வரும் ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில், குடும்ப அட்டை பெயர் திருத்த முகாம் காயல்பட்டினத்தில் நடத்தப்படும் என காயல்பட்டினம் வந்திருந்த மாவட்ட வழங்கல் அலுவலர் பஷீர் தெரிவித்துள்ளார்.
காயல்பட்டினத்தில், பல்வேறு பகுதிகளிலுள்ள நியாய விலைக் கடைகளின் குளறுபடிகள் குறித்து கேட்டறிவதற்காக, மாவட்ட வழங்கல் அலுவலர் பஷீர், 21.12.2011 அன்று மதியம் 02.00 மணிக்கு காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
அப்போது, காயல்பட்டினம் முதலாவது வார்டுக்குட்பட்ட பகுதியில் இரண்டு இடங்களில் செயல்படும் நியாய விலைக்கடையை ஒரே இடத்தில் அமைத்துத் தருமாறு அந்த வார்டு உறுப்பினர் ஹாஜி ஏ.லுக்மான் கோரிக்கை வைத்தார். அதுபோல, காயல்பட்டினம் 08, 09ஆவது வார்டுக்குட்பட்ட மக்களுக்காக குருவித்துறைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் நியாய விலைக்கடையை இரண்டாகப் பிரித்துத் தருமாறு அந்த வார்டுகளின் உறுப்பினர்களான எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், ஹைரிய்யா ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.
அவற்றைக் கேட்டறிந்த மாவட்ட வழங்கல் அலுவலர், குருவித்துறைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் நியாய விலைக்கடையை சோதனை அடிப்படையில் பிரித்துத் தர ஆவன செய்வதாகவும், மகளிர் சுய உதவிக்குழு மூலம் துவக்கமாக அதை செயல்படுத்துமாறும், அதன் செயல்பாடுகளைக் கண்காணித்து, அதனடிப்படையில் அடுத்தடுத்த கடைகளுக்கும் இதுபோன்று ஒப்புதல் வழங்கப்படும் என்றும் அப்போது தெரிவித்தார்.
பின்னர் அவரிடம் பேசிய காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, குடும்ப அட்டைகளில் உள்ள பெயர் பதிவு குளறுபடிகள் காரணமாக நகர பொதுமக்கள் - குறிப்பாக பெண்கள் மிகுந்த அல்லலுறுவதாகவும், நகராட்சியான பிறகும் கூட இந்நகர மக்கள் அண்டை ஊர்களுக்குச் சென்றுதான் பெயர் திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலையுள்ளது என்றும், அவற்றைப் போக்கும் முகமாக குறுகிய கால இடைவெளியில் அடிக்கடி முகாம் நடத்தி, இங்கேயே பெயர் திருத்த ஆவன செய்து தருமாறும் கேட்டுக்கொண்டதோடு, கோரிக்கை மனுவையும் கையளித்தார்.
அதற்கு இசைவு தெரிவித்த மாவட்ட வழங்கல் அலுவலர் பஷீர், வரும் ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில், குடும்ப அட்டை பெயர் திருத்த முகாம் நடத்த - துறைசார் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அறிவிப்பதாகத் தெரிவித்தார். பொதுமக்களுக்கு ஏற்படும் தேவையற்ற இடையூறுகளைப் போக்க தன்னாலியன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஆயத்தமாக உள்ளதாக அப்போது அவர் மேலும் தெரிவித்தார்.
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் எம்.ஜஹாங்கீர், ஹைரிய்யா, இ.எம்.சாமி மற்றும் பொதுமக்கள் சிலரும் இந்கிழ்வின்போது உடனிருந்தனர்.
பின்னர், அவர் காயல்பட்டினம் கோமான் தெரு நியாய விலைக்கடை, குருவித்துறைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் நியாய விலைக்கடை ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு, குறைகளைக் கேட்டறிந்தார்.
அதிமுக மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவர் எம்.ஜே.செய்யித் இப்றாஹீம், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனிடம் கோரிக்கை வைத்ததன் பேரில் அவரது உத்தரவுப் படியே மாவட்ட வழங்கல் அலுவலர் காயல்பட்டினம் வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |