இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் - காயல்பட்டினத்தைச் சார்ந்த ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தமீமுன் அன்ஸாரீ ஆகியோர் 26.12.2011 அன்று மாலை 06.00 மணியளவில், காயல்பட்டினம் நெய்னார் தெருவிலுள்ள முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
ஈரமைப்புகளின் சமுதாயப் பணிகள், கடந்த கால செயல்பாடுகள், வருங்கால செயல்திட்டங்கள் குறித்து இச்சந்திப்பின்போது அவர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டனர்.
கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, புரிந்துணர்வு அடிப்படையில், சேலம் மாநகராட்சித் தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிட்ட தமுமுக வேட்பாளருக்கு முஸ்லிம் லீக் ஆதரவளிக்கவும், மதுரை மாநகராட்சித் தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிட்ட முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு தமுமுக ஆதரவளிக்கவும் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அளித்த ஆலோசனையின் பேரில் செயல்பட்டமைக்காக, இச்சந்திப்பின்போது இவ்விருவரும் மற்றவரின் அமைப்பிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
தமுமுக துணைப் பொதுச்செயலாளர் தமீமுன் அன்ஸாரீ தனது மாணவப் பருவத்தின்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவரணி செயலாளராக பொறுப்பேற்று செயலாற்றிய நிகழ்வுகளை முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் நினைவுகூர்ந்து பேசினார்.
சுமார் அரை மணி நேரம் நீடித்த இச்சந்திப்பில், இவ்விரு கட்சிகளின் நிர்வாகிகளும் மற்றவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, தேவை ஏற்படும்போது சமுதாய நலனுக்காக ஓரணியில் இணைந்து செயல்திட்டம் வகுத்து செயல்பட ஆர்வம் தெரிவித்தனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் எம்.எச்.அப்துல் வாஹித், மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், நகர துணைச் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், நகர பொறுப்பாளர் எம்.இசட்.சித்தீக் ஆகியோரும்,
தமுமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.ஏ.தைமிய்யா, மமக மாவட்ட பொருளாளர் ஹாரூன் ரஷீத், மக்கள் உரிமை ஆசிரியர் குழுவைச் சார்ந்த அத்தேஷ், தமுமுக நகர தலைவர் ஜாஹிர் ஹுஸைன், நகர துணைத்தலைவர் தமீமுல் அன்ஸாரீ ஆகியோர் இச்சந்திப்பின்போது உடனிருந்தனர். |