காயல்பட்டினத்தில் நிலவும் போக்குவரத்து நெருக்கடியை சரிசெய்யும் பொருட்டு, ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவது குறித்த ஆய்வுகள் அண்மைக்காலமாக அடிக்கடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
20.12.2011 அன்று மதியம் 02.00 மணியளவில் திடீரென ஆய்வுப்பணி நடைபெற்றது. மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஞானசேகரன், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சேகர், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கே.சந்திரசேகரன் ஆகியோர் இந்த ஆய்வுப்பணியை மேற்கொண்டனர்.
அளவீட்டாளர் கந்தப்பன், காயல்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் செல்வலிங்கம், ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் டி.பார்த்திபன், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையா, பணி மேற்பார்வையாளர் செல்வமணி, தொழில்நுட்ப உதவியாளர் செந்தில் குமார் உள்ளிட்டோர் ஆய்க்குழுவினருடன் சென்றனர்.
காயல்பட்டினம் கே.டி.எம். தெரு, தாயிம்பள்ளி - மூப்பனார் ஓடை குறுக்குச் சாலை வழியாக மேல நெசவுத் தெரு, பெரிய நெசவுத்தெரு, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, கூலக்கடை பஜார், பிரதான வீதி ஆகியபகுதிகளில் இந்த ஆய்வு நடைபெற்றது.
இந்த ஆய்வின்போது, பிரதான வீதியிலுள்ள பல உணவகங்களிலும், இதர கடைகள் சிலவற்றிலும் வரம்புக்கு மீறி கட்டப்பட்டிருந்த அடுப்புகள், படிக்கட்டுகளை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
பிரதான வீதியில் பெரும்பகுதி இடத்தை ஆக்கிரமித்திருக்கும் வேப்ப மரங்களை வெட்டவும், பேருந்து போக்குவரத்திற்கு இடைஞ்சலாக வீதிகளில் நெடுநேரம் நிறுத்தப்படும் வாகனங்களைப் பறிமுதல் செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அப்போது ஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர்.
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் எம்.ஜஹாங்கீர், பதுருல் ஹக், சாமு ஷிஹாபுத்தீன், அஜ்வாத் அபூபக்கர், இ.எம்.சாமி ஆகியோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.
இந்நிலையில், காயல்பட்டினத்தில் ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவது குறித்த துறைசார் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தலைமையில் நேற்று மதியம் நடைபெற்றுள்ளது. காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையாவும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அப்போது மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளிடம் கேட்டறிந்ததாகவும், வரும் வாரத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் காயல்பட்டினம் வந்து ஆய்வு செய்யவிருப்பதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாகவும், அதற்குப் பின்னர் ஒருவழிப்பாதை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |