காயல்பட்டினம் நல அறக்கட்டளை (KWT) ஏற்பாட்டில் இம்மாதம் 20, 21 தேதிகளில் காயல்பட்டினம் துளிர் அரங்கம், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி ஆகிய இடங்களில் மனநல கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
மகிழ்வோடு வாழ்ந்திட - மாபெரும் கருத்தரங்கம்! காயல்பட்டினம் நல அறக்கட்டளை ஏற்பாடு!!
நலமான வாழ்க்கை என்பது வெறும் உடல் நலத்துடன் மட்டும் தொடர்புடையது அல்ல. உடலும் மனதும் ஒன்றாக சிறந்து நலத்துடன் திக ழும்போது மட்டுமே நிறைவான ஆரோக்ய வாழ்வாக கருதப்படும்.
கடந்த மே.29 அன்று நமதூர் தஃவா சென்டரில் பண்பாட்டு சீரழிவு தொடர்பான கருத்தரங்கு ஒன்று நடைபெற்றதை நாம் அறிவோம் அதில் நமதூர் மக்களிடையே வளர்ந்து வரும் பண்பாடு வீழ்ச்சிக்கான காரணங்கள், விளைவு, தீர்வுகள் அலசி ஆராயப்பட்டன.
குறிப்பாக மன விலக்கு, தோல்வியில் வந்து முடியும் மன வாழ்வு, நம் குடும்பங்களில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகள், நமதூர் இளைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் ஒழுக்க ரீதியான சவால்கள் போன்ற எண்ணற்ற பிரச்சனைகள் நமதூரை பிடித்தாட்டும் தலையாய பிரச்சனைகளாக கண்டெடுக்கப்பட்டது.
இந்த பிரச்னைக்கான சிறந்த பல தீர்வுகள் விவாதிக்கப்பட்டன.அவற்றில் முக்கியமானதாக குடும்ப உளவள மையம் ஒன்றை நமதூரில் ஏற்படுத்துவதை பற்றி அனைவரிடமும் ஒற்றைக் கருத்து காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தொடர் ஆலோசனைக்கூட்டம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
இத்தொடர் ஆலோசனைகளின் மூலம் உளவள மையம் நிறுவும் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டு அதன் தொடக்கமாக உள வளத்தின் தேவை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் ஒன்று நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற டிச,20-21 ஆகிய இரு தினங்களில் கீழ்கண்ட இடங்களில் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.
கருத்தரங்கத்தை வழிநடத்தி உங்கள் சந்தேகங்களுக்கு விடையளிப்பவர்:
சகோதரி A.S குர்ஷித் பேகம் M.A PSYCHOLOGY & MSW அவர்கள்
(மனநல ஆலோசகர், சென்னை)
நிகழ்ச்சி நிரல்:
கருத்தரங்கம் 1 : உள்ளத்தை வெல்வோம்!
நாள் : 20-12-2011 அன்று செவ்வாய்க் கிழமை
நேரம் : காலை 10 மணி
இடம் : அன்னை ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி வளாகம், காயல்பட்டினம்
கருத்தரங்கம் 2 : நிம்மதி உங்கள் சாய்ஸ்!
நாள் : 20-12-2011 அன்று செவ்வாய்க் கிழமை
நேரம் : மாலை 4:30 மணி
இடம் : துளிர் அரங்கம், காயல்பட்டினம்
கருத்தரங்கம் 3 : சாதிப்போம் வாருங்கள்!
நாள் : 21-12-2011 அன்று புதன் கிழமை
நேரம் : காலை 10 மணி (கல்லூரி மாணவிகளுக்கு மட்டும்)
இடம் : வாவு வஜிஹா மகளிர் கலைக் கல்லூரி, காயல்பட்டினம்
நமதூர் மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நன்நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கருத்தரங்குகளில் அனுபவம் வாய்ந்த அறிஞர்களின் கலந்துரையாடல்கள் இடம் பெறுகின்றன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி தனியான இடவசதிகள், கேள்வி பதில் நிகழ்ச்சி மற்றும் தனிப்பட்ட முறையில் வல்லுனரை சந்தித்து ஆலோசனைகள் பெறுதல் போன்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உங்கள் குடும்பத்தோடு இக்கருத்தரங்க நிகழ்ச்சிகளுக்கு வருகை தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு, காயல்பட்டினம் நல அறக்கட்டளை (KWT) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஃபிர்தவ்ஸ்,
செய்தித் தொடர்பாளர்,
காயல்பட்டினம் நல அறக்கட்டளை,
காயல்பட்டினம். |