நலத்திட்ட உதவிகளுக்காக ரூபாய் 1.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யவும், வரும் 2012ஆம் ஆண்டு முதல், ஹாஃபிழ் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும், இன்னும் பல திட்டங்களை செயல்படுத்தவும், சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் அதன் செயலர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கூட்ட நிகழ்வுகள்:
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் 16.12.2011 அன்று 19.45 மணிக்கு, மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் தலைமையில், சிங்கப்பூரிலுள்ள மன்றத்தின் பதிவு அலுவலகத்தில் நடைபெற்றது. ஹாஃபிழ் எம்.ஆர்.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
தலைமையுரை:
அடுத்து தலைமையுரையாற்றிய மன்றத் தலைவர், மன்றத்தால் நடத்தப்படும் கூட்டங்களில் உறுப்பினர்கள் குறித்த நேரத்தில் வருகை தர வேண்டியதன் அவசியம் குறித்தும், கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து மன்றத்தால் அனுப்பப்படும் மின்னஞ்சல், கைபேசி குறுஞ்செய்திகளுக்கு உடனுக்குடன் பதில் தர வேண்டுமென்றும் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.
சிறு கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின், மன்றத்தின் மாதாந்திர கூட்டங்களை, அனைத்து செயற்குழு மற்றும் பருவ கால உறுப்பினர்களின் ஒப்புதலுடன் வெள்ளிக்கிழமை இரவுகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
புதிய ஹாஜிக்கு வரவேற்பு:
இவ்வாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு வந்துள்ள மன்றத்தின் துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.டி.ஸூஃபீ ஹுஸைனுக்கு கூட்டத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. அவர் தனது ஹஜ் பயண அனுபவங்களை உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
புதிய உறுப்பினருக்கு வரவேற்பு:
மன்றத்தின் புதிய உறுப்பினராக இணைந்துள்ள ஹாஃபிழ் எம்.ஆர்.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ இக்கூட்டத்தில் வாழ்த்தி வரவேற்கப்பட்டார்.
கடந்த கூட்ட நிகழ்வுகள் - செயலர் உரை:
பின்னர், கடந்த கூட்ட நிகழ்வுகள் குறித்து மன்றச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் விளக்கிப் பேசினார். மருத்துவ உதவி கோரி நகரிலிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மிகவும் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த அவர், இதுகுறித்து முறையான செயல்திட்டம் வகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று தெரிவித்தார்.
அத்துடன், அவசர மருத்துவ உதவியாக, மன்றத் தலைவரின் ஒப்புதலுடன் ரூ.23,500 தொகை வழங்கப்பட்டுள்ள விபரத்தையும் அவர் செயற்குழுவில் தெரிவித்தார்.
மருத்துவ உதவிக்கு ஒருங்கிணைந்த செயல்திட்டம்:
அவரது உரையைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த உறுப்பினர் எஸ்.எச்.உதுமான், மருத்துவ உதவி கோரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கருத்திற்கொண்டு, ஜித்தா - ரியாத் - தம்மாம் காயல் நற்பணி மன்றங்கள், இதர மன்றங்களுக்கு அழைப்பு விடுத்து, கூட்டு செயல்திட்டத்தை உருவாக்க முயற்சி மேற்கொள்ளலாம் என்றும், அதனால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறையவும், கொடுக்கப்படும் உதவிகள் குறித்து அனைத்து மன்றங்களுக்கிடையிலும் தகவல் பரிமாற்றம் செய்வதால், வீண் விரயங்கள் தவிர்க்கப்படும் என்றும் கருத்து தெரிவித்தார்.
பொருளரின் வரவு-செலவு கணக்கறிக்கை:
அதனைத் தொடர்ந்து, மன்றத்தின் இன்று வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை சமர்ப்பிக்க, கூட்டம் அதை ஒருமனதாக அங்கீகரித்தது.
மன்ற உறுப்பினர்கள் தமது மாதாந்திர சந்தா தொகையை, வரும் 2012ஆம் ஆண்டிலிருந்து, மூன்று மாதங்களுக்கொருமுறை முழுமையாக வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
நலத்திட்ட உதவிகளுக்கு நிதியொதுக்கீடு:
மருத்துவ உதவி வகைக்காக ரூ.75,000 தொகையும், கல்வி உதவி வகைக்காக ரூ.50,000 தொகையும் நிதியொதுக்கீடு செய்ய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இத்தொகை, மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி மூலம் 2012 ஜனவரி மாதத்தில் வினியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
புதிய ஆண்டுக்கான நிதிநிலையறிக்கை:
2012ஆம் ஆண்டுக்கான மன்றத்தின் நிதிநிலை முன்னறிக்கையை ஆயத்தம் செய்வதற்காக, மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான், பொருளர் கே.எம்.டி.சுலைமான், செயலர் மொகுதூம் முஹம்மத், முஹம்மத் இல்யாஸ், ஜவஹர் இஸ்மாஈல், முஹம்மத் ஹரீஸ், ஸிராஜ் ஆகியோரடங்கிய குழு நியமனம் செய்யப்பட்டது. (ஜனவரி 2012இல் நடைபெறும்) மன்றத்தின் அடுத்த செயற்குழுவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென கால நிர்ணயம் செய்யப்பட்டது.
ஹாஃபிழ் மாணவ-மாணவியருக்கு ஊக்கத்தொகை:
நகரில், திருக்குர்ஆன் மனனம் (ஹிஃப்ழு) செய்யும் மாணவ-மாணவியரை ஊக்குவிக்கும் நோக்குடன் மன்றத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட - நகர ஹாஃபிழ்கள் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், மாணவ-மாணவியர் ஹிஃப்ழு முடித்த விபரங்களடங்கிய - மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி சமர்ப்பிக்கும் அறிக்கையின்படி, எதிர்வரும் 2012 ஜனவரி மாதம் முதல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
இக்ராஃவின் பரிசுப்பட்டியிலில் பங்கேற்பு:
ஆண்டுதோறும் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புடன் இணைந்து நடத்தும் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சியின்போதான பரிசளிப்புப் பட்டியலில், மன்றத்தின் பங்களிப்பிலான பரிசுகள் குறித்து இக்கூட்டத்தில் இறுதி முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து, விரைவில் இக்ராஃ நிர்வாகத்திற்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
DCW விரிவாக்கம் குறித்த CFFCயின் நடவடிக்கைக்கு ஆதரவு:
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டம் குறித்த Cancer Fact Finding Committee - CFFCயின் நடவடிக்கைகளுக்கு, மன்றத்தின் சார்பில் முழு ஒத்துழைப்பளிக்க தீர்மானிக்கப்பட்டது.
அடுத்த பொதுக்குழு:
மன்றத்தின் அடுத்த பொதுக்குழுவை - குடும்ப சங்கம நிகழ்ச்சியாக எதிர்வரும் 28.01.2012 அன்று சிங்கப்பூர் Harbour Front MRT அருகில் அமைந்திருக்கும் Labrador Parkஇல் நடத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதுகுறித்து அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் முறைப்ப்டி தகவல் தரப்படும்.
விளையாட்டு ஏற்பாட்டுக் குழு:
மன்றத்தின் சார்பில் 2012ஆம் ஆண்டு ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படும் (டென்னிஸ், க்ரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட) விளையாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதற்காக, எஸ்.டி.செய்யித் முஹ்யித்தீன், முஹம்மத் உமர் ரப்பானீ, எஸ்.எச்.உதுமான், எஸ்.டி.ஸூஃபீ ஹுஸைன் ஆகியோரடங்கிய குழு நியமனம் செய்யப்பட்டது.
விவாதிக்க வேறம்சங்கள் இல்லா நிலையில், 21.30 மணிக்கு, ஹாஃபிழ் எம்.ஆர்.ஏ.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களும், சிறப்பழைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, சிங்கை காயல் நல மன்ற செயலாளர் மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |