வளரும் நாடுகளுக்குத் தேவை மின் சக்தி தான். posted byM.N.L.முஹம்மது ரஃபீக். ஹிஜாஸ்மைந்தன். (காயல்பட்டணம்)[26 February 2012] IP: 180.*.*.* India | Comment Reference Number: 17199
வளர்ந்து வரும் நாடுகளுக்கு முதுகெலும்பு போன்றது மின்சாரம் எனும் மகா சக்திதான்.அதுவே வளர்ச்சிக்கு மிக முக்கியமான மூலதனமும் கூட! எல்லாமே எந்திரமயமாகி விட்ட நிலையில் மின்சாரத்தின் தேவையும்,அவசியமும்,நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.தொழில் மேம்பாட்டிற்குத் துணை செய்யும் மின்சாரம் தொடர்ந்து கிடைக்காத பட்சத்தில் அதன் வளர்ச்சியை அது வெகுவாக பாதித்து உற்பத்தியை முடக்கி முன்னேற்றப் பாதையின் முன் கதவையே அடைத்து விடும் அபாயமும் உள்ளது.
இந்த மகா சக்தி மனித வாழ்வோடு பின்னிபினைந்து ஒன்றிப்போன காரணத்தால் மின்சாரம் இல்லாமல் மனித சமுதாயம் வாழ முடியாது எனும் அளவிற்கு வாழ்வியலில் ஊடுருவிப் பாய்ந்துள்ளதை எவராலும் மறுக்க முடியாது.அது தடை படும் போது ஏற்படும் தவிப்பும்,தத்தளிப்பும்,தவிர்க்க இயலாத ஒன்றாகிப் போவதும் உண்மையே!
வேகமாகச் சுழலும் இவ்வுலகம் காலத்தின் அருமையைக் கருதி தமது தேவைகளையும்,துரித உணவுகளையும்,அதை சேமித்துக் கெடாத வண்ணம் பாதுகாப்பதிலேயும் கவணம் செலுத்தியதன் விளைவு தான் இன்று, மிக்ஸி,கிரண்டர், ஃபிரிட்ஜ்ரேட்டர் ஓவன்,,ஃபேன்,ஏஸி, வாஷிங் மெஷின்,அயன்பாக்ஸ், டி.வி, என மின்சாரத்தால் இயங்கும் இவைகள். ஆம்! இவைகள் இல்லாத வீடுகளே இல்லை எனும் அளவிற்கு அன்றாட வாழ்வின் அடிப்படைத் தேவை என்றாகி விட்டது.
சரித்திரத்தில் இல்லாத அளவிற்கு இன்று, தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் நகரங்கள், பரீட்சை நடந்து வரும் நிலையில் வீட்டில் பாடம் படிக்க முடியாமல் பரிதவிக்கும் மாணவர்கள்,பல் பொருள் விற்பனைக்கூடங்கள்,உணவு சமைக்கப் படாதபாடுபடும் அடுப்படியின் அவலங்கள்,ஒளியிழந்த வீதிகள், இரவு பதினொன்று மணியாகியும் பாலகர்கள் உறங்காமல் கொட்டக் கொட்ட விழித்திருந்த போது,இன்னும் தூங்க வில்லையா? எனக்கேட்ட போது, வியர்க்கும் ,ஃபேன் ஓடாது,கரண்ட் வரட்டும்,எனும் பதிலைக் கேட்ட போது,காலையில் நேரத்தோடு எழுந்து பள்ளிக்குச் செல்லும்,மழலையர்களின் வேதனை,விசும்பல்தனை யாரிடத்தில் போய்ச் சொல்லுவது? அதிகாலை எனப் பல முறை பவர்கட்டாகி விடுவதால் பாலகரும்,பெரியவர்களும் தூக்கமின்மை காரணத்தாலும்,கொசுக்கடியின் வேதனையாலும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்ற கொடுமையை என்னவென்று சொல்ல?
நிலநடுக்கம் வருவதைக்கூட முற்கூட்டியே உணர்ந்தறிந்து உலகிற்கு உணர்த்தும் உபகரணங்களைக் கண்டுபிடித்த நமக்கு கரண்ட் எப்ப கட்டாகும்? எப்ப வரும்?ன்னு கண்டுபிடிக்கத் தெரியாதது காலத்தின் கோலமேயன்றி வேறெதைச் சொல்வது? கண்ணாபிண்ணான்னு கண்டபடி காலம்,நேரம், தெரியாமெ கரண்ட் கட்டாகி விடுவதால் பொது மக்கள் படு அவஸ்த்தையைச் சொல்லி மாளாது!
வரலாறு காணாத இம் மின்பற்றாக்குறைக்கு என்ன காரணம்? இதற்கு யார் பொறுப்பு? செய்ய வேண்டிய மாற்று வழிகள் தான் என்ன?அரசாங்கம் அதிரடியாகச் செய்ய வேண்டிய திட்டங்கள் என்ன?மற்ற மாநிலங்களில் இது போன்றக் கொடுமைகள் நிகழ்கின்றனவா? ஒளிரும் இந்தியாவின் மறு உருவம் இது தானா? அப்துல் கலாமின் வல்லரசுக் கனவு இப்படி இருளில் மூழ்கித்தான் இருக்குமா? இப்படி எண்ணற்றக் கேள்விகள் எரிச்சலோடு எழுகின்றது,மின்தடையில் நாம் வியர்த்துப் புழுங்கும்போது.
கோடிக்கணக்கில் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து கும்மாளம் போடும் அரசியல்வாதிகள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போதே அசுரவேகத்தில் சொத்துக்களை குவித்து அள்ளி முடிவதால்தான் அடிமட்டத்தில் வாழும் பொதுமக்களுக்கு அல்லலும்,தொல்லைகளும்!
புரட்சிக்கவிஞன் பாரதி இன்று உயிரோடு இருந்திருந்தால், “என்று தனியும் இந்த மின் வெட்டு தா(க்)கம்”, எனப் பாடியிருப்பானோ? என்னவோ?
கடைசியில் மாட்டிக்கிட்டு முழிக்கிறது மக்கள் தானே...?
M.N.L.முஹம்மது ரஃபீக். ராபியா மணாளன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross