காயல்பட்டினம் நகரில் புற்றுநோய் காரணிகளைக் கண்டறிவதற்காக இயங்கி வரும் Cancer Fact Finding Committee - CFFC குழுமம் சார்பில், நகரில் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு, முறையான ஆய்வறிக்கைகள் பெறப்பட்டு, அவ்வறிக்கைகளை உலக நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களில் சமர்ப்பிக்குமாறு கோரி அனைத்துலக காயல் நல மன்றங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பெறப்பட்ட அறிக்கை காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் ஹாங்காங் இந்திய தூதரகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
காயல்பட்டினத்தில் பெருகி வரும் புற்றுநோய் குறித்து Cancer Fact Finding Committee - CFFC சார்பில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. காயல்பட்டினத்தில் நிலவும் சுற்றுச்சூழல் மாசு, கடலில் கலக்கப்படும் வேதியல் கழிவுகள் உள்ளிட்டவை இந்நோய் பரவலுக்கு பெருங்காரணமாக இருக்கலாம் என தகுந்த ஆதார ஆவணங்களுடன் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் கடந்த செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்ட படி, இந்த ஆய்வறிக்கையிலுள்ள தகவல்களை, முதற்கட்டமாக, ஹாங்காங் வாழ் காயலர்களிடம் விளக்கி, அவர்களின் கைச்சான்றுகளைப் பெறப்பட்டது.
பின்னர், 16.12.2011 அன்று மாலையில், எமது அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா, பொருளாளர் ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன் ஆகியோரடங்கிய குழு, ஹாங்காங் நாட்டின் இந்திய தூதரகத்தில், இந்திய துணைத் தூதர் திரு.அஜீத் குமார் அவர்களிடம் ஆய்வறிக்கையை, பெறப்பட்ட கைச்சான்றுகளுடன் இணைத்து சமர்ப்பித்து, காயல்பட்டினத்தில் புற்றுநோய் பாதிப்பிற்குள்ளாகி அல்லல்பட்டு வரும் அப்பாவி பொதுமக்களின் நிலை குறித்தும், புற்றுநோயல் அடிக்கடி நகரில் மக்கள் இறப்பது குறித்தும் அக்குழு விளக்கியது.
அவற்றை மிகுந்த கவனத்துடனும், கவலையுடனும் கேட்டறிந்த இந்திய துணைத் தூதர் திரு.அஜீத் குமார் அவர்கள், நமக்கு ஆறுதல் தரும் வகையிலும், புற்றுநோய் பரவல் தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து ஊக்கமளிக்கும் வகையிலும் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதோடு, ஆதார ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கையை இந்திய தலைநகர் புதுடில்லியிலுள்ள சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
கருணையுள்ள அல்லாஹ் நம் நகரின் அனைத்து சமயங்களைச் சார்ந்த மக்களையும் இக்கொடிய உயிர்க்கொல்லி நோயிலிருந்து காத்தருள்வானாக, ஆமீன்.
இவ்வாறு, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
S.A.முஹம்மத் நூஹ்,
துணைத்தலைவர்,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை, ஹாங்காங். |