இடைநிறுத்தப்பட்டுள்ள காயல்பட்டினம் தொடர்வண்டி நிலை மேம்பாட்டுப் பணிகள் இனியும் தாமதப்படுத்தப்பட்டால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் காயல்பட்டினம் வருகை தந்துள்ளதையொட்டி, 26.12.2011 அன்று இரவு 07.00 மணியளவில், அக்கட்சியின் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.கே.மஹ்மூத் சுலைமான் இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் தெரிவித்ததாவது:-
மத்திய அரசில் அங்கம்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மத்திய அரசில் அங்கம் வகிக்கிறது. எம் கட்சியின் தேசிய தலைவர் இ.அஹ்மத் ஸாஹிப் அவர்கள் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சராக உள்ளார்.
கேரள மாநிலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 20 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 4 அமைச்சர்களும் உள்ளடக்கம்.
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி:
தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 480 இடங்களில் தனி சின்னத்தில், தனித்துப் போட்டியிட்டு, 123 இடங்களில் வென்றுள்ளது. வெற்றி பெற்ற உள்ளாட்சி அங்கத்தினர் தம் பொறுப்புகளில் சிறப்புற செயல்படும் பொருட்டு வழிகாட்டுவதற்காக, டிசம்பர் 10ஆம் தேதியன்று கட்சியின் சார்பில் வழிகாட்டுக் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு கோரி தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு:
கடந்த நவம்பர் 23ஆம் தேதியன்று நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில், தேசிய அளவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரையின்படி தேசிய அளவில் சிறுபான்மையினருக்கு 15 சதவிகித இடஒதுக்கீடும், அதில் முஸ்லிம்களுக்கு 19 சதவிகித இட ஒதுக்கீடும் வழங்க வேண்டுமென அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் தேசிய அளவில் மிகவும் பின்தங்கி இருப்பதாக சச்சார் கமிஷன் அறிக்கையில் தெரிவித்துள்ளதைக் கூட பரிசீலிக்காமல், முஸ்லிம்களுக்கு தேசிய அளவில் 4.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்றுக்கொள்ளவில்லை.
முஸ்லிம்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு கோரி, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள், கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம், நெல்லை மாவட்டம் தென்காசி ஆகிய நகரங்களில் பொதுக்கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வரும் இம்மாதம் 30ஆம் தேதி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி காயல்பட்டினத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
தேசிய இளைஞரணி மாநாடு:
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய இளைஞரணி மாநாடு, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் கேரள மாநிலத்தில் நடத்தப்படவுள்ளது. இதில், தமிழகத்திலிருந்து பத்தாயிரம் இளைஞர்களைக் கலந்துகொள்ளச் செய்வதற்காக பணிகள் முறைப்படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முஸ்லிம் மாணவர் பேரவை கருத்தரங்கம்:
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முஸ்லிம் மாணவர் பேரவை கருத்தரங்கம், வரும் ஜனவரி மாதம் 01ஆம் தேதியன்று சென்னையில் நடைபெறுகிறது. இக்கருத்தரங்கத்தில் பல்வேறு அறிஞர்கள் பங்கேற்று, மாணவர் பேரவை அங்கத்தினருக்கு அரசியல் விழிப்புணர்வு, சமுதாய மேம்பாடு, கட்சியின் செயல்திட்டங்கள் உள்ளிட்ட அம்சங்களை விளக்கவுள்ளனர்.
கல்லூரி, மத்ரஸாக்களில் தேசிய ஒருமைப்பாட்டு பரப்புரை:
இஸ்லாம் தீவிரவாத மார்க்கமென்றும், முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்றும் பரப்பப்படும் பொய்யான பரப்புரைகளை இல்லாமலாக்கும் முயற்சியாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நாட்டிலுள்ள கல்லூரிகள் மற்றும் மத்ரஸாக்களில் தேசிய ஒருமைப்பாடு, சமய நல்லிணக்கம், சிறுபான்மையினர் விழிப்புணர்வு உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்கங்கள், சிறப்புரைகள் நடத்தப்பட்டு வருகிறது.
உருது மொழி மேம்பாட்டுக்கு கூடுதல் நிதி:
இந்தியாவில் முஸ்லிம்களால் பேசப்பட்டு வரும் உருது மொழி மேம்பாட்டிற்காக கடந்த ஐந்தாண்டு திட்டத்தின்போது 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இந்நிதியை உயர்த்தி ஒதுக்கீடு செய்ய வலிமையாக கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து, நடப்பு ஐந்தாண்டு திட்டத்தில், இவ்வகைக்காக 500 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனதார வரவேற்கிறது.
முல்லைப் பெரியாறு பிரச்சினை:
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையைப் பொருத்த வரை நீதிமன்றத் தீர்ப்பை இரு மாநில அரசுகளும் மதித்து நடக்க வேண்டும். குறுகிய வட்டத்திற்குள் நின்றுகொண்டு சிலர் சுய ஆதாயங்களுக்காக இப்பிரச்சினையை இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினை போன்று பூதாகரமாக்கியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. இதுபோன்ற அம்சங்களுக்காக மக்கள் உணர்வுகளைத் தூண்டுவதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருபோதும் வரவேற்காது.
இப்பிரச்சினையில், உரிய நடவடிக்கையை பாரபட்சமின்றி மேற்கொள்ளுமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், வெளியுறவுத்துறை மத்திய இணையமைச்சருமான இ.அஹ்மத் ஸாஹிப் அவர்கள், மத்திய அமைச்சர் திரு.வயலார் ரவி ஆகியோர் இணைந்து பிரதமர் திரு.மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை வைத்துள்ளனர் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
எம் கட்சியின் தேசிய தலைவர் இ.அஹ்மத் ஸாஹிப் அவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரெனினும், தனது மாநிலத்திற்காக என்று தனிக்கோரிக்கை எதுவும் முன்வைக்காமல், பாரபட்சமற்ற நடவடிக்கையை வலியுறுத்தி பிரதமரிடம் கோரியிருப்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்பிகிறேன்.
கூடங்குளம் அணு மின் நிலையம்:
இந்தியாவின் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்படுவதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரவேற்கவில்லை.
ஆபத்துகள் எதிலும் வரலாம்... எப்போதும் வரலாம்... மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு, நம் நாட்டிலுள்ள மின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணு மின் நிலைய பணிகளை விரைவில் முடித்து, மின் உற்பத்தி துவக்கப்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோருகிறது.
தமிழகத்தில் பேருந்து, பால் கட்டண உயர்வு:
தமிழகத்தில் பேருந்து பயணக் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டது, பால் விலை உயர்வு உள்ளிட்ட விலையேற்றங்கள் மாநில மக்களை பெரிதும் பாதித்துள்ளது. இவ்விலையுயர்வை எதிர்த்து அனைத்து மாவட்ட தாலுகா அலுவலகங்களிலும் போராட்டம், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் எம் கட்சியால் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக மக்களுக்கு இலவசங்கள் தேவையில்லை... இதுபோன்ற அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி, மக்களுக்கு பாதிப்பில்லா நிலையை உருவாக்கினாலே போதுமானது என எம் கட்சி கருதுகிறது.
காயல்பட்டினம் புதிய உள்ளாட்சி:
நடைபெற்று முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வாழ்த்து தெரிவிக்கிறது.
மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு, சுய விருப்பு - வெறுப்புகளின்றி செயல்பட்டு, இந்நகரை இந்தியாவுக்கே முன்னோடி நகராமாக்கிட அனைவரும் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணி:
கடந்த ஆட்சியின் போது மத்திய அரசில் தொடர்வண்டித் துறை இணையமைச்சராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹ்மத் ஸாஹிப் அவர்கள் இருந்தபோது, காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டுப் பணிகள் குறித்து நேரில் ஆய்ந்தறிந்து, இவ்வகைக்காக 70 லட்சம் ரூபாய் ஒதுக்க ஆவன செய்திருந்ததன் அடிப்படையில், மேம்பாட்டுப் பணிகள் துவக்கப்பட்டது.
நடைமேடை அமைப்புப் பணிகள், நடைமேடையையொட்டி மின் விளக்குகள் அமைத்தல், மேற்கூரை அமைப்பு, தொடர்வண்டி நிலையத்திற்குள் செல்வதற்கான சாலை உள்ளிட்ட பணிகள் ஓரளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், திடீரென இப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
செய்யப்பட வேண்டிய மேம்பாட்டுப் பணிகள் விரைவில் துவக்கி நிறைவேற்றி முடிக்கப்படவில்லையெனில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
கலந்துகொண்டோர்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், சுதந்திர தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆர்.பி.எஸ்.ஷம்சுத்தீன், கட்சியின் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் எம்.எச்.அப்துல் வாஹித், மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், நகர துணைச் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் மற்றும் நகர நிர்வாகிகளான மொகுதூம் கண்டு சாஹிப், ஹாஜி எம்.ஏ.ஹஸன், ஹாஜி முஹம்மத் அலீ மற்றும் பலர் இச்சந்திப்பின்போது உடனிருந்தனர்.
செய்தி திருத்தப்பட்டது. (29.12.2011 - 12:52hrs) |