புனிதப் பயணம் மேற்கொள்ளும் காயல்பட்டினத்தைச் சார்ந்த மக்களுக்கு மக்காவில் வழிகாட்டும் அமைப்பை ஏற்படுத்த வேண்டுமென ஜித்தா காயல் நற்பணி மன்ற பொதுக்குழு தீர்மானித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 26ஆவது பொதுக்குழுக் கூட்டம், 09.12.2011 வெள்ளிக்கிழமை மாலை 05:30 மணியளவில், இம்பாலா உணவக கூட்டரங்கத்தில் நடந்தேறியது.
மருத்துவர் எம்.ஏ.முஹம்மது ஜியாது தலைமை தாங்க, சகோதரர்கள் பொறியாளர் கே.எஸ்.எம்.செய்யிது பஷீர், எஸ்.எஸ்.ஜாபர் சாதிக், முஹம்மது அஸ்லம், கவிஞர் ஜாகிர் ஹூசைன், எஸ்.ஹெச்.அப்துல்காதர், இவர்கள் முன்னிலை வகிக்க, பாரூக் ஆலீம் பாஸி பேரன், ஹாபிழ்.என்.முஹைதீன் அப்துல்காதர் இறைமறை ஓத, கூட்டம் ஆரம்பமானது. சகோ. கே.வி.கே. ஷாஹ் மீரான் ஸாஹிப் ரியாஸ் அனைவரையும் வரவேற்றார். சகோ. ஒய்.எம்.முஹம்மது ஸாலிஹ் நிகழ்ச்சியை தொகுத்தளித்தார்.
இளைஞர் பருவத்தில் முக்கிய பணி:
விழாத்தலைவர், தனது தலைமையுரையில் மூன்று பருவமாற்றங்களைத் தெளிவு படுத்தினார். மாணவப்பருவம், இளைஞர்பருவம், முதுமைப்பருவம், இந்த பருவங்களில் இளைஞர்பருவம் மிக முக்கியமானது. இந்த பருவத்தில் பொதுச்சேவைகளில் தன்னை அர்பணித்து தானதர்மங்களை வறியவர்களுக்கு வாரி வழங்கினால் இறைவனின் நற்கூலி நமக்கு கிடைப்பதோடு நாம் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் நமக்கு மீண்டும் வந்து சேரும்.
(Money to use for good goal) என்று தொடர்ந்த அவர் நம் முன்னோர்களின் கல்வி, சமுதாயம் மற்றும் பொதுநலப்பணிகளை நினைவுகூர்ந்தார். அவர்கள் ஆற்றிய சேவைகள் அளப்பரியது என்றும் அவர்கள் விட்டுச்சென்ற பணியை நாம் தொடரவேண்டுமென்றும் கூறிய அவர், நம் மன்றப் பணிகள் மேலும் சிறக்க சகோதரர்களின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் வேண்டி ஆங்கிலம் கலந்த அழகு தமிழில் தனது உரையை நிறைவு செய்தார்.
மன்ற செயல்பாடுகள்:
மன்ற செயல்பாடுகளை அவருக்கே உரிய அலங்காரப்பாணியில் எடுத்துரைத்த செயலர் சகோ.எஸ்.ஏ.சட்னி செய்யித் மீரான், மன்றம் கடந்து வந்த பாதையில் செப்பணிட்ட நலலுதவிகளை விரிவாக பட்டியலிட்டார். 'இந்த மன்றம் துவக்கப்பட்டு இதுவரையில்; எவ்வித தொய்வுமின்றி செயற்குழு, பொதுக்குழு, ஆண்டுவிழா, என வெற்றிப்பாதையில் பயணம் செய்கின்றது' என்றும் சென்ற செயற்குழு, பொதுக்குழுவில் நடந்த நிகழ்வுகளையும் தீர்மானங்களையும் நினைவு கூறி அமர்ந்தார்.
'இவ்வளவு பெரிய உதவிகளை நம்மன்றம் உங்களனைவரின் ஆதரவோடுதான் அளித்தது என்றால் அது மிகையாகாது' என்று கூறிய செயலர் சகோ.எம்.ஏ.செய்யித் இப்ராஹீம், நம் மன்றத்திற்காக தங்களது திறமைகளை அனைத்து வழிகளிலும் செலவிடும் சகோதரர்களை வெகுவாக பாராட்டியதோடு புதிய உறுப்பினர்களையும் அகமுவந்து வரவேற்றார்.
DCW விரிவாக்க மக்கள் கருத்துணர்வு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்த போது நம் இளைஞர்கள் நல்ல ஆணித்தரமான வாதங்களை எடுத்து வைத்ததையும், திருச்செந்தூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் நடந்த சுனாமி குடியிருப்புபற்றி நடந்த கூட்டத்திலும் எடுத்துச் சொன்ன நிகழ்வுகளையும் வெகுவாக பாராட்டினார்.
நமதூருக்கு வருகைத் தந்த சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவ நிபுணர் சாந்தா அவர்கள் '40 பெண் தன்னார்வத் தொண்டர்கள் இவ்வளவு குறுகிய நாளில் Cancer Survey செய்ததை வியப்புடன் கூறியதையும் இங்கு நினைவுப்படுத்தினார். மேலும் தலைவர் உரையைக் கோடிட்டுக் காட்டி நிச்சயமற்ற நிரந்தரமில்லா நம் வாழ்க்கைக்கு தானதருமம் தான் நிரந்தரம். என்ற நபிமொழிகளையும் எடுத்துக் கூறி தனதுரையை முடித்துக் கொண்டார்.
நிதி நிலை:
பொருளாளர் சகோ. எம்.எஸ்.எல்.முஹம்மத் ஆதம், மன்றத்தின் நிதி நிலை அறிக்கையை துல்லியமாக சமர்ப்பித்தார். நாம் இதுவரை வழங்கிய தொகை, கல்விக்காக, மருத்துவத்திற்காக, சிறு தொழிலுக்காக, மற்றும் அன்று கிடைக்கப்பெற்ற சந்தா, இருப்புத் தொகை என பட்டியலிட்டதுடன், சந்தாக்களையும், நன்கொடைகளையும் தந்து நிதியை அதிகப்படுத்தவும் என்றும் வேண்டிக்கொண்டார்.
பாடல்:
கருத்து பொதிந்த ஒரு இஸ்லாமிய பாடலை, கவிஞர் ஜாஹிர் ஹூசைன் அழகாகப்பாடி கூட்டத்தினை உற்சாகாப்படுத்தினார்.
கருத்துரை:
செயற்குழு உறுப்பினர் சகோ. எஸ்.ஹெச். ஹூமாயூன் கபீர் தனதுரையில் இம்மன்றம் பல தொண்டு நிறுவனங்கள், உலக காயல் நலமன்றங்களுடன் சேர்ந்து பல நல்ல திட்டங்களையும், முகாம்களையும் நடாத்தி தந்துள்ளது என்றும் குறிப்பாக பல் மருத்துவமுகாம் நடந்த போது பெண்களும் தன்னார்வத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு பம்பரமாக சுற்றிவந்ததை தன்னால் மறக்க முடியாது. ஆக பெண்களுக்கும் இப்படி ஆர்வம் வந்ததை நினைத்து பாராட்டி பேசினார்.
'கல்லாமை இல்லாமை ஆக்குவோம'; என்ற தாரகமந்திரத்துடன் இம்மன்றம் ஆரம்பித்து வைத்த இக்ராவின் செயல்பாடுகளையும் விளக்கமாக எடுத்துரைத்து, சந்தா என்று மட்டுமில்லாமல் தாராளமாக தங்கள் நன்கொடைகளையும் தந்துதவுங்கள் அப்போதுதான் நாம் இன்னும் அதிகமாக செய்யலாம். 'மண்ணில் உள்ளவர்களுக்கு நாம் இறக்கம் காட்டவில்லையெனில், விண்ணில் உள்ளவன் நமக்கு இறக்கம் காட்ட மாட்டான்' என்ற இறைவசனங்களையும் எடுத்துக் கூறி தனதுரையை நிறைவு செய்தார்.
DCW தொழிற்சாலையால் இத்தனை ஆண்டு காலமாய் நமதூருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து CFFC யின் அறிக்கையை மேற்க்கோள் காட்டி, அது இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும, தற்போது DCW விரிவாக்கத் திட்டத்தால் மேலும் நம் ஊர் எதிர் நோக்கியுள்ள சுற்றுப்புற சீர்கேடுகள் பற்றியும் விரிவான விள்க்கம் தந்ததுடன், நம் நகராட்சியின் துரித நடவடிக்கைகளையும் பாராட்டியதோடு, நம் கடற்கரையை தூய்மையாக வைத்திடவும் நாம் முனைய வேண்டும். என்ற கருத்தினையும் இங்கு பதிவு செய்து அமர்ந்தார் சகோ. சீனா மொகுதும் முஹம்மது.
தொடர்ந்து, இம்மன்றத்தின் தலைவர் சகோ. குளம் அஹமது மெய்தீன் பேசுகையில், இஸ்லாமிய உணர்வுகளோடு நற்பண்புகளை செவ்வனே செய்து வரும் இம்மன்றத்தின் சேவைகளை சொல்லித்தெரிவதில்லை. நாம் வழங்கும் சந்தா நல்ல வழிகளிலே செலவு செய்வதால் அதன் பலன் நிச்சமாக ஒவ்வொருவருக்கும் சென்று அடையும் என்பதில் சந்தேகமில்லை. தனிமனிதனால் நாம் இவ்வளவு தொகையை செலுத்த முடியாததை நாம் கூட்டாக சேர்ந்து செவ்வனே நிறைவேற்றுகிறோம். நாம் நடத்திய விழிப்புணர்வு, மற்றும் 'புற்றுக்கு வைப்போம் முற்று' குறுந்தகடு வெளியீடு, இந்த நிகழ்வினை பொதிகை தொலைக்காட்சி காரசாரம் நிகழ்ச்சியில் குறிப்பிட்டதையும், இங்கு நினைவு கூர்ந்தார். மேலும் நம் ஊரின் வரலாற்றை சுருக்கமாக சொல்லி சிறப்பு விருந்தினருக்கு விளங்க வைத்து அமர்ந்து கொண்டார்.
சகோ. மூஸா மன்றத்தின் சிறப்பு விருந்தினரைப் பற்றிய சிறியதோர் அறிமுக உரையாற்றிய பின் நாம் செய்யும் அனைத்து பணிகளுக்கும் முதுகெலும்பான சந்தாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அதைத் தவறாது விரைந்து செலுத்தி, மன்றத்தின் பணிகளை மேலும் வீரியமடையச் செய்யுமாறு சகோதரர்களைக் கேட்டுக்கொண்டார்.
சிறப்பு விருந்தினர்:
நம் மன்ற 26 வது பொதுக்குழுவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நம் மாவட்ட சகோ. எம். மல்லப்பன் (GM - Yousef S. Al Rooq Trading Est.) நம் ஊருக்கு நேரடியாக வரவில்லை என்றாலும் ஊரின் பெருமைகளையும், ஊரின் நடப்புகளையும் நான் உங்களது ஊடகங்களின் வாயிலாக தெரிந்து கொள்வேன். திரைகடல் ஓடி திரவியம் தேடு என்ற வார்த்தைக்கு ஏற்ப 50 - 60 வருடங்களுக்கு முன்பே தங்கள் மக்கள் வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்கள் என்றும் ஒரு அரசாங்கம் செய்யும் வேலையை இம்மன்றம் செய்துவருகிறது. ஒரு கட்டுக்கோப்பான ஒழுங்கு முறையை இங்கு காண முடிகிறது என்று வெகுவாகப் பாராட்டிப் பேசியதோடு மன்றத்தின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களையும், பிராத்தனைகளையும் தெரிவித்து காலத்தின் அருமைகருதி ஓரிரு வார்த்தைகளில் சுருக்கமாக தனதுரையை அமைத்துக் கொண்டார்.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
பணிநிமித்தமாக வந்த நமதூர் சகோதரர்கள் ஒருவர் ஒருவராக வந்து தன்னை அறிமுகப்படுத்தி உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டு இவ்வளவு பெரிய சேவைகளை இம்மன்றம் செய்து வருவதை இங்கு வந்து கலந்து கொண்ட போதுதான் அதை உணர முடிந்தது. என்ற பாராட்டுக்களையும் பதிவு செய்தனர்
தீர்மானங்கள்:
கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 – DCW விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு:
DCW விரிவாக்கப் பணிகளினால் நமதூரில் ஏற்படும் சுகாதார சீர்கேட்டிற்கும் அதனால் ஏற்படும் நோயின் தாக்கத்தையும் கருத்தில் கொண்டு, அத்திட்டத்தை முழுமையாக தடுத்து நிறுத்த அனைத்து முயற்ச்சிகளையும் மேற்க்கொள்ளுமாறு நமதூர் நகராட்சியை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. இதற்காக எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் நம்மன்றம் துணை நிற்கும்.
தீர்மானம் 2 – காயல் கடற்கரையை அழகு படுத்துதல்:
நமதூர் கலாச்சாரம், பண்பாடு, கடற்கரை மாசுபடுதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சமீபத்தில் வட்டாச்சியர் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தை இம்மன்றம் வண்மையாக கண்டிப்பதுடன், இதனையும் தடுத்து நிறுத்தும் முயற்ச்சியை மேற்கொள்ளுமாறு நமதூர் நகராட்சியை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 3 – மக்கா காயல் தன்னார்வ அமைப்பு:
நமது மன்றத்தின் மக்கா வாழ் காயல் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து, மக்கா காயல் தன்னார்வ அமைப்பு, ஒன்றை ஆரம்பிப்பதென்றும், இவ்வமைப்பு புனித பயணத்திற்காக மக்கா வரும் நமதூர் மக்களுக்கு தேவையான உதவிகளையும், வழிகாட்டுதல்களையும் ஏற்படுத்திக் கொடுக்கும் என இப்பொதுக்குழு மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
தீர்மானம் 4 – மருத்துவர் அஷ்ரஃபுக்கு பாராட்டு:
இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்லிடம் இருந்து பி.சி.ராய் என்ற உயர் விருதினைப் பெற்று, இன்று தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் அஷ்ரஃப் அவர்களை இம்மன்றம் மனதார வாழ்த்தி மேலும் பல உயர்வுகளைப் பெற்று நம் ஊருக்கும் நம் இந்திய தேசத்திற்கும் பெருமை சேர்த்திட பிராத்திக்கின்றோம்.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சகோ.பொறியாளர். கே.எஸ்.எம்.செய்யிது பஷீர், சகோ. சொளுக்கு செய்து முஹம்மது சாஹிப், குளம்.கே.எஸ்.டி.முஹம்மது அஸ்லம், சகோ.எம்.எம்.எஸ்.சேகு அப்துல்காதர் இவர்களின் அனுசரணையில், அருமையான இரவு உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
சகோ.ஏ.எம்.நூர் முஹம்மது ஜக்கரியா நன்றி நவில, கத்தீபு எம்.என்.உமர் அப்துல் காதிர் பிரார்த்தனையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
சகோதரர்கள் எஸ்.எஸ்.ஜாபர் சாதிக், எஸ்.ஹெச்.ஹூமாயூன் கபீர், சட்னி எஸ்.ஏ.முஹம்மது உமர் ஒலி, கதீபு எம்.என்.லெப்பைத்தம்பி ஆகியோர் பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
இவ்வாறு ஜித்தா காயல் நற்பணி மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.ஹெச்.அப்துல் காதர்
துணைச்செயலாளர்,
காயல் நல மன்றம், ஜித்தா
நிழற்படங்கள்:
முஹம்மது ஸாலிஹ், மக்கா. |