காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் மூத்த ஆலோசகரும், காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் துணைத்தலைவருமான, காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சார்ந்த ஹாஜி எம்.எல்.மூஸா நெய்னா, 25.12.2011 அன்று (நேற்று) காலை 09.00 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் அதன் தலைவர் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இறைவனிடம் இறைஞ்சுகிறோம்
இதய ஆறுதலைத் தெரிவிக்கிறோம்.
எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவையின் கண்ணியத்திற்குரிய முக்கிய ஆலோசகரும், மூத்த உறுப்பினரும், எங்களை வழிநடத்திய நல்லவரும், சிறந்த பண்பாடும், சமூக அக்கறையும் கொண்டவரும், எல்லோருடனும் சமமாக பழகும் பண்புடையவரும், ஹாங்காங்கில் வாழும் இளைய சமுதாயத்தவருக்கு எழுச்சியூட்டியவரும், எங்கள் இதயங்களில் நிறைந்தவருமாகிய மரியாதைக்குரிய ஹாஜி எம்.எல்.மூஸா நெய்னா அவர்கள் 25.12.2011 அன்று (நேற்று) காலையில் மரணமடைந்த செய்தியறிந்து மிகவும் கவலையடைந்தோம். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
உண்மையில் அவர்களின் மரணம் எமது அமைப்பில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்களுக்கு தாங்க முடியாத சூழலைத் தந்துள்ளது.
நமதூரும், நம் சமுதாயமும் ஓர் அற்புதமான மனிதரை இழந்துவிட்டது. எல்லோருடனும் பண்போடும் பேசும் நல்லவரையும், இறைவழியில் நற்கொடை செய்தவரையும், சமுதாயத்தின் தலைவரையும் இழந்து நாமெல்லாம் வாடுகிறோம்.
இறைவனுடைய நாட்டப்படி ஏற்பட்டுவிட்ட இந்த மரணத்திற்காக நாங்கள் ஸபூர் செய்து கொண்டோம்.
யா அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளை பொறுத்து, உயரிய சுவனபதியில் அவர்களை அமரச் செய்வாயாக, ஆமீன்.
மர்ஹூம் அவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது பேரவையின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வளவு பெரிய இழப்பைத் தாங்கும் இதயத்தையும், அழகிய பொறுமையையும் அவர்களுக்கு வழங்க இறைவனிடம் மனமுருக பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
ஹாஃபிழ் V.M.T.முஹம்மத் ஹஸன்,
பொருளாளர்,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை, ஹாங்காங். |