காயல்பட்டினம் வழியே கிழக்கு கடற்கரை சாலை அமையப்பெறவும், இரண்டாவது பைப் லைன் குடிநீர்த் திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்தவும் கோரி, 19.01.2012 அன்று மாலையில் காயல்பட்டினத்தில் நடைபெற்ற நகர அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனிடம், காயல்பட்டினம் காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பில் அதன் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் மனு அளித்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
காயல்பட்டணம் வரலாற்று சிறப்புமிக்க ஊராகவும், தூத்துக்குடி மாவட்டத்தில்
கோவில்பட்டி நகராட்சிக்கு அடுத்தபடியாக உள்ள ஒரே நகராட்சியாகவும்
திகழ்கிறது.இந்த ஊரை சார்ந்தவர்கள் உலகின் பல பகுதிகளிலும் வேலை
நிமித்தமாகவும், தொழில் நிமித்தமாகவும் இருந்து வருகிறார்கள்.
நமது மாநிலத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை அமைக்கும் பணி அநேகமான
இடங்களில் முடிந்து போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது.தூத்துக்குடி
முதல் கன்னியாகுமரி வரையுள்ள கிழக்கு கடற்கரைச் சாலைப்பணிக்கான முதல்
கட்ட பணி நடந்து வருவதாக அறிகிறோம்.முதலில் அந்தச் சாலை காயல்பட்டினம்
வழியாகத் தான் வருவதாக இருந்தது.ஆனால் இப்பொழுது அந்த சாலை கடற்கரையில்
இருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தூரமுள்ள
அம்மன்புரம், அடைக்கலாபுரம் வழியாக மாற்றப் போவதாக அறிகிறோம்.
இப்படி வரும்போது கிழக்கு கடற்கரைச் சாலை என்ற பெயருக்கும் அந்த
சாலைக்கும் சம்பந்தமே இருக்காது,மட்டுமல்லாமல் நகராட்சியான காயல்பட்டினம்
போக்குவரத்தால் புறக்கணிக்கப்பட்டு ஒரு தீவு போல் ஆகிவிடும்.மேலும்
அந்தச் சாலை தூத்துக்குடியில் இருந்து
பழையகாயல்,புன்னக்காயல்,காயல்பட்டினம் வழியாக திருச்செந்தூர் வரை கொண்டு
வரும்போது சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் வரை குறைகிறது.அதனால் நேரமும்
மிச்சமாகிறது.ஏற்கனவே இது சம்பந்தமாக எமதூரின் அனைத்து ஜமாஅத்துக்கள்
மற்றும் பொது அமைப்புகளின் கூட்டமைப்பான காயல் பட்டணம் முஸ்லிம் ஐக்கியப்
பேரவை சார்பாகவும், நகர்மன்றம் சார்பாகவும் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் கடற்கரைச் சாலை என்பது அவசர காலகட்டங்களிலும், அபகட
காலகட்டங்களிலும் ராணுவமும், அரசு எந்திரங்களும்
பயன்படுத்துவதற்க்குமேயாகும்.
ஆதலால் இந்த கிழக்கு கடற்கரைச் சாலையை
காயல்பட்டினம் வழியாக கொண்டுவர தாங்கள் ஆவணம் செய்ய வேண்டும் என
எங்களுடைய காக்கும்கரங்கள் நற்பணி மன்றம் சார்பாக அன்புடன் கேட்டுக்
கொள்கிறோம்.
மேலும் எமது நகரில் குடிநீர்ப் பிரச்சனை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே
போகிறது.ஐந்து நாளைக்கு ஒரு முறையும் ,ஒரு வாரத்துக்கு ஒரு முறையும் ஒரு
மணி நேரம் மட்டும் வரும் குடிநீர் பிரச்சனை மக்களை மிகவும் பாதிப்படைய
செய்துள்ளது.ஆகவே இது விஷயத்திலும் தாங்கள் மேலான கவனம் செலுத்தி ஏற்கனவே
அரசால் தீர்மானிக்கப்பட்ட இரண்டாம் பைப்லைன் திட்டத்தையும் உடனே
நிறைவேற்ற ஆவணம் செய்யுமாறும் காக்கும் கரங்கள் நற்பணி சார்பாக மிக்க
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |