காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் என்ற தஃவா சென்டர் சார்பில் நடத்தப்பட்டு வரும் உளத்தூய்மைக்கான தர்பிய்யா பயிற்சி முகாமை நடத்துவதற்காக, பல்சமய ஆய்வாளர் டாக்டர் ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆய்வு நிறுவனம் (IRF) நடத்தும், சர்வதேச இஸ்லாமிய பாடசாலைகளின் சென்னை பள்ளி தலைமையாசிரியர் இம்தியாஸ் பஷீர் அஹ்மத் வருகை தருகிறார்.
இதுகுறித்து, தஃவா சென்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நமது தஃவா சென்டா மூலம் ஆறு மாத காலஅளவு கொண்ட தஃவா பயிற்சி தொடர் வகுப்பு மற்றும் தர்பிய்யா வகுப்புகள் இறையருளால் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 3 பயிற்சி வகுப்புகளை நம் சென்டர் நடத்தியுள்ளது, அல்ஹம்துலில்லாஹ். இப்பயிற்சி வகுப்பில் மாதந்தோறும் வெவ்வேறு தலைப்புகளில் அத்தலைப்புகளுக்குத் தொடர்புடைய அறிஞர்களை வரவழைத்து, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
முதல் பயிற்சி வகுப்பு 16.10.2011 அன்று, தஃவா சென்டர் மேலாளரும், இஸ்லாமிய அழைப்பாளருமான சகோதரர் டி.வி.எஸ்.ஜக்கரிய்யா அவர்களால், “தஃவா ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் நடத்தப்பட்டது.
இரண்டாவது பயிற்சி வகுப்பு, 27.11.2011 அன்று, சென்னையைச் சார்ந்த கிறிஸ்துவ பெந்தேகோஸ்த் சபையின் முன்னாள் பாஸ்டரும், பின்னர் இஸ்லாமைத் தழுவியருமான சகோதரர் விஜயன் என்ற உமர் ஃபாரூக் அவர்களால், “கிறிஸ்துவர்களிடம் இஸ்லாமை அறிமுகப்படுத்துவதெப்படி? (பாகம் - 01)” எனும் தலைப்பில் நடத்தப்பட்டது.
மூன்றாவது பயிற்சி வகுப்பு, 18.12.2011 அன்று, அந்நஜாத் மாத இதழின் ஆசிரியர் சகோதரர் அபூ அப்தில்லாஹ் அவர்களால், “நாத்திக நண்பர்களே! நாசத்தைத் தவிர்ப்பீர்!” எனும் தலைப்பில் நடத்தப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தர்பிய்யா 4ஆவது பயிற்சி வகுப்பு, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 22.01.2012 அன்று நடைபெறவிருக்கிறது.
இவ்வகுப்பில், மும்பை மாநகரில் இஸ்லாமிய ஆய்வு நிறுவனம் (IRF) எனும் பெயரில் பல்சமய மக்களுக்கு இஸ்லாமிய அறிமுகப்பணியை செய்து வரும் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் நேரடி நிர்வாகத்தின் கீழ் பெருநகரங்களில் நடத்தப்பட்டு வரும் சர்வதேச இஸ்லாமிய பாடசாலைகளின் சென்னை பாடசாலை முதல்வரான சகோதரர் இம்தியாஸ் பஷீர் அஹ்மத் கலந்துகொண்டு, “கிறிஸ்துர்களிடம் இஸ்லாமை அறிமுகப்படுத்துவதெப்படி? (பாகம் - 02)” எனும் தலைப்பில் வகுப்பு நடத்தவுள்ளார்.
இவர், டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களிடம் 2001, 2010 ஆண்டுகளில் நேரடி மாணவராகப் பயின்று பயிற்சி பெற்றவர். அவரது IRF நிறுவனத்தில் 2002ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை செயல் அலுவலக ஆராய்ச்சியாளராகப் பணியாற்றியுள்ளார்.
குறிப்பு: இதுவரை இந்த தர்பிய்யா பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டவர்கள் மட்டுமே இவ்வகுப்பிலும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு, சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |