காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் மூத்த ஆலோசகரும், ஹாங்காங் - இந்தியன் முஸ்லிம் அசோஸியேஷன் அமைப்பின் முன்னாள் தலைவருமான காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் துணைத்தலைவருமான காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சார்ந்த ஹாஜி எம்.எல்.மூஸா நெய்னா, 25.12.2011 அன்று (நேற்று) காலை 09.00 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அன்னாரின் ஜனாஸா, இன்று காலை 11.30 மணியளவில் காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் ஆலோசகரான - அவரது மகன் முனைவர் ஹாஜி முஹம்மத் லெப்பை அவர்களின் தந்தையான அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
எமது மன்றத்தின் ஆலோசகரான முனைவர் ஹாஜி எம்.என்.முஹம்மத் லெப்பை அவர்களின் தந்தை, ஹாஜி எம்.எல்.மூஸா நெய்னா அவர்கள் வஃபாத்தான செய்தியறிந்து மிகவும் வருந்தினோம்...
பொதுநல நிகழ்வுகளில், பொறுப்புகளை எதிர்பாராமல் திறந்த மனதுடன் அனைவரையும் ஊக்கப்படுத்துவதில் என்றுமே முன்னிலையிலிருந்த அவர்கள், எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் 26.03.2011 அன்று நடத்தப்பட்ட பொதுக்குழுவிலும், சிறப்பு விருந்தினராகக் கலந்து, எம் மன்றத்தின் சீருடையணிந்து காட்சியளித்ததும், அக்கூட்டத்தில் தமதன்பான சொற்களால் அழகிய வழிகாட்டுரையை வழங்கியதும் இன்றும் எங்கள் நெஞ்சங்களில் நிழலாடிக் கொண்டிருக்கிறது...
பொதுவாக சுயநலனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் இக்காலகட்டத்தில், தாம் மட்டும் பொதுநலனில் ஈடுபடுவதோடு நின்றிடாமல், தம் மக்களையும் அதன்பால் ஈடுபடுத்தி வழிகாட்டிய பெருந்தகை அவர்கள். அதன் பயனாகத்தான், இன்று அறிவிற்சிறந்த அவர்களின் அன்பு மகன் முனைவர் ஹாஜி எம்.என்.முஹம்மத் லெப்பை அவர்களை நாங்கள் எம் மன்றத்தின் ஆலோசகராகப் பெற்றிருக்கிறோம்...
வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் மண்ணறை, மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக... அவர்களின் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை அளித்தருள்வானாக... அவர்கள் அனைவருக்கும் எம் மன்றத்தாரின் அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் எனும் முகமனைத் தெரிவித்து நிறைவு செய்கிறோம், நன்றி.
இவ்வாறு சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
மொகுதூம் முஹம்மத்,
செயலாளர்,
காயல் நல மன்றம், சிங்கப்பூர். |