செய்தி எண் (ID #) 7735 | | |
சனி, டிசம்பர் 17, 2011 |
நகரில் ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக்கப்படும் அனைத்து வழித்தடங்களும் அளவீடு! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 4693 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (24) <> கருத்து பதிவு செய்ய |
|
காயல்பட்டினத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெருக்கடியைப் போக்குவதற்காக ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, நகரில் ஒருவழிப்பாதையை செயல்படுத்த பரிசீலிக்கப்படும் பல்வேறு வழித்தடங்கள் இன்று காலை 11.30 மணியளவில் முறைப்படி அளவீடு செய்யப்பட்டன.
வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையில், காயல்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் செல்வலிங்கம் அளவீட்டாளர் கந்தப்பன் ஆகியோரடங்கிய குழுவினர், காயல்பட்டினம் ஓடக்கரையிலிருந்து பூந்தோட்டம் - தைக்காபுரம் வழியாக துளிர் பள்ளி வளாகத்தில் இணையும் சாலை அகலத்தை முதலில் அளவீடு செய்தனர்.
பின்னர், தாயிம்பள்ளி - மூப்பனார் ஓடை குறுக்குச் சாலை வழியாக மேல நெசவுத்தெரு - விசாலாட்சியம்மன் கோயில் தெருவின் அகலத்தை அளந்தனர்.
அடுத்து, அதே மூப்பனார் ஓடை குறுக்குச் சாலை வழியாக பெரிய நெசவுத் தெரு - எல்.கே.லெப்பைத்தம்பி சாலையின் அகலத்தை அவர்கள் அளவீடு செய்து பதிவு செய்துகொண்டனர்.
இறுதியில், அளவெடுக்கப்பட்டுள்ள அனைத்து வழித்தடங்களிலுள்ள சாதக-பாதகங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையில் ஒருவழிப்பாதை குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன், பத்ருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் மற்றும் பொதுமக்கள் சிலர் உடனிருந்தனர்.
பெரிய நெசவுத் தெரு பகுதியில் அளவீடு செய்யப்படும்போது, அத்தெருவைச் சார்ந்த பொதுமக்கள் சிலர், அதிகாரிகளின் வருகை மற்றும் அளவீடு செய்வதற்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் வினவினர்.
நகரில் ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பொருட்டு, பரிசீலிக்கப்படும் அனைத்து வழித்தடங்களும் அளவிடப்பட்டு வருவதாக அப்போது அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தி திருத்தப்பட்டது. (18.12.2011 - 08:56hrs) |