமாக வரும் நகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 4 - ப்ளாஸ்டிக் பொருட்களுக்கு தடை:
சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் மக்காத குப்பைகளான ப்ளாஸ்டிக் பைகளை தடைசெய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பொதுக்கூட்டம் மூலம் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தகவல்:
N.M.தமீமுல் அன்ஸாரீ,
துணைத்தலைவர்,
தமுமுக - மமக காயல்பட்டினம் கிளை. |