ரியாத் காயல் நற்பணி மன்றம் சார்பில், இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு மடிக்கணனி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் பணிகள் விரிவடைந்து வரும் நிலையில், பணிப்பளுவைக் குறைத்திடும் பொருட்டு சேவையாற்ற முன்வந்திருக்கும் இக்ராஃவின் மக்கள் தொடர்பு அலுவலரின் (PRO) நிர்வாக வசதிக்காக இக்ராஃ அலுவலகத்திலுள்ள அவரது மேஜைக்கு ஒரு மடிக்கணினி தேவைப்படுவதாக இக்ராஃவின் கடந்த செயற்குழுக் கூட்டத்தில் அதன் நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் தெரிவித்திருந்தார்.
அதனைக் கருத்திற்கொண்ட - அக்கூட்டத்தில் கலந்துகொண்ட ரியாத் காயல் நற்பணி மன்ற செயலாளர், துணைச் செயலாளர், ஆலோசகர் ஆகியோர், அவ்விடத்திலேயே கலந்தாலோசித்த பின்னர், தேவைப்படும் மடிக்கணினியை தங்கள் ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் அன்பளிப்பாக வழங்குவதாக அறிவித்தனர். இவ்வறிவிப்பிற்காக அக்கூட்டத்திலேயே அம்மன்றத்திற்கும், அதன் நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
ஒப்புக்கொண்ட படி, 23.12.2011 அன்று (நேற்று) மாலை 05.30 மணியளவில், புதிய மடிக்கணனி இக்ராஃவிற்கு அன்பளிப்பு செய்யப்பட்டது. ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் பி.எம்.ஸர்ஜூன், அதன் உள்ளூர் பிரதிநிதி ஹாஜி சோனா ஷாஹுல் ஹமீத் ஆகியோரிணைந்து புதிய மடிக்கணனியைக் கையளிக்க, இக்ராஃவின் மக்கள் தொடர்பு அலுவலர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஆகியோர் இணைந்து அதைப் பெற்றுக்கொண்டனர்.
இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.
இக்ராஃவின் அலுவலக நிர்வாக மேஜை மற்றும் மின் வினியோகத் தடையின்போது தேவைப்படும் இன்வெர்ட்டர் கருவிக்கான பாதித்தொகை ஆகியவற்றையும் இம்மன்றத்தினர் ஏற்கனவே வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. |