காயல்பட்டினம் நல அறக்கட்டளை (KWT) ஏற்பாட்டில் கடந்த டிசம்பர் மாதம் 20, 21 தேதிகளில் காயல்பட்டினம் துளிர் அரங்கம், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி ஆகிய இடங்களில் மனநல கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை பின்வருமாறு:-
கடந்த மே.29 அன்று நமதூர் தஃவா சென்டரில் பண்பாட்டு சீரழிவு தொடர்பான கருத்தரங்கு ஒன்று நடைபெற்றதை நாம் அறிவோம் அதில் நமதூர் மக்களிடையே வளர்ந்து வரும் பண்பாடு வீழ்ச்சிக்கான காரணங்கள், விளைவுகள், தீர்வுகள் அலசி ஆராயப்பட்டன.
குறிப்பாக மண விலக்கு, தோல்வியில் வந்து முடியும் மண வாழ்வு, நம் குடும்பங்களில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகள், நமதூர் இளைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் ஒழுக்க ரீதியான சவால்கள் போன்ற எண்ணற்ற பிரச்சனைகள் நமதூரை பிடித்தாட்டும் தலையாய பிரச்சனைகளாக கண்டெடுக்கப்பட்டது.
இந்த பிரச்னைக்கான சிறந்த பல தீர்வுகள் விவாதிக்கப்பட்டன.அவற்றில் முக்கியமானதாக குடும்ப உளவள மையம் ஒன்றை நமதூரில் ஏற்படுத்துவதை பற்றி அனைவரிடமும் ஒற்றைக் கருத்து காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தொடர் ஆலோசனைக்கூட்டம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக காயல்பட்டினம் நல அறக்கட்டளை ஏற்பாட்டில் நடைபெற்ற மனவள விழிப்புணர்வு உரைகள், உளவள ஆலோசனைகள் சென்னை குடும்ப நல மையத்தின் ஆலோசகர் மற்றும் சமூக சேவகியுமான ஏ.ஸ் குர்ஷித் பேகம் தலைமையில் கடந்த டிசம்பர் 20,21 (செவ்வாய்,புதன்) ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
"உள்ளத்தை வெல்வோம்"
முதலாவதாக அன்னை ஆய்ஷா சித்தீக்கா மகளிர் கல்லூரியில் மாணவிகளின் மத்தியில தன்னம்பிக்கை, வாழ்வில் இலட்சியம் குறித்து உள்ளத்தை வெல்வோம்! என்ற தலைப்பின் கீழ் உரையாற்றினார்கள்.
அன்றைய தினத்தை முழுமையாக வாழும்போதுதான் நாம் வாழ் நாளை முழுமையாக பெற முடியும் என்பதை எளிய எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கினார்.படிப்பு சார்ந்த சிக்கல்கள் குறித்த மாணவிகளின் வினாக்களுக்கு விளக்கமளித்தார்.
ஆண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது. 250 க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்துக்கொண்டனர்.
"நிம்மதி உங்கள் சாய்ஸ்"
அன்று (20-12-11) மாலை துளிர் கேளரங்கில் குடும்ப பெண்மணிகளின் மத்தியில் மண வாழ்வு, மண முறிவு தம்பதியரிடையே உள்ள மண வேறுபாடு குறித்து நிம்மதி உங்கள் சாய்ஸ்! என்ற தலைப்பின் கீழ் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவி முன்னிலை வகிக்க ஹாஜி எஸ்.ஒ.அபுல் ஹசன் கலாமி மற்றும் டி.ஏ.எஸ் அபூபக்கர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
அதனைத்தொடர்ந்து முன்னாள் நகர்மன்றத்தலைவி வஹீதா அவர்கள் பெண்களுக்கான சுய வேலைவாய்ப்புகள் குறித்து சிற்றுரையாற்றினார்.
அதை தொடர்ந்து இந்த உரையாடல்கள் தொடர்பான வினாவும்,விளக்கமும் நடைபெற்றது. இதை நகர்மன்றத் தலைவி ஐ.ஆபிதா அவர்கள் தொடங்கி வைத்தார்.
மண வாழ்வு பிரச்னை குறித்து ஏராளமான கேள்விகள் பெண்கள் தரப்பில் இருந்து வந்தன.நேரமின்மையால் அவற்றிற்கு இயன்ற அளவு விளக்கங்கள் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியை காயல்பட்டினம் நல அறக்கட்டளையின் இணை செயலாளர்களில் ஒருவரான சகோதரர் எம்.என் அஹ்மது சாஹிப் நெறிப்படுத்தினார். நன்றி உரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது. திரளான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
"சாதிப்போம் வாருங்கள்"
21-12-11 புதன் கிழமை காலையில் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி அரங்கில் கல்லூரி முதல்வர் திருமதி மெர்ஸி ஹென்றி M.A,Ph.D முன்னிலை வகிக்க மாணவிகளுக்கான ஆளுமை மேம்பாடு குறித்த உரை வீச்சு "சாதிப்போம் வாருங்கள்" என்ற தலைப்பின் கீழ் அமைந்தது.
மன நல ஆலோசகரை குறித்த அறிமுக உரையை காயல்பட்டினம் நல அறக்கட்டளையின் இணை செயலாலல்களில் ஒருவரான எம்.எம்.முஜாஹித் அலீ வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் 800க்கும் மேற்பட்ட மாணவியர் உற்சாகத்துடன் கலந்துக்கொண்டு, தமது பிரச்னைகளை மனந்திறந்து உரையாடினர்.
இச்செய்தியை வாசிக்கும் வாசகர்களுக்கு காயல்பட்டினம் நல அறக்கட்டளையின் சிறிய வேண்டுகோள்:
காயல்பட்டினம் நல அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்சியை நம்மவரின் முகம் பார்க்கும் கண்ணாடி என வர்ணித்தால் அது மிகை இல்லை.
இந்த உளவள நிகழ்ச்சியின் மூலம் நமதூரின் பிரச்னைகளை நேருக்கு நேராக கண்டு உணர முடிந்தது. நாம் புறத்தில் காணும் காயல் பதியில் அழகிய வேலைப்பாடுகளுடைய உயரமான வீடுகளும், நேர்த்தியாக உடை அணிந்த மக்களையும் கண்னுறுகிறோம்.
ஆனால் காயல்பட்டினத்தின் அகம் நைந்து கொண்டிருக்கிறது என்பதை மனம் திறந்து சொல்ல வேண்டி உள்ளது.
ஏற்றத்தாழ்வு பெரும்பான்மையான இல்லங்களிலும்,உள்ளங்களிலும் குடும்ப சிக்கல்கள் உளவியல் சிக்கல் புகை மூட்டம் போட்டு மண்டி உள்ளது.
இதனை இப்படியே தொடர அனுமதித்தால் நாளடைவில் நமதூரில் வசிக்கும் அணைத்து வயது தரப்பினரும் பல வித உள நெருக்கடிகளுக்கு இரையாகி வாழ்வை பகுதியாகவும்,முழுமையாகவும் இழக்கும் ஆபத்து உள்ளது.
நாங்கள் இக்கருத்தரங்குகள், உரை வீச்சுகளை ஏற்பாடு செய்ததின் நோக்கமே நம் ஊரின் குடும்ப உள மேம்பாட்டு மையம் (FAMILY COUSELING CENTRE ) ஒன்றை துவங்குவதற்காகத்தான் என்பதை வாசகர்களின் மேலான கவனத்திற்கு அறியப்படுத்துகிறோம்.
இந்த விழிப்புணர்வு கூட்டங்களை எங்களிடம் உள்ள மிக குறைந்த மனித வளம், பொருள் வளத்தை வைத்து பல சிரமங்களுக்கு நடுவே தான் நடத்தி உள்ளோம்.இனிமேலும் இந்த முயற்சி தொடங்க வேண்டுமெனில் பல கரங்கள் இணைய வேண்டும்.
தனி மரம் தோப்பாகாது.தேரை நகர்த்தி உள்ளோம் இனி அதை அழகுற வலம் வர செய்வது உங்களின்,எங்களின்,நமது அனைவரின் பொறுப்பாகும்.
எனவே இந்த முயற்சிகள் கட்டாயம் தொடர்ந்து நடைப்பெற்று மனநல நிறுவனங்கள் நமதூரில் உருவாக வேண்டும் என விரும்பும் நன்நெஞ்சங்கள் எங்களை அணுகுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
எங்களை அணுக வேண்டிய மின்னஞ்சல் முகவரி கீழ்வருமாறு:-
kayalpattinamwelfaretrust@gmail.com
இவ்வாறு, காயல்பட்டினம் நல அறக்கட்டளையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஃபிர்தவ்ஸ்,
செய்தித் தொடர்பாளர்,
காயல்பட்டினம். |