மணப்பாடு அருகில் கடலில் தத்தளித்த காயல்பட்டினம் சிங்கித்துறை மீனவர்கள் ஐவர் மீட்கப்பட்டனர்.
காயல்பட்டினம் கற்புடையார்பள்ளி வட்டம் பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் மகன் தாஹிர் (35). இவரும், சாகுல், ஃபரீத், யாசின் மற்றும் சீலன் ஆகிய ஐவரும் பைபர் படகு ஒன்றில் வெள்ளிக்கிழமை (இன்று) காலை மீன் பிடிக்க சென்றிருக்கின்றனர்.
மணப்பாடு அருகில் வெள்ளிக்கிழமை மதியம் 02.00 மணியளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது பைபர் படகு கவிழ்ந்து விட்டது. கடலில் விழுந்து தத்தளித்த ஐந்து மீனவரும் கவிழ்ந்த படகின் மீது ஏறி அமர்ந்து, கற்புடையார்பள்ளி வட்டத்திலுள்ள மீனவர்களுக்கு கைபேசி மூலம் தகவல் அனுப்பினர்.
இத்தகவலையறிந்து, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெ.அந்தோணி, பத்ருல் ஹக் ஆகியோர் கற்புடையார் பள்ளி வட்டம் கடற்கரைக்கு விரைந்து சென்றனர். நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தன் புறத்திலிருந்தும் தகவல் தெரிவித்து துரித நடவடிக்கை மேற்கொள்ளக் கோரினார்.
கற்புடையார்பள்ளி வட்டம் பகுதியைச் சார்ந்த மீனவர்கள் மணப்பாடு அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தங்கள் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கு தகவல் தந்தனர். அதனைத் தொடர்ந்து அந்த மீனவர்கள், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஐந்து மீனவர்களையும் மீட்டதோடு, அவர்களின் படகையும் இன்றிரவு கரைக்கு கொண்டு வந்தனர். படகு சேதமடைந்திருந்தது. மீனவர்கள் கரைக்கு திரும்பியதால் உறவினர்கள் மகிழ்ச்சியடைந்தனர். |