காயல்பட்டினத்தில் நிலவும் பேருந்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய, ஒருவழிப்பாதை அவசியம் என்று பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அமைப்புகளால் அது தொடர்பான துறைகளில் கோரிக்கைகள் பல்லாண்டு காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகளும் அவ்வப்போது வந்து நகரில் ஆய்வு செய்தவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்த காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெரு பாதை பரிசீலிக்கப்படுவதையறிந்து, அப்பாதை ஒருவழிப்பாதைக்கு உகந்ததல்ல என்றும், மாற்று வழிகளைத் தெரிவித்தும், காயல்பட்டினம் நெசவு ஜமாஅத் சார்பில், ஹாஃபிழ் அமீர் (ஒலி) பள்ளிவாசல் சார்பாக அண்மையில் காயல்பட்டணம்.காம் வலைளத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
இதுகுறித்து, நெசவு ஜமாஅத்துடன் நேரில் சந்தித்து, கருத்து கேட்க விரும்புவதாக காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா அந்த ஜமாஅத்திற்கு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், 26.12.2011 அன்று (நேற்று) மாலை 05.00 மணிக்கு காயல்பட்டினம் நெசவுத்தெரு - ஹமீதிய்யா பெண்கள் தைக்காவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஹாஜி எஸ்.ஏ.ஷாஹுல் ஹமீத் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். புகாரீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் உமர் ஷாஹுல் ஹமீத் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
ஹாஜி எஸ்.இப்னு சஊத் கூட்ட அறிமுகவுரையாற்றி, அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, கருத்து தெரிவித்த காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, இந்த ஒருவழிப்பாதை குறித்து ஆய்வு செய்யவும், முடிவெடுக்கவும் சாலை போக்குவரத்துத் துறைக்கே முழு அதிகாரம் உள்ளதென்றும்,
இதுவரை அதிகாரிகளால் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், பெரிய நெசவுத்தெருவே ஒருவழிப்பாதைக்கு உகந்ததாக உள்ளதாக அதிகாரிகள் வட்டத்தில் தெரிவிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
குழந்தைகள் விளையாட இடையூறு, மின் வினியோகக் கம்பிகள் சாலையில் உள்ளமை, எல்.கே. பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பின்மை போன்ற அச்சங்கள் நெசவு ஜமாஅத் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்த நகர்மன்றத் தலைவர், ஒருவேளை பெரிய நெசவுத் தெரு வழியாக ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டால் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அது தொடர்பானவர்களிடம் கேட்டறிந்த தகவலை இக்கூட்டத்தில் தெரிவித்தார்.
மின் வினியோகக் கம்பிகளை தேவையான அளவுக்கு உயரப்படுத்தி, பாதுகாப்பான வகையில் அமைப்பதாக காயல்பட்டினம் மின்வாரிய துணைப் பொறியாளர் தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும்,
பள்ளி மாணவர்கள் பாதுகாப்பைப் பொருத்த வரை, பள்ளி துவங்கும் நேரம், இடைவேளை நேரம், முடியும் நேரங்களில்தான் இப்பிரச்சினை ஏற்படும் என்றும், அதனை சரிசெய்ய, பள்ளியின் என்.எஸ்.எஸ். மாணவர்களைக் கொண்டு தினமும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதாக எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும்,
இப்பகுதியைச் சார்ந்த குழந்தைகள் விளையாடுவதற்கு நகராட்சிக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்து பேசி, தனியொரு பூங்கா அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை பாதுகாப்பான வகையில் செய்து தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா மேலும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினத்தில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்வதற்கு ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்துவதை தாங்கள் எதிர்ப்பவர்களல்லர் என்றும், அதே நேரத்தில் பெரிய நெசவுத் தெரு ஒருவழிப்பாதைக்கு உகந்ததல்ல என்றே தாங்கள் கருதுவதாகவும் ஷேக் தாவூத், நஸீர் அலீ, காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் கமருல் அஸ்மா ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.
காயல்பட்டினம் திருச்செந்தூர் சாலையில், கே.எம்.டி.மருத்துவமனைக்கு அருகிலுள்ள மின்மாற்றி (ட்ரான்ஸ்ஃபார்மர்) அருகிலுள்ள மழைநீர் வடிகால் ஓடை வழியாக சாலையமைத்து, மேல நெசவுத் தெரு, தட்டார் குடி தெரு, விசாலாட்சியம்மன் கோயில் தெரு வழியாக பேருந்து நிலையம் வரை ஒருவழிப்பாதைக்குரிய பாதையை நிர்ணயிக்கலாம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டு, அதற்காக ஆயத்தம் செய்யப்பட்ட வரைபடமும் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.
பின்னர் அந்த வரைபடத்தையும், கோரிக்கை மனுவையும் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதாவிடம், நெசவு ஜமாஅத் சார்பில் ஹாஜி எஸ்.ஏ.ஷாஹுல் ஹமீத் கையளித்தார்.
துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில், நெசவு ஜமாஅத்தைச் சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
முன்னதாக, 25.12.2011 அன்று மாலை 04.30 மணியளவில் நெசவு ஜமாஅத் சார்பில் ஹாஃபிழ் அமீர் (ஒலி) பள்ளியில் சாதாரண கூட்டம் நடைபெற்றுள்ளது. அக்கூட்ட நிகழ்வுகள் பின்வருமாறு அமைந்திருந்தன:-
செய்தி திருத்தப்பட்டது. (27.12.2011 - 22:11hrs) |