அண்மையில் பெய்த பருவமழை காரணமாக காயல்பட்டினத்தில் குண்டும், குழியுமாகக் காணப்படும் கே.டி.எம்.தெரு, பிரதான வீதி உள்ளிட்ட பேருந்து போக்குவரத்துள்ள சாலைகளை போர்க்கால அடிப்படையில் சரிசெய்து தரக்கோரி, தூத்துக்குடியிலுள்ள நெடுச்சாலைத்துறை கோட்டப்பொறியாளரை, 09.01.2012 அன்று மாலையில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா நேரில் சந்தித்து கோரியுள்ளார்.
கோரிக்கை வாசகம் பின்வருமாறு:-
காயல்பட்டினம் நெடுஞ்சாலைத்துறைக்கு பாத்தியப்பட்ட மெயின்ரோடு, கே.டி.எம். தெரு, திருச்செந்தூர் ரோடு, மழை நீரால் பாதிக்கப்பட்டு, குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்க்ப்படுவதுடன், வாகனப்போக்குவரத்து மிகுந்த சிரமத்துடன் இயங்குகிறது. பல நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுவதுடன் குறிப்பிட்ட நேரங்களில் பயணம் செய்ய முடியாமல் பள்ளி மாணவர்கள், நோயாளிகள் தாய்மார்கள் கஷ்டத்தில் உள்ளார்கள்.
நெடுஞ்சாலைத்துறைக்கு பாத்தியப்பட்ட சாலைகள் மழை நீரால் பழுதடைந்திருப்பதை சரிசெய்யும் பொருட்டு, 12.12.2011ல் வட்டார போக்குவரத்து அலுவலர் - திருச்செந்தூர், உதவி பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை திருச்செந்தூர் ஆகியோருக்கு மனு கொடுத்துள்ளேன்.
இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்காததினால், நெடுஞ்சாலைத்துறை சாலை மேலும் பழுதடைந்து போக்குவரத்து பெரிதும் இடையூறு ஏற்படுகிறது.
ஆகவே, தாங்கள் நேரில் பார்வையிட்டு, போர்க்கால அடிப்படையில் பழுதடைந்துள்ள சாலையினை சீர்த்ருத்தம் செய்து தரும்படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
இவ்வாறு, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளருக்கு, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா முன்வைத்த கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.
இக்கோரிக்கையைப் பரிசீலித்த கோட்டப்பொறியாளர், இது விஷயத்தில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அத்துறையைச் சார்ந்த அதிகாரிகளுக்கு அவ்விடத்திலேயே உத்தரவிட்டதாக, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தெரிவித்துள்ளார்.
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.லுக்மான், வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா மற்றும் அதிமுக மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவர் எம்.ஜே.செய்யித் இப்றாஹீம் ஆகியோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர். |