“எப்படியேனும் உயிர் பிழைத்து விட வேண்டும் என்று கருதி, மீன்பிடி வலைகள் உள்ளிட்ட எங்கள் பொருட்களை கடலிலேயே வீசியெறிந்துவிட்டோம்...” என, படகு விபத்திலிருந்து மீண்ட காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.
காயல்பட்டினம் கற்புடையார்பள்ளி வட்டம் பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் மகன் ஜாஹிர் (35). இவரும், சாகுல் ஹமீத், ஷேக் ஃபரீத், யாசின் மற்றும் சீலன் ஆகிய ஐவரும் பைபர் படகு ஒன்றில், 16.12.2011 வெள்ளிக்கிழமையன்று காலை மீன் பிடிக்க சென்றனர்.
மணப்பாடு அருகில் மதியம் 02.00 மணியளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது பைபர் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. உடனடியாக தம் பகுதியைச் சார்ந்த உறவினர்களுக்கு அவர்கள் தகவல் தெரிவித்ததையடுத்து விரைந்து சென்ற உறவினர்கள், படகு விபத்தால் கடலில் தத்தளித்த இவ்வைவரையும் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
இதுகுறித்து, உயிர் பிழைத்த மீனவர்கள் காயல்பட்டணம்.காம் வலைதளத்திற்கு அளித்த நேர்காணல் பின்வருமாறு:-
ஜாஹிர் ஹுஸைன், ஷாஹுல் ஹமீத், ஷேக் ஃபரீத், சீலன், யாசின் ஆகிய நாங்கள் ஐவரும் மீன் பிடிப்பதற்காக 16.12.2011 வெள்ளிக்கிழமை காலையில் கடலுக்குச் சென்றோம்... மதியம் 02.30 மணியளவில் காற்று திடீரென பலமாக வீசியது... சில மணித்துளிகளில் எங்கள் ஃபைபர் படகிற்குள் தண்ணீர் மெல்ல மெல்ல நுழைந்து, படகு சரியத் துவங்கியது...
விளையப்போகும் ஆபத்தை விரைவாக உணர்ந்துகொண்ட நாங்கள், உடனடியாக எங்கள் உறவினர்களுக்கு கைபேசி மூலம் தகவல் தெரிவிக்கவே, எங்களைக் காப்பாற்ற அவர்கள் விரைந்து வந்தனர்...
அவர்கள் வருவதற்குள், படகிற்குள் தண்ணீர் கூடுதலாக உள்ளே நுழைந்துகொண்டிருந்தது... நீர் மட்டம் ஏற ஏற, எங்கள் படகின் யமஹா இஞ்சின் பழுதடைந்து, முற்றிலும் செயலற்றுப் போனது... படகு கொஞ்சங்கொஞ்சமாக கடலுக்குள் மூழ்கத் துவங்கியது...
இனியும் தாமதித்துப் பயனில்லை என்று கருதிய நாங்கள், எங்கள் படகிற்குள் இருந்த மீன் வலைகள் உள்ளிட்ட கனமான பொருட்கள் அனைத்தையும் கடலுக்குள் வீசியெறிந்துவிட்டோம்... படகில் தண்ணீர் நிறையாத மறுமுனையில் நாங்கள் அனைவரும் ஒன்றாக நின்றுகொண்டோம்...
இஞ்சின் செயலற்றுப் போனதால், விரைவாக பாய்மரத்தை நிறுவி, கரைக்கு வர கடும் முயற்சிகள் மேற்கொண்டோம்... சில மணி நேர தவிப்பிற்குப் பின்னர், எமது உறவினர்கள் மற்றொரு படகில் எங்களைக் காப்பாற்றி அழைத்துச் சென்றனர்...
கடலில் மிக ஆழமான பகுதியில் விபத்தைச் சந்தித்த நாங்கள், உயிரைக் காப்பாற்றுவதற்காக எங்கள் வலைகள் உள்ளிட்ட கனமான பொருட்களை கடலில் வீசியெறிந்துவிட்டதால், இப்போது தொழிலுக்கு வழியின்றி தவித்துக்கொண்டிருக்கிறோம்...
எனினும், எங்களைக் காப்பாற்றிய இறைவனுக்கே எல்லாப்புகழும்!
இவ்வாறு படகு விபத்தில் உயிர் பிழைத்த மீனவர்கள் தெரிவித்தனர். காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, அவரது கணவர் ஷேக் அப்துல் காதிர் ஆகியோர் இச்சந்திப்பின்போது உடனிருந்தனர். |