காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு பொதுநல ஆர்வலர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா நேற்று (22.01.2012) மதியம் விருந்தளித்து உபசரித்தார். குடிநீர் வினியோகத்தை அளக்கும் மீட்டர் அறை தொடர்பான வழக்கைத் திரும்பப் பெற இசைவு தெரிவித்தமைக்காக அவருக்கு நகர்மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் மற்றும் உறுப்பினர்களுக்கு, நகரின் பொதுநல ஆர்வலரான ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா நேற்று மதியம் 02.00 மணியளவில் விருந்து வழங்கி உபசரித்தார்.
பின்னர் அனைவரையும் அவர் வாழ்த்திப் பேசினார். நகர்மன்றத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களிடையே நல்ல புரிந்துணர்வு எப்போதும் நீடித்து நிலைத்திருக்க வேண்டுமெனவும், அதனை வலியுறுத்தும் வகையில் ஒரு சிறு முயற்சியாகவே இந்த விருந்துக்கு தான் அழைப்பு விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
காயல்பட்டினம் நகர்மன்றத்தில் அரசியல் சார்பின்றி அனைவருமே தனித்துப் போட்டியிட்டு வென்றிருப்பதால், நகருக்குச் செய்ய வேண்டிய நல்லவற்றை யாரிடமும் தயக்கமின்றி கேட்டுப் பெற்றிட இயலும் என்றும், தலைவர் - துணைத்தலைவர் - உறுப்பினர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து செயலாற்றினால் நகருக்கு நல்ல பல சேவைகளை திறம்பட செய்ய இயலும் என்று அவர் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.
பின்னர், அண்மையில் ஆத்தூரிலிருந்து காயல்பட்டினத்திற்கு குடிநீர் வினியோகிக்கும் நீரேற்று நிலையம் சென்று வந்தபோது, தாங்கள் யாவரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க, குடிநீர் வினியோகத்தை அளவிடுவதற்காக அமைக்கப்படவுள்ள மீட்டர் - அளவீட்டுக் கருவிக்காக காயல்பட்டினம் புறவழிச்சாலையில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெற்று நகருக்கு உதவுமாறு கோரியதை ஏற்று, அவ்வழக்கை திரும்பப் பெறுவதாக அறிவித்தமைக்கு மன்றத்தின் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதாகவும், இப்படியொரு நிகழ்வு நடைபெற முன்முயற்சி செய்த நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீனுக்கும் அனைவர் சார்பிலும் தான் நன்றி தெரிவிப்பதாகவும் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தெரிவித்துவிட்டு, நன்றி தெரிவிக்கும் அக்கடிதத்தை ஜமால் மாமாவிடம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் ஜமால் மாமாவுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, ஏ.லுக்மான், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, ஏ.கே.முஹம்மத் முகைதீன் என்ற மம்மி ஹாஜியார், இ.எம்.சாமி ஆகிய நகர்மன்ற உறுப்பினர்களும், பொதுநல ஆர்வலர்களான ஹாஜி ஹல்லாஜி, ஹாஜி எல்.எம்.இ.கைலானீ ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர்.
மதியம் 03.45 மணியளவில் அனைவரும் நன்றி தெரிவித்து தமதில்லம் சென்றனர். இவ்விருந்துபசரிப்பில், நகர்மன்ற உறுப்பினர்கள் வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, சாரா உம்மாள், எம்.ஜஹாங்கீர், ஜெ.அந்தோணி, எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், ஏ.ஹைரிய்யா, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், ஆர்.பாக்கியஷீலா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதர உறுப்பினர்களான ஆர்.ரெங்கநாதன் என்ற சுகு, கே.ஜமால், எஸ்.எம்.சாமு ஷிஹாபுத்தீன், அபூபக்கர் அஜ்வாத் ஆகியோர் தாம் வெளியூரிலிருப்பதால் விருந்தில் கலந்துகொள்ள இயலவில்லை என்றும், இந்நிகழ்வுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் தெரிவித்திருந்தனர். |