காயல்பட்டினத்தின் பல்வேறு தெருக்களில் சிமெண்ட் சாலை அமைக்க, தூத்துக்குடியைச் சார்ந்த ரம்போலா என்பவருக்கு கடந்த நகராட்சியால் டெண்டர் அனுமதி வழங்கப்பட்டு, அதனடிப்படையில் இன்றளவும் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
சாலைகள் முழுமையாக போடப்பட்ட பல வீதிகளில், அச்சாலைகளின் ஓரங்கள் ஒப்பந்தப்படி சரிசெய்யப்படாமல் உள்ளது. சுமார் ஓரடி உயரத்தில் புதிய சாலை அமைப்பதால், சாலையின் ஓரங்கள் செப்பனிடப்படாத நிலையில், அவ்வழியே கடந்து செல்லும் முதியோர் - சிறுவர் - பெண்களும், வாகனங்களில் செல்வோரும் பெரும் விபத்துக்களை சந்திக்க நேருகிறது. குறிப்பாக, மழைக்காலங்களில் இந்த சாலையில் இரு புறங்களிலும் தண்ணீர் நிறைந்து, அதன் ஓரங்கள் கண்ணுக்குத் தெரியாத நிலையில் விபத்துகள் அதிகளவில் நடைபெறுகிறது.
இதனைக் கருத்திற்கொண்டு, தற்போதைய நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகர்மன்றத் தலைவரும், நகராட்சி ஆணையரும் பலமுறை கேட்டுக்கொண்ட பிறகே ஒரு சில இடங்களில் புதிய சிமெண்ட் சாலைகளின் இரு புறங்களிலும் செங்கல் கொண்டு ஓரம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காயல்பட்டினம் சித்தன் தெருவில் கடந்த சில தினங்களுக்கு முன் சிமெண்ட் சாலை புதிதாக அமைக்கப்பட்டது.
வழமைக்கு மாற்றமாக, அத்தெருவின் ஒரு சில வீடுகளுக்கு முன்புறத்தில் மட்டும் சாலையிலிருந்து வாகனம் கீழிறங்குவதற்குத் தோதுவாக பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையாவிடம் வினவியபோது, இதில் நகராட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், ஒப்பந்தக் காரருக்கும், அப்பகுதி மக்களுக்கும் தொடர்பான அம்சமே இது என்றும் தெரிவித்தார்.
தூத்துக்குடியைச் சார்ந்த ஒப்பந்தக்காரர் ரம்போலாவைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது, தற்போதுதான் தனக்கு இத்தகவல் தெரிய வருவதாகவும், விசாரித்தறிந்து எது சரியோ அது செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
வீடுகளுக்கு தனித்தனியே வாகனப்பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள இச்செயல்பாடு, ஒப்பந்தப்படி வருங்காலத்தில் இச்சாலை முழுவதும் ஓரம் அமைக்கப்படுமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இது ஒருபுறமிருக்க, சாலை அமைக்க பயன்படுத்தப்பட்ட கல்வையிலுள்ள கழிவுகளைப் பயன்படுத்தி இன்று காலையில், இதே தெருவின் இன்னும் சில வீடுகள் முன் பொதுமக்கள் சுயமாகவே வாகனப்பாதை அமைத்துக் கொண்ட காட்சி:-
செய்தியில் சில வாசகங்கள் சேர்க்கப்பட்டு, ஒரு படம் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. (18.12.2011 - 14:02hrs) |