காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியில், தமிழக அரசின் - 11ஆம் வகுப்பு மாணவ-மாணவியருக்கான மிதிவண்டி இலவச வினியோக விழா 20.12.2011 திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
முன்னதாக, அவரையும் இதர நகர்மன்ற உறுப்பினர்களையும், பள்ளி தலைமையாசிரியை எம்.ஜெஸீமா சால்வை அணிவித்து வரவேற்றதோடு, வரவேற்புரையாற்றினார்.
பின்னர் உரையாற்றிய நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, மறுசுழற்சி செய்யவியலாத ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்பாட்டை பழக்கத்திலேயே நிறுத்த வேண்டும் என்றும், இதற்காக தம் குடும்பத்தினர், உற்றார்-உறவினர், நண்பர்கள் என அனைவரிடமும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, காயல்பட்டினத்தை ப்ளாஸ்டிக் பயன்பாடில்லா நகரமாக மாற்றிக் காட்ட வேண்டுமென்றும் மாணவியருக்கு அறிவுரை வழங்கினார்.
பள்ளியின் கணித ஆசிரியை பி.பீவி ஃபாத்திமா நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, எம்.ஜஹாங்கீர், அஜ்வாத் அபூபக்கர் ஆகியோரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில், பள்ளியின் 11ஆம் வகுப்பைச் சேர்ந்த 97 மாணவியருக்கு தமிழக அரசின் மிதிவண்டிகள் இலவசமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தகவல்:
மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி,
பிரதான வீதி, காயல்பட்டினம். |