தமிழ்நாட்டில் பெண்டாவேலண்ட் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
சுகாதாரம் மற்றும் குடும்ப நல திட்டங்களை நடைமுறைபடுத்துவதில் தமிழ்நாடு, நாட்டிலேயே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. குறிப்பாக தாய் சேய் நல திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அடிப்படை சுகாதார வசதிகள் ஏழை எளிய மக்களுக்கு அவர்கள் தம் வசிப்பிடத்திலேயே கிடைக்கும் பொருட்டு, இந்த அரசு தடுப்பூசி சேவையை மருத்துவ மனைகளில் வழங்குவது மட்டுமின்றி, அனைத்து கிராமங்களிலும் உள்ள குழந்தைகள் பயனடையும் வகையில் கிராம சுகாதார செவிலியர் மூலமாக தடுப்பூசி வழங்க ஆணையிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தடுப்பூசியின் சாதனைகள்:
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும், சுமார் 11 இலட்சம் பிறந்த குழந்தைகளுக்கு தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் 5 வகையான தடுப்பூசிகள் (BCG,OPV,DPT,Measles,Hepatitis-B) வழங்கப்படுகின்றன. தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகள் காசநோய், இளம்பிள்ளை வாதம், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், இரண ஜன்னி, மஞ்சள் காமாலை-பி மற்றும் தட்டம்மை ஆகிய கொடிய உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து
பாதுகாப்பு பெறுகின்றனர்.
தடுப்பூசி திட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டதால், கடந்த 7 ஆண்டுகளாக போலியோவினால் எந்தக் குழந்தையும் பாதிக்கப்படவில்லை. தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், இரண ஜன்னி போன்ற நோய்களின் தாக்கம் இல்லை.
தட்டம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
சுகாதாரம் சம்பந்தமான சிறந்த உள்கட்டமைப்பை தமிழ்நாடு பெற்றிருப்பதாலும், தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் சிறந்த மாநிலமாக திகழ்வதாலும், மத்திய அரசு பெண்டாவேலண்ட் தடுப்பூசியை அறிமுகப்படுத்த தமிழகத்தை தேர்வு செய்துள்ளது. ஏற்கெனவே தடுப்பூசி திட்டத்தில் வழங்கப்படும் DPT மற்றும் Hepatitis - B தடுப்பூசிகளுடன் Hib சேர்க்கப்பட்டு பெண்டாவேலண்ட் என்ற ஒரே தடுப்பூசியாக தற்போது வழங்கப்படவுள்ளது.
பெண்டாவேலண்ட் தடுப்பூசிக்கான தவணைகள்:
குழந்தைகளுக்கு மூன்று தவணைகளாக 6-வது, 10-வது மற்றும் 14-வது வாரங்களில் போலியோ சொட்டு மருந்துடன் கொடுக்க வேண்டும்.
டிசம்பர் மாதத்திலிருந்து, DPT முதல் தவணை தடுப்பூசிக்கு தகுதியுள்ள 1.5 மாத குழந்தைகளுக்கு மட்டும் பெண்டாவேலண்ட் தடுப்பூசி ஆரம்பிக்கப்படும்.
பெண்டாவேலண்ட் தடுப்பூசியின் பயன்கள்:
பெண்டாவேலண்ட் தடுப்பூசி தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், இரணஜன்னி, மஞ்சள் காமாலை-பி, நிமோனியா மற்றும் மூளைப்பாதிப்பு ஆகிய 5 கொடிய உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
பெண்டாவேலண்ட் தடுப்பூசி அறிமுகப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்:
- குழந்தைகளுக்கு போடப்படும் ஊசிகளின் எண்ணிக்கை குறைகிறது.
- புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Hib தடுப்பூசி, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா மற்றும் மூளைபாதிப்பை குறைக்கிறது.
பயனாளிகள்:
நடப்பு ஆண்டில் 2011-12-ல் 3.60 இலட்சம் குழந்தைகள் பெண்டாவேலண்ட் தடுப்பூசியின் மூலம் பயன் பெறுவர். வரும் காலங்களில், ஓவ்வொரு ஆண்டும் சுமார் 11.00 இலட்சம் குழந்தைகள் மூன்று தவணைகள் பெண்டாவேலண்ட் தடுப்பூசி போடப்பட்டு பயன் பெறுவார்கள்.
தொடக்க விழா:
மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் 17-12-2011 அன்று காலை 10.00 மணி அளவில் வேலூர் மாவட்டத்திலுள்ள அலமேலுமங்காபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்டாவேலண்ட் தடுப்பூசியை தொடங்கி வைக்க உள்ளார்கள்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை |