காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் அண்மையில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. அதனையடுத்து, அத்தெருவிலுள்ள சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மற்றும் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளருகிலுள்ள பகுதியில் முன்னர் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடைகள் காணாமற்போனது.
பள்ளி மாணவ-மாணவியர் நடமாட்டத்தையும், அப்பகுதியின் அதிகப்படியான வாகனப் போக்குவரத்தையும் கருத்திற்கொண்டு, மீண்டும் அவ்விடத்தில் வேகத்தடை அமைத்துத் தருமாறு அப்பள்ளிகள் சார்பிலும், அப்பகுதி மக்கள் சார்பிலும் நகராட்சியிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. புதிய நகராட்சி பொறுப்பேற்ற பின்னர் நடைபெற மாதாந்திர முதல் கூட்டத்தின்போது, அப்பகுதி சாலை வழியே சென்ற சென்ட்ரல் மெட்ரிக் பள்ளி மாணவர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் மோத நேர்ந்து - சிறு காயத்துடன் தப்பியதை அச்சிறுவனுடன் அப்பள்ளி தலைமையாசிரியை செண்பகவல்லி நேரிலேயே வந்து - கூட்டம் நடக்கையில் நகர்மன்றத்தில் முறையிட்டார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் நகராட்சி சார்பில் மூன்று வேகத்தடைகள் அமைக்கப்பட்டு, அவற்றை அடையாளப்படுத்துவதற்காக வெண்ணிறத்தில் பட்டைக்கோடுகள் வரையப்பட்டுள்ளது. இதனால் வாகனப் போக்குவரத்துகள் அப்பகுதியில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை, காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் காஜா முகைதீன், சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை செண்பகவல்லி ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
காலதாமதமானாலும், தமது கோரிக்கையை ஏற்று, மாணவர் நலன் கருதி வேகத்தடைகள் அமைத்தமைக்காக நகராட்சியை அவர்கள் பாராட்டியுள்ளனர். எனினும், அந்த வேகத்தடைகளில் முழுமையாக வெண்ணிறம் பூசி - இடையிடையே கருப்பு நிற பட்டைக் கோடுகளை வரைந்தோ அல்லது அதை விட சிறந்த முறையில் – நள்ளிரவில் வாகனங்களின் ஒளியைப் பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்களை ஒட்டியோ வேகத்தடையை இன்னும் பாதுகாப்பான முறையில் அமைத்தால், அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் அது உதவியாக அமையும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
[செய்தி திருத்தப்பட்டது @ 8:00pm/20.1.2012] |