காயல்பட்டினத்திலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்திலிருந்து, காயல்பட்டினத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான குடிநீர் பிரதான வினியோகக் குழாய், ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்திலிருந்து பயணித்து, காயல்பட்டினம் புறவழிச்சாலை வழியாக ஊருக்குள் வந்தடைகிறது.
ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்திலிருந்து காயல்பட்டினத்திற்கு அனுப்பப்படும் குடிநீர் வினியோகத்தை அளக்க அங்கு அளவீட்டுக் கருவி உள்ளது. ஆனால், அத்தண்ணீர் முழுமையாக காயல்பட்டினத்தை வந்தடைவதை அளக்க, காயல்பட்டினத்தில் அளவீட்டுக் கருவி இல்லாமையைக் கருத்திற்கொண்டு, கருவியமைக்க கடந்த நகராட்சியின்போது, காயல்பட்டினம் புறவழிச்சாலையில், சாலை துவக்கத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் - 8க்கு 8 என்ற அடி கணக்கில் அறையொன்று கட்டப்பட்டது.
அந்த அறை கட்டப்பட்டுள்ள இடம் காயல்பட்டினம் எல்.எஃப்.வீதியில் வசிக்கும் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா குடும்பத்தாருக்குச் சொந்தமானது என, கைவசமுள்ள ஆவணங்களின் அடிப்படையில் அவரது குடும்பத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
நகர்மக்கள் நலன் கருதி, அவ்வழக்கை திரும்பப்பெற்று, அளவீட்டுக் கருவியை நிறுவுவதற்காக கட்டப்பட்டுள்ள அறை அமைந்துள்ள இடத்தை மட்டும் நகராட்சிக்கு விட்டுத் தருமாறும், அது தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெறுமாறும், கடந்த 05.01.2012 அன்று, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தலைமையிலான நகராட்சி உறுப்பினர்களடங்கிய குழு, ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமாவை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தது. தன் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவை அறிவிப்பதாக அப்போது அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து ஜமால் மாமா காயல்பட்டணம்.காம் இடம் கருத்து தெரிவிக்கையில், கடந்த நகராட்சி பொறுப்பிலிருந்த கடைசி ஆண்டில், காயல்பட்டினம் புறவழிச்சாலையிலுள்ள தமக்குச் சொந்தமான நிலத்தில், நகராட்சியின் சார்பில் திடீரென கட்டிடம் ஒன்று கட்டப்படுவதாக அறிந்து, அவ்விடம் தங்களுக்குச் சொந்தமானது என்பதற்கான விபரங்களை உள்ளடக்கிய ஆவணங்களுடன் தன் குடும்பத்தின் சார்பில் நேரில் சென்று, அங்கு கட்டிடம் எழுப்பப்படுவது குறித்து அப்போதைய நகராட்சி நிர்வாகத்திடம் விளக்கம் கோரப்பட்டதாகவும், முறையான விளக்கம் அளிக்கப்படாமல், கட்டிடப்பணி தொடர்ந்து நடைபெற்ற காரணத்தால், தங்களது உரிமையை நிலைநாட்ட நீதிமன்றத்தை நாடியதாகவும் தெரிவித்தார்.
எனினும், மக்கள் நலன் கருதி தற்போதைய தலைவர் ஐ.ஆபிதா தலைமையில் உறுப்பினர்கள் தமதில்லம் தேடி வந்து வேண்டுகோள் விடுத்த பிறகும் தாங்கள் பிடிவாதமாக இருக்கப் போவதில்லை என்றும், அவ்விடத்தை ஊருக்காக தருவதாகவும், தொடர்ந்த வழக்கை திரும்பப் பெறுவதாகவும், சட்ட வல்லுனர்களின் வழிகாட்டல் அடிப்படையில் இப்பிரச்சினை சுமுகமாக முடிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
பல்வேறு நற்காரியங்களுக்காக பல தான-தர்மங்களைச் செய்த தமது முன்னோர்களைப் பின்பற்றி தாமும் இயன்றளவு செய்யவே ஆவலுறுவதாகவும், எதையும் முறைப்படி செய்தால் அது எல்லோருக்கும் நன்மையாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
புதிதாக கட்டப்பட்ட குடிநீர் வினியோக அளவீட்டுக் கருவியறையை ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா சுட்டிக்காட்டி, தன் குடும்பத்திற்குப் பாத்தியப்பட்ட இடங்களை விளக்கும் காட்சி:-
|